WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,005
Date uploaded in Sydney, Australia – —20 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் 15-12-24 அன்று ஒளிபரப்பான உரை.
இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
நம்மாழ்வார் – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே நாகராஜன் வணக்கம் நமஸ்காரம்.
இன்று நாம் தமிழுக்கு வைணவ பக்தி இலக்கியத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்ததோடு அனைவரையும் திருமாலைத் துதிப்பதற்கான சிறந்த பாசுரங்களை அருளிய ஆழ்வாரான நம்மாழ்வார் பற்றி சிந்திக்கப் போகிறோம்.
இவரது காலம் 9ம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.
பகவானது திவ்ய குணங்களில் சதா ஆழ்ந்து இருந்ததால் ஆழ்வார்கள் என்ற பெயரைப் பெற்ற ஆசாரியர்களில் நம்மாழ்வார் தனிச் சிறப்புடன் திகழ்கிறார்.
முற்காலத்தில் பக்தியில் செழித்த பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்றும் திருநகரி என்றும் அழைக்கப்படும் அழகிய நகரில் போற்காரியார் என்னும் பெயருடைய வேளளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமால் பக்தரான அவர் உத்தமியான உடைய நங்கையார் என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். நங்கையாரின் தந்தையார் திருவாழ்மார்பர் என்பவர் மலையமாநாட்டில் திருவண்பரிசாரம் என்னும் நகரில் வாழ்ந்து வந்தார்.
தனது மாப்பிள்ளையைச் சில காலம் தன்னுடனேயே தங்குமாறு திருவாழ்மார்பர் வேண்ட அப்படியே தன் மனைவியுடன் பொற்காரியார் அங்கு வாழ்ந்து வந்தார்.
சில காலம் கழித்துத் தன் ஊருக்குத் திரும்பிச் செல்ல எண்ணம் கொண்ட பொற்காரியார் திருக்குறுங்குடி என்னும் ஊரை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருந்த இறைவனான நம்பியை புத்திரப் பேறு அளிக்குமாறு மனதார வேண்டினார்.
இறைவன் அருளால் நங்கையார் கர்ப்பமுற்று அழகிய ஓரு ஆண் குழந்தையைப் பெற்றார். இறைவனே அப்படி ஆண் குழந்தையாக அவதரித்த போது நாராயணனுக்குத் தொண்டு செய்யும் ஆதிசேஷன் திருக்குருகூரில் ஒரு புளியமரமாகத் தோன்றி வளரலானார்.
பிறந்த குழந்தை சற்று வித்தியாசமாக இருந்தது. அழாமலும் பால் குடிக்காமலும் எப்போது மௌனத்துடன் இருந்த அந்தக் குழந்தையைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
குழந்தையை பெருமாள் கோவிலுக்குக் கொண்டு சென்ற பொற்காரியார் உலக நடைக்கு முற்றிலும் மாறாக இருக்கும் குழந்தைக்கு மாறன் என்று பெயர் சூட்டி அங்குள்ள புளிய மரத்தில் ஒரு அழகிய தொட்டிலில் குழந்தையை இட்டு வீடு திரும்பினார்.
ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் அக்குழந்தையின் மேல் சடம் என்னும் வாயு வீசும். உடனே பரிசுத்த மனம் கொண்ட குழந்தை மனம் மாறி அழத் தொடங்கும் . உலக இயல்பைப் பெறும்.
ஆனால் இந்த தெய்வக் குழந்தையின் மீது வாயுவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த வாயுவை குழந்தை அப்புறம் தள்ளி விட்டது.
இப்படி சட வாயுவைத் தள்ளி விட்டதால் அவருக்கு சடகோபர் என்ற பெயர் உண்டாயிற்று.
இப்படியாக ஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல பதினாறு ஆண்டுகள் அவர் வளர்ந்து வந்தார்.
