தெய்வீக அருள் பெற்ற மகாகவி! (Post No13,996)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.996

Date uploaded in London – 11 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பாரதி தினம் : 11 டிசம்பர்

தோற்றம் : 11-12-1882

மறைவு : 11-9-1921

தெய்வீக அருள் பெற்ற மகாகவி!

ச.நாகராஜன்

பராசக்தியையே வாழ்நாள் முழுவதும் நாள்தோறும் தொழுது வாழ்ந்த மகாகவி பாரதியாருக்கு அவளது அருள் பரிபூரணமாக இருந்தது. அவர் ஒரு தெய்வீகக் கவிஞர் என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் ஏராளம் உண்டு. எடுத்துக்காட்டாக இரு சம்பவங்களை இங்கு பார்ப்போம்.

1

புதுவையில் ஒரு தீபாவளி தினத்தன்று நடந்த சம்பவத்தை பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி ‘என் தந்தை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

தீபாவளிக்கு முதல் நாள் ஜவுளிக்கடை வைத்திருந்த ஒரு நண்பர் பாரதியாருக்கு வழக்கம் போல், வேஷ்டி, சகுந்தலா பாரதிக்கு பாவாடை, சட்டை பாரதியாரின் மனைவிக்கு புடவை ஆகியவற்றை இனாமாக அனுப்பி வைத்தார். அன்பில் சிறந்த சீடர்கள்  பட்டாஸ், மத்தாப்பு உள்ளிட்டவற்றை அளவுக்கு அதிகமாகவே தந்தனர். பூ, , வெற்றிலை, பாக்கு, பழங்கள் வேறு வந்து சேர்ந்தன.

ஆனால் பாரதியார் மட்டும் கவலையுடன் இரவில் விழித்திருந்தார்.

நடுநிசி.  இரு நண்பர்கள் வீட்டுக் கதவைத் தட்டினர். பாரதியார் சென்று கதவைத் திறந்தார்.

அந்த அன்பர்களில் ஒருவர் ஒரணாவும் இரண்டனாவும் உள்ள பணச்சுருளை பாரதியாரின் காலில் வைத்து வணங்கினார். பாரதியார் வியப்புடன், “நான் பணம் வேண்டுமென்று யாரிடமும் சொல்லவில்லையே” என்றார்.

வந்தவர்கள் பணக்காரர்கள் அல்ல. சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த துணி நெய்யும் தொழிலாளிகள்.

அதற்கு வந்தவர்களில் ஒருவர் பதிலளித்தார்.

அவர் தூங்க முனைந்த போது அவரது கனவில் காளி தோன்றி, ‘என் பகதன் பாரதி நாளை காலையில் தன்னைக் காண வரும் ஏவலர், தொழிலாளிகள், நண்பர்களுக்குப் பரிசளிக்க கையில் காசில்லாமல் நொந்து மனம் வருந்துகிறான்.  உடனெ உன் கையிலுள்ள பணத்தைச் சில்லரைகளாக மாற்றி அவனிடம் சென்று கொடு” என்று சொன்னாள். அவர் உடனே எழுந்து பணத்தைச் சில்லரையாக மாற்றி நண்பர் ஒருவரையும் கூட அழைத்து வந்ததாகக் கூறினார்.

பராசக்தி அருளினால் அந்த தீபாவளி கோலாகலமாக திருப்தியுடன் கொண்டாடப்பட்டது.

2

இன்னொரு நிகழ்ச்சியையும் சகுந்தலா பாரதி குறிப்பிடுகிறார்.

பொன்னுமுருகேசம் பிள்ளை என்பவர் புதுவையில் பாரதியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர்.

அவரது முத்த மகன் ராஜாபாதர் என்பவர் மேல் படிப்புக்காக பிரான்சுக்குச் சென்றார். படிப்பு முடிக்கும் தருவாயில் யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தில் அவர் ஈடுபட வேண்டியதாயிற்று. முருகேசம் பிள்ளை மனம் நொந்தார். ஒரு வழியாக விடுமுறையைப் பெற்ற ராஜாபாதர் நோய்வாய்ப்பட்டிருந்த தன் தந்தையைக் காணக் கிளம்பினார். ஆவலுடன் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த முருகேசம் பிள்ளைக்கு ராஜாபாதர் வந்த கப்பல் உடைந்து விட்டதாகச் செய்தி வந்தது.

துடிதுடித்துப் போனார் முருகேசம் பிள்ளை.

எல்லோரும், ‘உங்கள் பிள்ளைக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஆறுதல் கூறினார்கள். ஆனால் அவரோ இதை பாரதி சொன்னால் தான் நான் நம்புவேன் என்று கூறினார்.

பாரதியாருக்கு தர்மசங்கடமாகி விட்டது.

அவர் முருகேசம் பிள்ளையிடம், “நம் ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேராது. ஆதற்கு நான் ஜவாப்தாரி” என்று கூறி அவருக்கு அறுதல் அளித்தார்.

ஆனாலும் நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட முருகேசம் பிள்ளை சில நாட்களில் உயிர் துறந்தார்.

ஆனால் பாரதியார் வாக்கு பொய்க்கவில்லை. கப்பல் உடைந்த போதிலும் அதிலிருந்து தப்பித்துச் சில நாட்களில் ராஜாபாதர் புதுவைக்கு உயிருடன் வந்தார். அவரது தாயார் மனம் மிக மகிழ்ந்தார்.

நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு என்பது பாரதியாரின் வாக்கு.

அது பொய்க்கவில்லை.

குவளைக் கண்ணன் என்னும் குவளை கிருஷ்ணமாச்சாரியார் பாரதியாரின் சிறந்த சீடர்களுள் ஒருவர்.

அவரிடம் ஒருமுறை பாரதியார், “நாம் இன்னும் நானூறு வருடங்களுக்குப் பின்னாலே தோன்ற வேண்டியவர்கள். முன்னாலேயே தோன்றி விட்டோம். என்ன செய்வது?” என்று கூறினார்.

ஒரு சமயம் குவளைக் கண்ணன், “மகான்கள் தீர்க்காயுள் இல்லாமல் போய்விடுகிறார்களே ஏன்?” என்று பாரதியாரைக் கேட்ட போது பாரதியார் கூறினார்: “மகான்கள் பூலோகத்திற்கு தேவதூதர்கள். ஜனோபகாரார்த்தமாக அவர்கள் உதிக்கிறார்கள். பூலோகத்தில் அவர்கள் உதித்த காரியம் ஆனதும் இவ்வுலகில்  நிற்கமாட்டார்கள். மறைந்து விடுவார்கள்” என்றார். (ஆதாரம் : பாரதி புதையல் மூன்றாம் பாகம் – பக்கம் – 229)

அவர் வாக்கு அவர் விஷயத்திலும் பொய்க்கவில்லை.

பாரதியாரைப் போற்றுவோம்.!

அவர் புகழ் பரப்புவோம்.!!

**

Leave a comment

Leave a comment