நம்மாழ்வார் – 2 (Post No.14,008)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,008

Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் 15-12-24 அன்று ஒளிபரப்பான உரை.

இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

நம்மாழ்வார் – 2

ச. நாகராஜன்

முப்பததைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் நம்மாழ்வார் திருநாடு அலங்கரிக்கலானார்.

நம்மாழ்வாரின் பிரிவைத் தாங்க முடியாத மதுரகவி ஆழ்வார் அவரது பாசுரங்களைப் பாடிப் பரவி பரப்பியதோடு திருநகரியில் அவருக்கென ஒரு  கோவிலையும் எழுப்பினார். அதில் நம்மாழ்வாரின் விக்கிரகத்தையும் ஸ்தாபித்தார்.

ஒருநாள் அவரது பெருமைகளை வழக்கம் போல வீதியில் கூவிச் செல்கையில் பொறாமை பிடித்த புலவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி ‘இதை நீர் நிரூபிக்க வேண்டும்’ என்றனர்.

இதனால் திகைத்த மதுரகவியார் நம்மாழ்வாரைத் துதிக்க ஒரு விருத்த வேதியர் அவரைச் சந்தித்தார்.

“நீர் கவலைப்பட வேண்டாம். நான் சொல்வதைச் செய்தால் போதும்’ என்று கூறினார்.

பின்னர் அவர்,

:கண்ணன் கழலிணை

நண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம்

திண்ணம் நாரணமே” என்ற பாசுரத்தின் முதல் அடியை ஒரு ஏட்டில் எழுதிக் கொண்டு போய் அந்த ஏட்டை அந்தப் புலவர்கள் வைத்திருக்கும் சங்கப் பலகையில் வைக்க அனுமதி பெறுங்கள். அது போதும்” என்றார்.

அதன் படியே மதுரகவியாரும் ஒரு ஏட்டில் முதல் அடியை எழுதி  சங்கப் புலவர்களிடம் தர அவர்கள் சிரித்தவாறே அந்த ஏட்டை சங்கப் பலகையில் வைத்தனர். பொற்றாமரைக் குளத்தில் விடப்பட்ட  அப்பலகையின் மீது அவர்களும் நின்றனர்.

ஏட்டை மட்டும் ஏந்திக் கொண்ட சங்கப் பலகை மற்ற புலவர்களை நீரில் ஆழ்த்தியது. அவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர்.

நம்மாழ்வாரின் மகிமையை நன்கு அறிந்து கொண்ட அவர்கள் அவரைப் போற்றலாயினர்.

அது மட்டுமின்றி நம்மாழ்வாரின் பெருமையை தனித்தனிப் பாடல்களாக ஒவ்வொரு புலவரும் எழுதி சமர்ப்பிக்க எண்ணம் கொண்டனர்.

அப்படியே ஒவ்வொருவரும் ஒரு பாடலை எழுதிப் படிக்க முயன்ற போது என்ன ஆச்சரியம், அனைத்தும் ஒரே பாடலாகவே இருந்தன.

சேமங் குருகையோ? செய்ய திருப்பாற்கடலோ?

நாமம் பராங்குசமோ? நாரணமோ? – தாமம்

துளவோ? வகுளமோ? தோளிரண்டோ? நான்கு

முளவோ? பெருமா னுனக்கு

      என்ற பாடலாகவே அனைவர் எழுதியதும் இருந்தது.

ஈயாடுவதோ கருடற்கெதிரே? இரவிக்கெதிர்

   மின்மினி யாடுவதோ?

நாயாடுவதோ உறுவெம்புலிமுன்?

   நரி கேசரி முன் நடையாடுவதோ?

பேயாடுவதோ அழகூர்வசி முன்? பெருமாள்

    வகுளாபரணன் அருள் கூர்ந்து

ஒவாதுரை ஆயிரமாமறையின் ஒரு சொற்

    பெருமோ உலகிற்கவியே

கருடனுடைய வேகத்திற்கு எதிரே ஈ எங்கே?

ஒளிதரும் சூரியன் முன் மின்மினி வெளிச்சம் எங்கே?

புலிக்கு முன்னே நாய் எங்கே?

சிங்கத்தின் கம்பீர நடைக்கு முன்னே நரியின் நடை எங்கே?

தேவலோக ஊர்வசி முன் பேய் ஆடுவது எப்படி  இருக்கும்?

சடகோபரின் அருளிய  ஒரு சொல்லின் பெருமைக்கு அனைத்து வித்துவான்களின் கவிகள் ஈடாகுமோ/

என்று இப்படி பலபடப் புகழ்ந்து ஒவ்வொருவரும் பாடினர்.

நம்மாழ்வார் வைகாசி விசாகத்தன்று அவதரித்தார்.

அதை ஒட்டி மலர்ந்த பாடல் இது:

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறியப் பகர்கின்றேன்

சீராரும் வேதந் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்.

மதுரகவியாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பில் அவர் நம்மாழ்வார் பாசுரங்களைப் போற்றிப் புகழ்கிறார்.

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற

அருளினான் அவ்வருமறையின் பொருள்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு

ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

வானணியும் மாமாடக் குருகை  மன்னன் வாழியே

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே

சேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே

திருக்குருகை சடகோபன் திருவடிகள் வாழியே

என்று கூறி என் உரையை முடிக்கின்றேன். நன்றி வணக்கம்!

 —-subham—–

Leave a comment

Leave a comment