ஆலயம் அறிவோம்! ஶ்ரீ வில்லிப்புத்தூர் (Post No.14,006)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14,006

Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024.            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

15-12-24 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்று,மூர்

நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்

வில்லிப்புத்தூர்  வேதக் கோனூர்

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகவும் அமையும் ஶ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலமாகும்.

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து ராஜபாளையம்-தென்காசி, குற்றாலம் போகும் வழியில் உள்ளது.

மூலவர் திருநாமம் : வடபத்ரசாயி

புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்_

உற்சவர் : ரங்கமன்னார்

தாயார்: ஆண்டாள்

விமானம் : சம்ஸன விமானம்

தீர்த்தம் : திருமுக்குளம்

மங்களாசாஸனம் : பெரியாழ்வார், ஆண்டாள்

கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் ஶ்ரீ தேவி, பூதேவி சமேத வடபத்ரசாயியை தரிசிக்கலாம்.

பெருமாளுக்கு ஆண்டாள் வலது புறமும் கருடாழ்வார் இடது புறமுமாக தரிசனம் தருகின்றனர். வடபத்ரசாயி ஆதிசேஷனில் பள்ளி கொண்டுள்ளார்.

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. முக்கியமான ஒரு வரலாறு இந்த ஊருக்குப் பெயர் வந்ததன் காரணத்தைத் தெரிவிக்கிறது.

முன்னொரு காலத்தில், இந்த நிலப்பகுதி ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.

வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. அதுவே  வில்லிப்புத்தூர் என்ற பெயரைப் பெற்றது.

இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார் கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம்.

ஶ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று  பெரியாழ்வார் தனது நந்தவனத்தில் துளஸிச் செடியின் கீழ் பெண்குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். தன் கையில் பூமாலை போலத் தோன்றிய பெண் குழந்தைக்கு கோதா என்று பெயர் சூட்டினார். அதுவே நம்மால் கோதை என்று வழங்கப்படுகிறது. கோ என்றால் நல்வார்த்தை தா என்றால் தருபவள். திருப்பாவை 30 பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் அருளிச் செய்ததால் அவர் கோதை ஆகிறார்.. இன்னும் ஏராளமான அர்த்தங்களை வேதாந்த தேசிகன் தனது கோதா ஸ்துதியில் தெரிவிக்கிறார்.

‘இறைவனையே ஆண்டவள்’ என்பதால் ஆண்டாள் என்ற் திருப்பெயரை கோதை பெற்றார்.

பாமாலை பாடி பூமாலை சூடிக் கொடுத்ததால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்ற சிறப்புப் பெயரும் ஆண்டாளுக்கு உண்டு.

பெரியாழ்வாருடன் ஆண்டாள் வாழ்ந்த வீடே கி.பி. 14ம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் திருக்கோயிலாக கட்டப்பட்டது.

11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ராஜகோபுரம் 196 அடி உயரமுடையது.

கோவிலில் தினமும் காலையில் ஒரு காராம்பசு வந்து நிற்கும். ஆண்டாளின் பார்வை இந்தக் காராம்பசுவின் பின்புறம் விழும். ஆண்டாள் தினமும் கண்விழிப்பது இப்படித்தான்!

.

இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. கலாநேமி என்னும் அரக்கனை பெருமாள் தன் சக்ராயுதத்தால் வீழ்த்தினார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வர அந்த சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய அதில் சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால் இது திருமுக்குளம் என்று அழைக்கப்படலாயிற்று.

இங்குள்ள கோவிலின் முன்புறமுள்ள கிணற்றில் கோடைக்காலமானாலும் நீர் வற்றுவதில்லை

ஆண்டாளின் தோளில் அழகுற வீற்றிருக்கும் கிளி தினமும் மாற்றப்படுகிறது. இந்தக் கிளி பச்சிலையால் செய்யப்பட்ட ஒன்றாகும். கிளியோடு இருக்கும் பெண் தெய்வங்கள் மதுரை மீனாட்சியும் ஆண்டாளும் தான். ராஜவம்சத்தில் வந்த மீனாட்சிக்கு கிளி வலது தோளிலும் எளிய பக்தி மார்க்கத்தில் வந்த ஆண்டாளுக்குக் கிளி இடது தோளிலும் இருக்கும். இந்தக் கிளி சுக முனிவரே என்று கூறுவர். இந்தக் கிளியைத்தான் ஆண்டாள் கண்ணனுக்குத் தூது விட்டாள். பூஜை முடிந்த பின்னர் தினமும் இந்தக் கிளியை பக்தர்கள் விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம்.

மார்கழி மாத உற்சவத்தில் ஶ்ரீ ஆண்டாளின் எண்ணெய் காப்பு உற்சவம் மிகச் சிறப்பான ஒன்றாகும். 61 வகை மூலிகைகள் அடங்கிய இந்தத் தைலத்தைக் காயச்ச நாற்பது நாட்கள் ஆகும். ஏழு படி நல்லெண்ணெயில் பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் மற்றும் மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சினால் இது நான்கு படியாகும். இதுவே தான் உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும்.

சர்வரோக நிவாரணியாகும் இதை பிரசாதமாக பக்தர்கள் வாங்கிச் செல்வர்.

இங்கு கோவிலில் கண்ணாடிக் கிணறு ஒன்று உள்ளது. இதில் தான் தினமும் ஆண்டாள் அழகு பார்த்துக் கொள்வது வழக்கம்.

சித்ரா பௌர்ணமியன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகை ஆற்றில் இறங்குகிறார்.

12 ஆழ்வார்களில் இரு ஆழ்வார்கள் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெருகிறது.

கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும் கால் பெருவிர்ல் நுனியும் ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்பை விளக்கும் ஒரு அபூர்வமான வேலைப்பாடாகும்.

ஒவ்வொரு ஆடிப் பூரத்திலும் அழகிய தேர் இங்கு இழுக்கப்படுகிறது.

தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஶ்ரீ வில்லிப்புத்தூர் கோவில் ராஜகோபுரம் தான்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதம் அனைத்துக்கும் வித்தாகும்

கோதை தமிழ் ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வடபத்ர சாயியும் ஆண்டாளும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

***

Leave a comment

Leave a comment