Post No. 14,003
Date uploaded in Sydney, Australia – —19 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
8-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
யோகி வேமனா
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் தெலுங்கு உலகில் யோகியாக விளங்கிய கவி வேமனா அவர்களைப் பற்றிச் சிறிது பார்க்கப் போகிறோம்.
குமரகிரி வேமன ரெட்டி என்ற பெயரைக் கொண்ட அவர் கவி வேமனா என்றும் யோகி வேமனா என்றும் பிரபலமாக அறியப்படுகிறார்.
கவி வேமனா இப்பொது ஆந்திர பிரதேசத்தில் உள்ள கொண்டவீடு என்ற நகரில் கடம் வேமா என்பவருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது காலம் சரியாக கணிக்கப்பட முடியாமல் உள்ளது. 1659 முதல் 1750 முடிய உள்ள காலத்தில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும்.
இளம் வயதில் அவர் லம்பிகா சிவா என்ற யோகியிடம் தீட்சை பெற்றார். யோகி அவருக்கு யோகாப்யாசத்தைக் கற்றுக் கொடுத்தார்.
அவர் தெலுங்கு மொழியில் ஏராளமான கவிதைகளை இயற்றினார். அவை வேதத்திற்கு ஒப்பானவை என்று அனைவராலும் போற்றப்பட்டன.
சாடு பத்யம் என்னும் நான்கு வரி கவிதைகளை அவர் இயற்றினார். மூன்று அடிகளில் பெரிய உண்மை அடங்கி இருக்கும். நான்காவது அடியில் விஸ்வதாபிராம வினுர வேமா என்று இருக்கும். அதாவது விஸ்வதா என்றால் உலகைப் படைத்த இறைவன் என்று பொருள். அபிராம என்றால் அவனுக்கு நெருங்கியவன் என்று பொருள். இறைவனுக்கு நெருங்கிய யோகியாக வேமனா திகழ்ந்தார்.
5000 பாடல்களுக்கு மேல் அவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.
சி.பி.ப்ரவுன் என்ற ஆராய்ச்சியாளர் வேமனாவைப் பற்றி ஆய்வு நடத்தியதோடு அவரது கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 693 பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1829ம் ஆண்டு பிரசுரித்தார். 1839ல் இன்னொரு 1215 பாடல்களை அவர் பிரசுரித்தார்
வேமனாவின் வாழ்வில் ஏராளமான அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒரு நாள் அவரது குரு ஒரு முக்கிய வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற அவர் வேமனாவிடம், “இதோ எனது துணி. இவற்றை பத்திரமாக வைத்துக் கொள். குளித்துவிட்டு வருகிறேன்” என்றார். துணிகளை வாங்கிக் கொண்ட வேமனா அதை பத்திரமாக கையில் வைத்துக் கொண்டிருந்தார். குளித்து விட்டு வந்த குரு வேமனாவை நோக்கி, “இங்கு வா” என்று கூற வேமானா துணிகளைக் கீழே சகதியில் போட்டு விட்டு அவரை நோக்கி ஓடினார்.
இதனால் வருத்தமடைந்த குரு அவரை நோக்க, வேமனாவோ முழித்தார். ஆகவே குரு மிகுந்த ஏமாற்றம் அடைந்து அவரிடம் ஒரு சுண்ணாம்புக் கல்லை எடுத்துக் கொடுத்து, “இதோ, இந்தக் கல்லில் ராம ராம என்று நான் வரும் வரை எழுது” என்று கூறி விட்டு அங்கிருந்து தனது வேலையை முடிக்க அவர் கிளம்பினார்.
வேமனா தன் குரு தன்னால் ஏமாற்றத்தை அடைந்தார் என்பதைப் புரிந்து கொண்டார். ராம ராம என்று அந்தப் பெரிய பாறையில் எழுத ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சுண்ணாம்புக் கல் கரைந்தது. ஆனால் தன் விரலினால் ராம ராம என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார் வேமனா. அவரது கை விரல்கள் தேய்ந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனாலும் அவர் விடவில்லை. எழுதுவதைத் தொடர்ந்தார்.
வேலையை முடித்துக் கொண்டுவந்த குரு அவரிடம் வந்த போது அவர் கை ரத்தம் சொட்டச் சொட்ட இருந்ததைப் பார்த்துத் திகைத்தார். வேமனாவை அள்ளி அணைத்து, “நான் இப்படிச் செய்து விட்டேனே” என்று வருந்தினார்.
