Post No. 14,007
Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பெண்கள் என்றால் நகை ; நகைகள் என்றால் பெண்கள்.
உலகிலேயே அதிக நகைகளை அணிவோர் இந்துக்கள்தான். எகிப்திய ஓவியங்களைப் பார்ப்போர் கழுத்தில் உள்ள சங்கிலிகளை மட்டுமே காணலாம். ஆனால் இந்துக்களின் ஓவியங்களிலும் கற்சிலைகளிலும் பாதாதி கேசம் நகைகளைக் காணலாம். அஜந்தா ஓவியங்களையும் பர்ஹுத் முதலிய இடங்களிலுள்ள சிலைகளையும் காண்போர், ஆண்களும் குண்டலங்களையும் கை வளையங்களையும் தோள் வளையங்களையும் அணிந்திருப்பதைக் காணலாம். இவைகளில் பல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. இதே போல இலங்கையில் சிகிரியா, தமிழ் நாட்டில் சித்தன்ன வாசல் ஓவியங்களிலும் அலங்காரம் செய்துகொண்ட பெண்களைக் காண்கிறோம்.
சங்க இலக்கியத்திலும் அதற்குப் பின் வந்த சிலப்பதிகாரத்திலும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரைகளிலும் நவரத்தினங்களை காண்கிறோம். ஆண்டாளும் இதற்கு விதி விலக்கு அல்ல. அவரும் நகைகளைப் பற்றிப் பாடுகிறார்.
அவளுக்கு நகைகள் மீது பற்று உண்டோ இல்லையோ மற்ற பெண்களைக் கவர்ந்து இழுக்கவாவது நகைகளைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும்!
சங்ககாலத்துக்கு முந்தைய காளிதாசனின் காவியங்களிலும் பெண்கள், உதட்டுச் சாயம் பூசியத்தையும் கால், கைகளில் செம்பஞ்சுச் சாயம் பூசிக்கொண்டதையும் அறிகிறோம்.
பிருஹத் ஸம்ஹிதாவில் வராஹமிஹிரர் பட்டியலிடும் பலவகை முத்து மாலைகளை சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் படிக்கலாம்.
காளிதாசனுக்குப் பின்னர் எழுந்த சங்க இலக்கியத்தில் ஏராளமான நகைகள், அணிகலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன
ஆறாவது பரிபாடலில் வையை நதியில் குளித்த பெண்களின் வருணனை வருகிறது
தொடி, தோள் வளை , மேகலை வடங்கள், ஆணிமுத்து வடங்கள் ஆகிய நகைகளும் இன்னுமொரு பாடலில் கை வளையம் , ஆழி மோதிரம், தலைக்கோலம், எட்டுவட முத்து மேகலை, வாகுவலையம், காஞ்சி ஆகிய ஆபரணங்களும் வருகின்றன.
சிலப்பதிகாரம் கடலாடு காதையில் நவரத்தின அணிகளும் காணக்கிடக்கின்றன.
இந்த அணிகளும் அவற்றின் பெயர்களும் ஆண்டாள் காலம் வரை வழக்கில் இருந்ததை திருப்பாவை காட்டுகிறது .
இரண்டாவது பாடலில் என்ன செய்யலாம் என்ன என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை ஆண்டாள் தருகிறாள்;
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
நெய், பால் சாப்பிட மாட்டோம்;
கண்ணுக்கு மையும் கூந்தலுக்குப் பூவும் பயன்படுத்த மாட்டோம்.
(குழாயடியிலும் கிணற்றடியிலும் வம்பளக்க மாட்டோம்)).
கோள் சொல்லமாட்டோம் .
தடைசெய்யப்பட்ட விஷயங்களையும் செய்யமாட்டோம்.
செய்யக்கூடியது
பரமனடி பாடுவோம் ;
அதிகாலையில் நீராடுவோம்;
பிரம்மச்சாரிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வறியோருக்கும் வேண்டும் அளவுக்கு உணவு இடுவோம்
******
ஆயிழை ஏந்திழை சேயிழை நேரிழை
ஆண்டாளின் தமிழ் அறிவினைக் காண்போம். தமிழில் பெண்களை அன்மொழித்தொகையால் குறிப்பிடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது .
ஆண்டாளும் பிறவியிலேயே கவிஞர். இதை திருப்பாவையிலும்,
அவர் எழுதிய நாச்சியார் திருமொழியிலும் காண்கிறோம்.
நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர் – பாசுரம் 1
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் -30 என்றும் பாடுகிறார்.
மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில்
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்-2
சேயிழையீர் சிவலோகம் பாடி- திருவாசகம் 9-53
திருக்குறளிலும் இத்தகைய பிரயோகம் உள்ளது. இது சங்ககால வழக்கு என்பதை பரிபாடலில் காண்கிறோம் அணியிழை 9-23, ஒள்ளிழை 9-39 /ஆகுபெயர்
இழை என்பது என்ன ?
நகைகள் , ஆபரணங்கள் ஆகும். ஒளிவீசும் நகைகள், அணி போன்ற நகைகள் என்பதை பரிபாடல் நன்கு காட்டும்.
திருப்பாவை நோன்பு முடிந்தவுடன் என்ன செய்வோம் என்பதை – 27-ஆவது பாடலில் வரிசைப்படுத்துகிறார்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
கையில் சூடகம் அணிவோம்
தோள் ல் பாஹுவலயம் அணிவோம்
காதுகளில் தோடு ம் கர்ணப் பூவும் அணிவோம்
காலில் பாடகமும் அணிவோம்
பல்கலன் என்று சேர்த்திருப்பது மேலும் பல ஆபரணங்களையும் …. என்பதைக் காட்டும்
முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு, அக்கார அடிசில் ஆகியவற்றையும் சாப்பிடுவோம் என்கிறார் ஆண்டாள்
இப்படி நகைகளை அணியும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததை ராமாயணத்திலும் காண்கிறோம். சீதா தேவியை ராவணன், விமானத்தில கடத்திச் செல்லுகையில் அவள் புடவைத் தலைப்பில் முடிந்து எறிந்த ஆபரணங்களை ப் புறநானூற்றுப் புலவர் பாடி இருக்கிறார் .
காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களில் மோதிரம், ஆபரணம் முக்கியப் பங்காற்றுகிறது; ராமாயணத்திலும் கணையாழி முக்கியமாக விளங்குகிறது. இவை அனைத்தும் பெண்களுக்கு —-இந்துப் பெண்களுக்கு —-நகைகள் உடலிலிருந்து பிரிக்க முடியாத அடையாளச் சின்னங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.
To be continued……………………………….
tags- திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1, ஆண்டாளும் நகைகளும் , ஆபரணங்கள், நகைகள், ஆண்டாள், பரிபாடல், சேயிழை, நேரிழை