ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 15-12-2024 (Post.14,001)

xxxx  

Written by London Swaminathan

Post No. 14,001

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 15–ம் தேதி 2024-ம் ஆண்டு

*****

திருவண்ணாமலை கார்த்திகை  தீபத்  திருருவிழா

ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கவர்ந்து இழுக்கும் திருவண்ணாமலை கார்த்திகை  தீபத்  திருருவிழா  இந்த ஆண்டும் வியாக்கிழமையன்று சிறப்பாக நடந்தது . மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அண்ணாமலைக்கு அரோஹரா என்று பக்தர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை முட்டியது.  ஆயிரக் கணக்கில் சிறப்பு பேருந்துகள் பக்கதர்களை சுமந்த வந்தன ; வட்டார பள்ளிகளுக்கு ஒன்பது நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன.

கார்த்திகை தீபத் திருவிழா – காஞ்சியில் இருந்து திருவண்ணாமலை புறப்பட்ட திருக்குடைகள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இருந்து திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள இந்து ஆன்மீக சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக ஆன்மீக பக்தர்கள் பலர் வழி நெடுகிலும் நின்று திருக்குடையை வழங்கினர். விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழவும் திருக்குடை அளித்து வருவதாக அறக்கட்டளை நிறுவனர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

xxxx

மகா கும்பமேளா 2025 பிரம்மாண்ட ஏற்பாடு.

உலகிலேயே மிகப்பெரிய திருவிழா மஹா கும்பமேளா ; இது அடுத்த ஆண்டு திரிவேணி சங்கமத்தில் நடக்கிறது; கங்கை, யமுனை சரஸ்வதி நதிகள் கலக்கும் இடம் திரிவேணி சங்கம். சரஸ்வதி நதி மட்டும் பாதாளத்தில் கலக்கிறது; முன்னர் அலஹாபாத் என்று பெயர் இருந்த இடத்துக்கு பிரயாக்ராஜ் என்ற பழைய பெயர் சூட்டப்பட்டதை நேயர்கள் அறிவார்கள் இதற்கு முந்திய மஹா கும்பமேளாவில் இரண்டு கோடி பேருக்கு மேல் வந்து கங்கையில் புனித நீர் ஆடினர்.

பல்லாயிரக் கணக்கான சாதுக்கள் இமய மலையிலிருந்து இறங்கி வந்து புனித கங்கை நதியில் குளிக்கும் காட்சியை உலகம் முழுதுமுள்ள டெலிவிஷன் நிலையங்கள் படம் பிடிப்பது வழக்கம் 

சாதுக்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை

உத்தர பிரதேச மாநில முதல்மைச்சர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மகா கும்பமேளா 2025—க்கான ஏற்பாடுகள் குறித்து சாதுக்களுடன் ஆலோசனை நடத்தினார். சாதுக்கள் ஏற்பாடுகளில் திருப்தி தெரிவித்து, பிரதமர் மோடியின் டிசம்பர் 13 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதித்தனர். யோகி பிரம்மாண்டமான கும்பமேளாவிற்கு உறுதியளித்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், மகா கும்பமேளாவின் தெய்வீகத்தன்மையும் பிரம்மாண்டமும் சாதுக்களால் வருவதே, அரசும் நிர்வாகமும் ஏற்பாட்டிற்கு உதவி செய்பவை மட்டுமே என்றார். இன்று உலக அரங்கில் சனாதன கலாச்சாரம் பெருமைப்படுகிறது என்றால் அது சாதுக்களின் அருளால்தான் சாத்தியமாகிறது என்றார். மகா கும்பமேளா ஏற்பாடுகளில் நல்லது நடந்தால் அது முன்னோர்களின் அருள், மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் சாதுக்களின் ஆசியால் நடக்கிறது. எனவே இந்த முறையும் சாதுக்கள் மேளா நிர்வாக அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலை வழங்க வேண்டும்

என்று வேண்டுகோள் விடுத்தார்

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 13 அகாடாக்களின் பிரதிநிதிகள், காக்-சௌக் பாரம்பரியம், தண்டிபாடா பாரம்பரியம், ஆச்சார்யபாடா பாரம்பரியம் மற்றும் தீர்த்த புரோகிதர்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சாதுக்களுடன் மகா கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிய முதல்வர், இந்த ஆண்டு கங்கை நீர் தாமதமாக வற்றியதால் சில பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் சாதுக்களின் ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார்.

