
Written by London Swaminathan
Post No. 14,010
Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 22–ம் தேதி 2024-ம் ஆண்டு
*****
ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எவ்வாறு குற்றமாகும்? : உச்சநீதிமன்றம் கேள்வி
மசூதியில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மசூதியில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவர் மீதான குற்றவியல் விசாரணையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.
அப்போது, ஒரு மதம் சார்ந்த குறிப்பிட்ட வார்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மசூதிக்குள் நுழைந்ததாக கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்தது யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 503-ன் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் பிரிவு 447-ன் கீழ் குற்றவியல் அத்துமீறல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
பின்னர் மனுவின் நகலை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

xxxxxx
பூட்டானின் தேசிய தின விழாவில் சத்குரு பங்கேற்பு!
:பூட்டானின் 177-வது தேசிய தின விழா கொண்டாட்டம் இன்று (டிச.17) அந்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ், பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கின் அழைப்பின் பேரில் அரசு விருந்தினராக கலந்து கொண்டார்.
இது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவில் “அழகிய பூட்டான், உங்கள் தேசிய தினத்தில் இங்கு இருப்பது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமும் கௌரவமும் ஆகும். அரசர், அரச குடும்பத்தினர் மற்றும் பூட்டானின் அற்புதமான குடிமக்கள் அனைவரது உபசரிப்பும் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும் நெஞ்சைத் தொடுவதாகவும் உள்ளது. எண்களோடு போட்டியிடுவதற்கு மேல் தனது குடிமக்களின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை தரும் நாடு, மனிதகுலம் முழுவதற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அழகிய பூட்டான் நாட்டிற்கும் அதன் குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்” எனக் கூறியுள்ளார்.
பூட்டானின் தேசிய விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புதன்கிழமை மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சி மற்றும் அரச விருந்து ஆகியவற்றிலும் சத்குரு கலந்து கொண்டார்.
பூட்டானின் முதல் மன்னர் கோங்சார் உக்யென் வாங்சுக்கின் முடிசூட்டு விழா 1907-இல் நடைபெற்றது. இதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் தேதி பூட்டானில் தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது
இந்தியாவும் பூடானும் கலாச்சாரம் , பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் உறவுகளில் நீண்ட கால நட்பைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன.
*****
Hinduphobia Tracker துவக்கம்
இந்துக்களுக்கு எதிரான செயல்கள், படைப்புகள் மற்றும் சொற்பொழிவுகளை வெளி உலகிற்குத் தெரிவிக்க ஹிந்து போபியா ட்ராக்கர் Hinduphobia Tracker என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது இந்துக்களை வெறுக்கும் ஆட்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் இது பதிவு செய்யும். இந்து விரோதிகளின் அவதூறுகளை பட்டியலிடும் இந்த அமைப்பினை ஒ பி இந்தியா OpIndia ஆசிரியர் மற்றும் தலைமை அதிகாரிகளான நூபுர ஷர்மா, ராகுல் ரோஷன் ஆகிய இருவரும் நடத்தும் Gavishti Foundation கவிஷ்டி பவுண்டேஷன் துவக்கியுள்ளது .
சர்வதேச விதிமுறைகளை அனுசரித்து, எட்டு வகையான குற்றங்களை இந்த அமைப்பு பட்டியலிடும்; இந்து சமய பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இந்து மத சின்னங்களை அவமதிக்கும் செயல்கள், அதிரடி மதமாற்றம், இந்து மதத்தை எதிர்த்து அவதூறு கற்பிக்கும் எழுத்துக்கள் பேச்சுக்கள், செயல்கள் ஆகியன இந்த எட்டு வகைகளில் அடங்கும். இனி இத்தகைய செயல்களை ஒபி இந்தியாவுக்கு அனுப்பலாம். ஒபி இந்தியா என்ற தளத்தை கூகுள் மூலம் எளிதில் கண்டு[பிடிக்கலாம்; அணுகலாம்.
xxxxxx
பிரதமரின் ஆலமர பிரதட்சிணம்
உலகின் மிகப்பெரிய பண்டிகையான மஹா கும்பமேளாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் துவங்கிவிட்டன .அடுத்த ஆண்டு, அதாவது 2025 ஆம் ஆண்டு ,கங்கை, யமுனை சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பிரயாக் ராஜ் நகரில் இது நடைபெறும். திரிவேணி சங்கம் என்பது இதன் இன்னும் ஒரு பெயர்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்த நகருக்கு கார்த்திகை நாளன்று வந்து பல புதிய திட்டங்களைத் துவக்கினார். அங்குள்ள அழியாத ஆலமரத்தை வலம் வந்து உலகம் முழுதும் சுபிட்சம் அடைய பிரார்த்தனை செய்தார்
அக்ஷய வட என்பதன் பொருள் காலத்தால் அழியாத ஆலமரம் என்பதாகும். இது பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் மும்மூர்த்தி வடிவம் என்று கருதப்படுகிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலுள்ள இந்த ஆல மரத்தை பிரதமர் வலம் வந்து பிரார்த்தனை செய்தார்.
உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏற்பாடு செய்த பூஜைகளில் எஜமானன் என்ற ஸ்தானத்தில் இருந்து , பிரதமர் கிரியைகளையும் செய்தார்
xxxxxx
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு வழிகாட்டி கொடுத்தது பெருமாள் தான்: திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேச்சு
வில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நடந்த திவ்ய பாசுரம் இசை வெளியீட்டு விழாவில் திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேசியதாவது:
இந்த விழாவில், நானும், இளையராஜாவும் பங்கேற்கும் வாய்ப்பு ஆண்டாளின் அனுக்கிரகத்தால், அழைப்பால் கிடைத்தது. 82 வயதாகும் இளையராஜா, 28 வயது இளையராஜா போல் உள்ளார். இவரது இசைஞானம் அளப்பரியது. அவர், 108 வயதையும் கடந்து இசை உலகின் உச்சத்தை தொட வேண்டும் என, மங்களாசாசனம் செய்கிறோம்.
