பிரமிக்க வைக்கும் பலன்களைத் தரும் மஹாபாரத ஸ்துதிகள்! (Post No.13,999)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.999

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மஹாபாரத மர்மம்

பிரமிக்க வைக்கும் பலன்களைத் தரும் மஹாபாரத ஸ்துதிகள்!

ச.நாகராஜன்

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த அரசுரிமைப் போராட்டத்தைச் சொல்லும் பெரிய இதிஹாஸம் தான் மஹாபாரதம் என்று நினைத்தால் மஹாபாரதத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

ஏராளமான மர்மங்களை உள்ளடக்கியுள்ள அந்த இதிஹாஸம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோடானுகோடி பேர்களுக்குப் பயனைத் தரும் அற்புதமான ஸ்துதிகளையும் கொண்டுள்ளது.

விவரங்களைத் தெரிந்து கொண்டால் பிரமிப்போம்.

ஆபத்திலிருந்து காக்க வேண்டி திரௌபதி செய்த ஶ்ரீ கிருஷ்ண ஸ்துதி, அர்ஜுனன் சிவபிரானை நோக்கி செய்த ஶ்ரீ சங்கர ஸ்துதி, மற்றும் துர்க்கையை நோக்கிச் செய்த பகவதி துர்கா ஸ்துதி, சிவ சஹஸ்ர நாமம், விஷ்ணு சஹஸ்ர நாமம், தக்ஷன் சிவபிரானை நோக்கித் துதித்த சிவ சஹஸ்ர நாமம், பீஷ்மர் செய்த ஶ்ரீ கிருஷ்ண ஸ்துதி ஆகியவை மிக முக்கியமான மஹாபாரத ஸ்துதிகளாகும்.

1.       ஶ்ரீ கிருஷ்ண ஸ்துதி: (சபா பர்வம் 90ம் அத்தியாயம்)

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் அனைவரும் சபையில் இருக்க, அங்கு இழுத்து வரப்பட்ட திரௌபதியின் ஆடையை துச்சாஸனன் பலாத்காரமாக இழுத்து அவிழ்க்கத் தொடங்கினான்.

அப்போது துயரத்துடன் அழுத திரௌபதி பெரிய ஆபத்து வரும் போது ஶ்ரீ ஹரியை நினைக்க வேண்டும் என்று வசிஷ்ட மஹரிஷி  கூறியதை நினைத்தாள். சங்கமும் சக்கரமும் கையில் ஏந்தியவரே என்று கிருஷ்ணனை துதிக்கத் தொடங்கிய திரௌபதி,

கோவிந்த த்வாராகவாஸின க்ருஷ்ண கோபீஜனப்ரிய |

கௌரவை: பரிபூதாம் மாம் கிம் ந ஜானாஸி கேசவ ||

என்று மனதார அவனை அழைத்தாள்.

“சரணமடைந்தவரைக் காப்பாற்றும் ஓ!, கிருஷ்ணா, த்வாரகா வாஸா, யாதவர்களை சந்தோஷப்படுத்துபவரே, எங்கு இருக்கிறீர்.கௌரவர்கள் என்னும் கடலில் மூழ்கிய என்னை கை தூக்கி விடும்! அநாதையாக இருக்கும் என்னை ஏன் கவனிக்காமல் இருக்கிறீர்” என்ற திரௌபதியின் ஸ்துதியால், துச்சாஸனன் இழுக்க இழுக்க நூற்றுக் கணக்கான புடவைகள் வண்ண வண்ண நிறத்தில்  வந்து கொண்டே இருந்தன. அவையோர் பிரமித்தனர்.

ஆபத்தில் இருக்கும் எந்த ஒரு பெண்ணும் எந்தக் காலத்திலும் இதை உச்சரித்தால் ஆபத்தை நீக்குவான் கிருஷ்ணன் என்பது ஐதீகம்!

2.       அர்ஜுனன் சிவபிரானை நோக்கி செய்த ஶ்ரீ சங்கர ஸ்துதி (வன பர்வம் 39வது அத்தியாயம்)

வேடன் உருவம் கொண்ட சிவபிரான் அர்ஜுனனை போருக்கு அழைத்து அவனை அடித்து மயக்கமுறச் செய்கிறார். எழுந்த அர்ஜுனன் மலர் மாலையால் பூஜித்து சிவபிரானைத் தொழவே அவர் அவனுக்கு தரிசனம் தருகிறார். அஸ்திரத்தையும் தந்து அருள்கிறார்.

‘தேவ தேவ மஹாதேவ நீலக்ரீவ ஜடாதர’ என்பது உள்ளிட்ட அர்ஜுனனின் ஸ்துதியால் மஹாதேவர் மனம் மகிழ்கிறார்.