பரிசுத்தமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராட விரும்பும் ஒவ்வொரு சாதுவும், பக்தரும் தொடர்ச்சியாக ஓடும் தூய்மையான கங்கை-யமுனையை தரிசிப்பார்கள். மகா கும்பமேளா 2025, கும்பமேளா 2019 ஐ விட பிரம்மாண்டமாக இருக்க அனைவரும் பங்களிக்க வேண்டும். சாதுக்களின் அருளாலும், பிரதமரின் வழிகாட்டுதலாலும் இன்று உலகம் முழுவதும் அயோத்தி, வாரணாசி மற்றும் பிரஜ்தாம் ஆகியன புதிய அம்சங்களை காண்கிறது என்றார்..

அகாடாக்கள் மற்றும் பல்வேறு சாதுக்களின் பிரதிநிதிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவித்து, முதல்வர் யோகியின் தலைமையில் நடைபெறும் மகா கும்பமேளா உலகம் முழுவதும் அமைதியின் செய்தியை வழங்கும் என்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்றனர். அவரது தலைமையின் கீழ் இன்று சனாதன சமூகம் பெருமைப்படுகிறது என்று பாராட்டி ஆசி வழங்கினார்கள்.

xxxxx

மகா கும்பமேளாவை முன்னிட்டு கோவையில் இருந்து வாரணாசி மற்றும் அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் !

கோவை, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகா கும்பமேளாவுக்கு தமிழகத்தத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் அயோத்திக்கு அதிகப்படியான பக்தர்கள் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து வருகிற 2025  பிப்ரவரி மாதம் 18-ந் தேதி திருப்பூர், ஈரோடு, சேலம், லார்பேட்டை,காட்பாடி, ரேணிகுண்டா வழியாக வாரணாசிக்கு இயக்கப்பட உள்ளது.

XXXX

உத்தர பிரதேசத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா அடுத்த ஆண்டு கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி, கங்கை நதிக்கரையில் லட்சக்கணக்கான துறவிகள் திரள்வது வழக்கம். இந்த நிலையில், கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை அளித்தார். பின்னர் அங்குள்ள புத்தக கடைக்குச் சென்ற அவர், இரண்டு புத்தகங்களை வாங்கி அதற்கான தொகையை யுபிஐ மூலம் செலுத்தினார்.

இதையடுத்து கங்கை நதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் உறுதித்தன்மையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.  அந்த வழித்தட வரைபடத்தையும் அவர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

******

நடிகர் திலீப்புக்கு முன் வரிசை தரிசனம் நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சபரிமலை: சபரிமலையில் பக்தர்களின் வரிசையை தடுத்து நடிகர் திலீப்புக்கு முன் வரிசையில் தரிசன வசதி ஏற்படுத்திக் கொடுத்தது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் 2 பேர் உட்பட 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.கடந்த 5ம் தேதி சபரிமலை தரிசனத்திற்கு வந்த நடிகர் திலீப், அவருடன் வந்தவர்கள் இரவு ஹரிவராசனம் பாடும் போதும் அதிகாலை நிர்மால்ய தரிசனத்தின் போதும் முன் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இந்த நேரத்தில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

xxxxx

மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுத்துள்ளதாகஇந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிஷனரிகளின் மதமாற்ற வேலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கிவிடபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் சார்லஸ் நகரை சேர்ந்த ஒரு பாதிரியார், ஆரியூர் கிராமத்தில், கிறிஸ்துமஸ் விழா என்ற பெயரில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிகேட்ட இளைஞர்களை ஆதரவாளர்களை வைத்து பாதிரியார் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும் என்றும், புதுக்கோட்டை சம்பவத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்யபட்ட இளைஞரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

XXXXXX

அமெரிக்க அரசாங்கத்தின் உச்ச பொறுப்புகளில் இந்துக்கள் நியமனம்

அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை தேர்வுகளில் இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.