இயற்கையை மாசுபடுத்தக் கூடாது என, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்ற பாசுரத்தில் ஆண்டாள் சொல்லி உள்ளார்.
நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டுமே தவிர பாழாக்கக்கூடாது. ஆலயங்களின் பெருமையையும், இயற்கையின் அருமையையும் காப்பாற்றுவது நம் கடமை. இதையெல்லாம் ஆண்டாள் திருப்பாவையில் நமக்கு சொல்லி உள்ளார்.
இன்று பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது, 33 சதவீதத்தை தாண்டவில்லை. ஆனால், ஆண்டாளுக்கு சர்வ சுதந்திரத்தை பெருமாள் கொடுத்திருந்தார். இந்த மண்ணின் ஆட்சியாளர் ஆண்டாள்தான். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு வழிகாட்டி கொடுத்ததே பெருமாள் தான்.
இந்த மார்கழி மாதத்தில் தினமும் திருப்பாவை பாடல் படித்து ஆண்டாளுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேசினார்.
xxxxxx
இளையராஜா வருகையின் போது ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் நடந்தது என்ன?
ஸ்ரீவில்லிபுத்துார்: இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது பற்றி, மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லதுரை, விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார். இசைஞானி இளையராஜா, இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் வாசலிலேயே யானையை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற அவருக்கு, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார்.
கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், சிலர் வதந்திகளை பரப்பி இருந்தார்கள்
பொதுவாக கோவில் கருவறை என்று அழைக்கப்படும் கர்ப்ப கிரகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், தக்கார்கள், அறங்காவலர்கள் போன்றவர்களும், மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை.
கருவறையில் அந்தந்த கோவிலில் பூஜை செய்யும் ஸ்தானிகர்கள், பட்டாச்சாரியார்கள், பரம்பரை குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதே கோவிலில், வேறு சன்னதியில் பூஜை செய்யும் குருக்களாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகம விதிப்படி கட்டிய கோவில்களில், பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை இதுதான்.
இளையராஜா கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்று, அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.
‘ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் (கர்ப்ப கிரகம் முன் உள்ள இடம்) மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கோவில் வழக்கப்படி அனுமதி இல்லை’ என திரிதண்டி ஜீயர் தெரிவித்ததை இளையராஜா ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபம் முன் நின்று தரிசனம் செய்தார் என்று, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.
இது குறித்து இளையராஜா, சமூக வலைதள பதிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது;
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை.
நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று
இளையராஜா கூறி உள்ளார்.
xxxxxxxxxx
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது உதயநிதி குறித்து அவதுாறு:
மூன்று ஜீயர்களை அழைத்து, துணை முதல்வர் உதயநிதி பரிகார பூஜை செய்ததாக, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்தை பதிவு செய்த, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்
. சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார். அதில், கூறியிருந்ததாவது:
பதற்றத்தில் ஏதேதோ பிதற்றுகிறீர்கள். உதயநிதி மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார்.
பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார்.
உதயநிதி வெளியில் வேண்டுமானால் எதிர்ப்பது போல செய்யலாம். உண்மையில் அவர் சனாதனத்தின் பக்கம் தான் தெரியுமா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் வட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை நேற்று கைது செய்தனர்
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் சென்னை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கம்யூட்டர், ஹார்ட் டிஸ்க் பொருட்களை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
******
ஆதிபுரீஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு தரிசனம்
சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் வடிவுடையம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பௌர்ணமியன்று ஆதிபுரீஸ்வரர் கவசம் இன்றி காட்சி அளிப்பார். இந்த வைபவத்தின் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவும் நேற்று இரவு ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். ஆதிபுரீஸ்வரர், வடிவுடை அம்மனை மனமுருகி வேண்டி சென்றார். திருவொற்றியூர் எம்எல்ஏ கே பி சங்கர் உள்ளிட்டோர் துர்கா ஸ்டாலின் உடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
*******
சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி!
சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் கலைமகள் மாத இதழ் மற்றும் தேஜஸ் பவுண்டேசன் சார்பில் ஜடா பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலைமகள் மாத இதழின் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்பட்டு கணேஷ கனபாடிகள் தலைமையில் கணபதி பூஜை, லக்ஷ்மி பூஜை, கனபாடம் மற்றும் ஜடா பாராயண பூஜைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியை ஆர்.கே.ராகவன் ஐபிஎஸ் தொடங்கி வைத்த நிலையில், கலைமகள் மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தேஜஸ் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் பி.டி.டி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஸ்ரீ மான் உ.வே.ஆனந்த பத்மநாபாச்சாரியார், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, இது போன்ற பிரச்சாரங்கள் நடைபெறுவது, தேசத்திற்கும், தேச மக்களுக்கும் நலன்தரும் என்று அவர் கூறினார்.
******
திருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம்.. 24-ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் 8 மையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது .
பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்க ல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
XXXXXXX
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு
டிசம்பர் 29 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,
ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
நேரம் மாறுதலைக் கவனத்திற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். வணக்கம்.
—-subham—-
Tags- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 22-12-2024