ஶ்ரீமன் நாராயணன் மாறனாருக்கு அனைத்து சாஸ்திரங்களையும் அளிக்கத் திருவுள்ளம் கொண்டு தனது கணத் தலைவரான விஷ்வக்ஸேனரை அழைத்து, ‘நீ திருக்குருகூர் சென்று அனைத்து வேதாந்த உட்பொருளையும் மாறனுக்க உபதேசித்து வா’ என்று அனுப்பினார்.
அதன்படியே விஷ்வக்ஸேனர் திருக்குருகூரில் உள்ள மாறனார் முன் பிரத்யக்ஷமாகி அவருக்கு அனைத்து வேதாந்த உட்பொருளையும் உபதேசித்தார். அனைத்து வேதங்களையும் மாறனார் அறிந்து கொண்டார். விஷ்வக்ஸேனர் தனது இருப்பிடம் மீண்டார்.
இப்படி நாட்கள் கழிகையில் திருமால் மீது அற்புதமான மதுரமான பாடல்களைப் பாடிய பக்தர் ஒருவர் அயோத்திக்குச் சென்றார். அவர் மதுரமான பாடல்களைப் பாடி வந்ததால் அவரை மதுரகவிகள் என்று அனைவரும் அழைத்தனர்.
ஒரு நாள் தெற்குத் திசையிலிருந்து பேரொளி ஒன்று வீசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர் அது ஒளிரும் திசை நோக்கி நடக்கலானார்.
அந்த ஒளி காட்டிய பாதையால் அவர் திருக்குருகூரை வந்து அடைந்தார். அங்குள்ள புளியமரத்தடியில் தியானத்தில் இருந்த மாறனாரைக் கண்டார்.
அவர் பேசாமல் இருந்ததைக் கண்ட மதுரகவியார் ஒரு கல்லை எடுத்துத் தட்ட இதுவரை பேசாமல் இருந்த மாறனார் அவருடன் பேசலானார். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அற்புதமாக பதிலைத் தரலானார்.
மாறனார் ரிக், யஜுர் மற்றும் அதர்வண வேதத்தின் கருத்துக்களை உள்ளடக்கி திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி என்னும் நூலகளை இயற்றி உலகிற்குத் தந்தார்.
திருவாய் மொழி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஆக அது பகவத் விஷயம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.
திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும் திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும் திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் ஆக நான்கு பிரபந்தங்களில் மொத்தம் 1296 பாசுரங்கள் உள்ளன.
இப்படி வேதத்தை அழகிய தமிழில் விரித்துரைத்த அவரை அனைவரும் நம் ஆழ்வார் என்று அழைக்கலாயினர். அவர் நம்மாழ்வார் ஆனார்.
ஶ்ரீ ரங்க நாதரும் அவரை நம்மாழ்வார் என்று அழைக்கவே அப்பெயரே நிரந்தரமாயிற்று.
மற்ற ஆழ்வார்களை இவரது அவயவங்களாக கூறுவதால் இவரது சிறப்பு நமக்கு நன்கு விளங்கும்.
அவரது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பகவான் அவருக்கு ஒரு மகிழ மாலையைக் கொடுத்து அணிந்து கொள்ளும்படி பணித்தார். அதை அவர் அணிந்தார். அதனால் அவர் வகுளாபரணர் என்ற பெயரைப் பெற்றார்.
தான் அருளிச் செய்த பிரபந்தங்களை நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு உபதேசித்து அருளினார்.
மஹா விஷ்ணுவே முதல் தெய்வம் என்று நிரூபித்த நம்மாழ்வார் பிற மதங்களைக் கண்டித்தார். அதனால் அவருக்குப் பராங்குசர் என்ற பெயர் உண்டாயிற்று.
பிற மதங்கள் என்னும் யானைகளைத் தன் அங்குசத்தால் அடக்கியவர் என்ற பொருளைத் தருகிறது பராங்குசர் என்ப்ற பெயர்,
நம்மாழ்வாருக்கு வேதம் தமிழ் செய்த மாறன், குருகூர் நம்பி,, ஞான பிரான், தொண்டர் பிரான் உள்ளிட்ட 35 பெயர்கள் உண்டு.
to be continued……………..