வரும் ஜனவரி 20ம் தேதி, அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கிறார். அதன் பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக அதிபருக்கான அதிகாரங்களைப் பெற முடியும். அதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 4000 அரசு நியமனங்களை செய்து வருகிறார்.

வெள்ளை மாளிகை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், இந்திய வம்சாவளியினரை மிக முக்கிய பொறுப்புக்களில் ட்ரம்ப் நியமித்திருக்கிறார்.

அமெரிக்க நீதித்துறையின் உயர் பதவிகளில் ஒன்றாக விளங்கும் சிவில் உரிமைகளுக்கான துணை தலைமை வழக்கறிஞர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மீத் தில்லான்என்ற பெண்ணை நியமனம் செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்; ஹர்மீத் சீக்கிய மத சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்.தற்போது 54 வயதாகும் ஹர்மீத் தில்லான், இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்தவராவார். சிறுவயதிலேயே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்,

அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறை (Department of Government Efficiency – DOGE) என்ற புதிய துறையை உருவாக்கியுள்ள அதிபர் ட்ரம்ப், அதன் தலைமை பதவியில் எலான் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

வடக்கஞ்சேரியில் பிறந்து வளர்ந்த ராமசாமிக்கும் பொள்ளாச்சியில் பிறந்த விவேக்கின் தாயார் கீதாவுக்கும் பழனியில்தான் திருமணம் நடந்திருக்கிறது. தாய் மொழி தமிழ் என்பதால், இன்றும் விவேக் ராமசாமி தமிழில் நன்றாக பேசுவார்

கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றாலும் தான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்வதாக விவேக் ராமசாமி, வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, தேசிய புலனாய்வு இயக்குநராக முன்னாள் ஜனநாயகக் கட்சியின் துளசி கபார்டை அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார். இதன் மூலம், துளசி கப்பார்ட், அமெரிக்க உளவு அமைப்புகளில் தலைவராகவும், அமெரிக்க அதிபரின் உளவுத்துறை ஆலோசகராகவும் செயல்படும் முதல் இந்து பெண்மணி ஆவார்.

இந்தியாவுடன் நேரடித் தொடர்புகள் இல்லை என்றாலும், துளசி கபார்ட்டின் தாயார், இந்து மதத்துக்கு மாறியவர் . ரோமன் கத்தோலிக்கரான துளசி கபார்ட் டின் தந்தை மைக் கபார்ட் மற்றும் தாயார் கரோல் கபார்ட் தங்கள் குழந்தைகளை இந்து மத நம்பிக்கைகளுடன் வளர்த்தனர், மேலும் தங்களின் ஐந்து குழந்தைகளுக்கும் இந்துமத பெயர்களையே வைத்தனர். தனது குழந்தைகளுக்கு இந்து பெயர்களையே துளசி கபார்ட் வைத்திருக்கிறார்.

அமெரிக்க சமோவான் வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் எப்போதும் தன்னை ஒரு இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே பெருமை படுகிறார். ஸ்ரீமத் பகவத் கீதையின் மீது கை வைத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் .

2015ம் ஆண்டு பாரம்பரிய வேத முறைப்படி, திரைப்பட தயாரிப்பாளர் ஆபிரகாம் வில்லியம்ஸை துளசி கபார்ட் திருமணம் செய்து கொண்டார்.

இந்த வரிசையில், காஷ் படேலை எஃப்பிஐ-யின் இயக்குநராக்கி இருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த, குஜராத்தைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர்தான் காஷ் படேல். நியூயார்க்கில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கி, நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோயிலை மீட்டெடுப்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்த காஷ் படேல், ஸ்ரீ இராமரின் வரலாறு மற்றும் ஸ்ரீ இராம ஜென்ம பூமியின் வரலாற்று முக்கியத்துவத்தை புறக்கணித்த மேற்கத்திய ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக, இந்திய வம்சாவளி இந்துவான உஷா வான்ஸின் கணவர் ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகி இருக்கிறார். இதன்மூலம், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உஷா வான்ஸ் பெற்றிருக்கிறார்.

XXXXXXX

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்  22 –ஆம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம். 

—-subham—-

Tags- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 15-12-2024

Leave a comment

Leave a comment