3.       அர்ஜுனன் செய்த துர்கா ஸ்துதி: (பீஷ்ம பர்வம்) 23-ம் அத்தியாயம்

யுத்தத்திற்கு அணி வகுத்து வந்திருக்கும் கௌரவரின் சேனையைப் பார்த்த வாசுதேவர் அர்ஜுனனை நோக்கி, “யுத்தத்தில் எதிரிகள் தோற்பதற்காக நீ துர்க்கா ஸ்தோத்திரத்தைச் செய்” என்று கூறுகிறார். உடனே ரதத்திலிருந்து இறங்கும் அர்ஜுனன் துர்க்கையை நோக்கிக் கரம் குவித்து வேண்டுகிறான்.

“மகேஸ்வர ஸ்வரூபிணி,  வாசுதேவ ஸ்வரூபிணி, கைடபனை நாசம் செய்தவளே, மஞ்சள் நிறமுடைய கண்களை உடையவளே உனக்கு நமஸ்காரம் என்று பலவாறாகத் துதிக்கிறான்.உடனே வானத்திலிருந்து தோன்றிய துர்க்கை, “ சிறிது காலத்திற்குள் நீ பகைவரை ஜெயிப்பாய்” என்று அனுக்ரஹம் செய்கிறாள்.

4.       சிவ சஹஸ்ர நாமம் (அநுசாஸன பர்வம்)

சிவ பிரானின் ஆயிரம் திருநாமங்களை லிங்க புராணம் உள்ளிட்ட பல புராணங்களில் பார்க்கலாம். அநுசாஸன பர்வம் 17வது அத்தியாயத்தில் சிவ சஹஸ்ரநாமத்தைப் பல பிரதிகளில் காணலாம். ஆயிரம் திருநாமங்களை ஓதுவதன் பலனை சாந்தி பர்வம் 290வது அத்தியாயம் விவரிக்கிறது. தீர்க்க ஆயுளை அடைவதோடு எந்த விதமான அமங்களத்தையும் இதை ஓதுபவன் அடைய மாட்டான் என்ற உறுதியைக் காணலாம்.

5.       விஷ்ணு சஹஸ்ர நாமம் (அநுசாஸன பர்வம் 254வது அத்தியாயம்)

விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமையை முழுவதுமாக உரைக்க யாராலும் முடியாது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் நாள் தோறும் ஒதி அதன் நல்ல பலன்களை அனுபவித்து வருகின்றனர்.

இதன் முழுப் பலன்களையும் ஶ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்ற ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் காணலாம். ஶ்ரீ சங்கரரது பாஷ்யத்திலும் இதன் சிறப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

6. தக்ஷன் ஓதிய சிவ சஹஸ்ரநாமம் (சாந்தி பர்வம் 290வது அத்தியாயம்)

தக்ஷன் சிவனை அழைக்காமல் நடத்திய யாகத்தை வீரபத்ரரைக் கொண்டு சிவபிரான் அழிக்கவே தக்ஷன் அவரது கோபத்தைத் தணிக்க ஆயிரம் நாமங்களால் அவரைத் துதிக்கிறான். அற்புதமான ஆயிரம் நாமங்களின் அர்த்தம் ஆழ்ந்த பொருள் பொதிந்ததாக சிவனின் மகிமையைக் கூறுவதாக் அமைகிறது.

7. பீஷ்மர் செய்த ஶ்ரீ கிருஷ்ண ஸ்துதி (சாந்தி பர்வம் 46வது அத்தியாயம்)

பீஷ்மர் இரு முறை ஶ்ரீ கிருஷ்ணரைத் துதிப்பதை மஹாபாரதத்தில் காணலாம். உத்தராயணம் வருவதை ஒட்டி அவர் ஒரு முறையும் , தர்மத்தை உபதேசிக்குமாறு அவர் கேட்கப்படும் போதும் இன்னொரு முறையுமாக அவர் இருமுறை ஶ்ரீ கிருஷ்ணரை ஸ்துதி செய்கிறார்.

கிருஷ்ணரின் பெருமையை இவற்றில் காணலாம்.

இப்படி மஹாபாரதத்தில் வரும் அருமையான இந்த ஸ்துதிகள் காலம் காலமாக மனிதர்களைப் பீடிக்கும் வியாதிகளை விரட்டுவதோடு நீடித்த ஆயுளையும் சகல நலன்களையும் தருவதாக அமைகின்றன. இவற்றை ஓதுவோம்; சகல நலன்களையும் பெறுவோம்!

(குறிப்பு: பர்வத்தில் குறிப்பிடப்படும் அத்தியாயங்கள் கும்பகோணம் ம.வீ. இராமானுஜாசாரியார் பதிப்பில் உள்ளபடி தரப்பட்டுள்ளது.)

***

  tags- மஹாபாரத ஸ்துதிகள்

Leave a comment

Leave a comment