அன்றிலிருந்து ஒரு பெரிய மாற்றம் வேமனாவிடம் ஏற்பட்டது. பெரிய கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான கவிதைகளை சரளமாக அவர் இயற்ற ஆரம்பித்தார்
வேமனாவைப் பற்றிய இன்னொரு சுவையான சம்பவம் உண்டு. ஒருமுறை தோட்டத்தில் விதைகளை விதைக்க அவர் பலரையும் அழைத்தார். ஆனால் அதை அனைவரும் அசட்டை செய்த போது ஒரு சிலர் மட்டும் முன்வந்தனர். அவர்கள் தங்கள் வேலையை முடித்த போது சில காய்களை அவர்களது வேலைக்கான கூலியாக வேமனா தந்தார்.
வீட்டிற்கு வந்து அந்தக் காய்களை நறுக்கிய போது அதன் உள்ளிருந்து விதைகள் விழுந்தன. அந்த விதைகளுக்குள் தங்க மணிகளாக இருந்தன. இதைப் பார்த்த அவர்கள் ஓவென்று ஆச்சரியத்தால் கூவினர். செய்தி பரவியதும் கிராமத்தில் இருந்த அத்தனை பேரும் வேமனாவிடம் வேலை கேட்டு வந்தனர். அவர்களுக்கு கூலியாக தங்க மணிகள் கிடைத்தன.
சிலர் திருட்டுத்தனமாக அங்கு வந்து காய்களை எடுத்த போது அவர்களுக்கு அந்தக் காய்களிலிருந்து தங்க மணிகள் கிடைக்கவில்லை. புழுக்களே கிடைத்தன.
வேமனா சிறந்த ரசவதியாகத் திகழ்ந்தார். அவரால் எதையும் பொன்னாக மாற்ற முடிந்தது
வேமனா அசல யோகம் என்னும் ஒரு யோக முறையை உபதேசித்தார். அனைத்தையும் கடந்ததே அசலம் எனப்படும்.
இறைவனை அடைவதற்கான தத்துவ தர்சனங்கள் பல.
ஆனால் இறைவன் ஒருவனே
விவேகம் என்னும் அற்புதமான கோடாலியை எடு
அவித்யா என்னும் காட்டை அழி
அறிவு என்னும் பெரும் விளக்கைக் கையில் எடு
மோக்ஷத்தைக் காண்
கொவிலும் கல்; உள்ளே இருக்கும் விக்ரஹமும் கல்
நீ எதைத் தொழுகிறாய் என்று கேட்கும் அவர் உள்ளே இருக்கிறான் இறைவன் அவனைப் பார் என்கிறார்.
“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?”
என்ற சிவ வாக்கிய சித்தரின் கருத்தை வேமனாவின் கவிதைகளில் காண முடிகிறது.
இறைவனை உள்ளே பார் என்று அவர் உபதேசித்தருளினார்.
தூய்மையான இதயம் இல்லாமல் சடங்குகள் எதற்காக?
பானை சுத்தமாய் இல்லாதபோது சமைப்பது ஏன்?
மனம் தூய்மையாக இல்லாத போது வழிபாடு ஏன்?
என்று அவர் கேட்கிறார்.
தூய்மையான இத்யயத்துடன் செய்யப்படும் தர்மம் சிறிதாய் இருந்தாலும் நல்லது. என்று சொல்லும் அவர் உதாரணமாக ஆலமரத்தின் விதை சிறிதாக இருந்தாலும் மரம் பெரிதாக வளர்கிறதல்லவா? என்று சுட்டிக் காட்டுகிறார்.
ஒரு கீழான மனிதன் எப்போதுமே படாடோபமாய் பேசுவான். ஒரு நல்ல மனிதன் எப்போதுமே இனிமையாகப் பேசுவான். தங்கமானது பித்தளையைப் போல சத்தம் போடாது இல்லையா?
என்று கேட்கிறார் அவர்.
கூடை நிறைய பளபளக்கும் மதிப்பற்ற கற்களை விட நீலம் போன்ற ஒரு ரத்தினம் இருந்தால் போதும். மட்டமான ஏராளமான நூல்களை விட ஒரே ஒரு நல்ல கவிதை போதும் நல்ல இன்பத்தையும் ஊக்கத்தையும் பெற!
இன்னும் பல பாடல்களில் அவர் என்றும் நிலைத்து நிற்கும் வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களைக் கூறுகிறார். அவற்றில் சில இதோ:
மிளகு கருப்பாக இருக்கிறது. அதைக் கடித்தவுடன் அதன் காரம் உங்களுக்கு எரிச்சலைத் தருகிறது. ஒரு நல்ல மனிதனும் இப்படித்தான் இருப்பான். எவரையும் அவரது தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களது நிஜமான ஆளுமையை வைத்தே மதிப்பிட வேண்டும்.
நீர் நிறைந்த நதி கம்பீரமாகப் பாய்கிறது. அதனுடைய ஆழத்தையோ.அல்லது அது போகும் பாதையையோ அல்லது அதன் வேகத்தையொ அது நிரூபிக்கத் தேவை இல்லை. ஆனால் போகும் பாதை சீராக இல்லாத ஒரு சின்ன நீரோடை பாறைகளின் ஊடேயும் காடுகளின் உடேயும் வேகமாக அதிக சத்தத்துடன் பாய்கிறது. பிரபுத்வமான நல்ல நடத்தையே ஒருவரின் குணாதிசயத்தைக் காண்பிக்கிறது. வெறும் சத்தம் ஒருவரின் நல்ல குணங்களைக் காண்பிக்காது.
நீரில் இருக்கும் முதலையானது ஒரு யானையைக் கூட இழுத்து விடும்; ஆனால் அதிலிருந்து வெளியே இருக்கும் போது அது மெலிந்த ஒரு நாயைக் கூட எதிர்க்க முடியாது. இதுதான் ஸ்தான பலம் எனப்படும் இருக்குமிடத்தைப் பொருத்து ஏற்படும் வலிமையாகும்.
ஒரு படகானது நீரில் எளிதாகப் போகும். ஆனால் அதுவே நிலத்திலோ என்றால் ஒரு அங்குலம் கூட நகராது. ஆக இதுவே சரியான இடத்தில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்பது பெறப்படுகிறது. திறமைசாலியான ஒருவன் கூட தவறான இடத்தில் இருந்தால் தோல்வியையே அடைவான்.
கிராமத்தலைவனுக்கு மோசடிப் பேர்வழி யார் என்று தெரியும். அதற்குத் தக அவனை அவன் நடத்துவான். அதே போல கடவுளிடம் யாரும் எதையும் மறைக்க் முடியாது. ஒரு மனைவி தன் கணவனின் பசியை அறிவாள்.
இந்தப் பாடலால் அறியப்படுவது என்னவெனில் ஒருவன் எப்போதும் தனக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தான்.
சிப்பிக்குள் விழும் மழை நீர் முத்தாக மாறுகிறது. ஆனால் நீருக்குள் விழும் மழை நீரோ நீருடனேயே கலக்கிறது. வெற்றி அடைய விதிக்கப்பட்ட ஒருவன் வாய்ப்பைத் தவற விடவே மாட்டான். சரியான நேரமும் காலமும் இடமுமே வெற்றி பெறத் தேவையானவை.
இப்படி நூற்றுக்கணக்கான நீதி மொழிகளை சரளமான தெலுங்கு வார்த்தைகளில் மிக அழகுறத் தருகிறார் வேமன கவி. அவை பட்டி தொட்டிகளில் எல்லாம் சாமான்யரால் இன்று கூட மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேமன சதகம் என்ற அவரது நூறு பாடல்களைக் கொண்ட சதக நூல் பிரசித்தி பெற்ற நூலாகத் திகிழகிறது.
அனந்தப்பூரில் கத்ரி தாலுகாவில் உள்ள கதருபள்ளியில் அவர் சமாதி அடைந்தார். அவரது சமாதி உள்ள இடத்தில் ஒரு அடையாளக் கல் உள்ளது.
வேமனாவின் கவிதைகள் பள்ளிக்கூட பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. ஆந்திர அரசு 2008ம் ஆண்டு அவர் பெயரை ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சூட்டியுள்ளது.
1947ம் ஆண்டு யோகி வேமனா என்ற படத்தில் நாகையா நடித்துள்ளார்.
இன்னொரு படமான ஶ்ரீ வேமன சரித்ரா 1986ல் வெளியிடப்பட்டது.
வேமனாவின் தபால் தலை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
யோகி வேமனா பாரதத்தின் தலை சிறந்த மகான்களில் ஒருவர் என்பதையும் அவர் கூறும் நீதிகள் மனித குலம் அனைத்திற்கும் பொதுவானவை என்பதையும் அவர் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது நீதி பாடல்களைப் படிப்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
யோகி வேமனாவின் திருவடி போற்றி.
நன்றி வணக்கம்.
*********