
Post No. 14,011
Date uploaded in Sydney, Australia – —24 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
kalkionlineல் 9-12-24 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை
வியக்க வைக்கும் 90 வயது நடிகை ஷர்லி மக்லீன்!!
ச. நாகராஜன்
ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஷர்லீ மக்லீனுக்கு வயது 90. (பிறப்பு : 24 ஏப்ரல் 1934 வயது 90) இன்னும் ‘இளமை’ குன்றாமல் அதே உற்சாகத்துடன் அனைவரையும் கவரும் விதத்தில் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் அவர்.
2024 அக்டோபர் மாதம் 22ம் தேதி அவரது புதிய புத்தகமான The Wall of Life வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. தன் வாழ்க்கையில் இளமைக் காலம் தொட்டு உள்ள 150 அழகிய படங்களைத் தேர்ந்தெடுத்து இதில் அவர் வெளியிட்டுள்ளார்.
“நான் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன்; அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்கிறார் அவர்.
1983ல் அவரது படமான ‘டெர்ம்ஸ் ஆஃப் எண்டியர்மெண்ட்’ ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்றது. மொத்தம் ஆறு முறை ஆஸ்காருக்காக அவர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.
இளமையிலேயே ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட அவர் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டவர். இமயமலைக்கு வந்து தியானத்தை செய்தவர்.
தனது ஏராளமான அதீத உளவியல் அனுபவங்களைப் பல கட்டுரைகளின் வாயிலாகவும் புத்தகங்களின் மூலமும் அவர் பகிர்ந்துள்ளார்.
ஒரு லாமா அவருக்கு கழுத்தைச் சுற்றி அணியும் ஸ்கார்ப் ஒன்றைப் பாதுகாப்புக் கவசமாக அவருக்குத் தந்தார். அதை அணிந்து கொண்டு இமயமலையில் அவர் ஒரு சிறுத்தையிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.
அங்கு அந்தக் கடுங்குளிரில் அவர் போர்வை எதையும் போத்திக்கொள்ளவில்லை. “லாமா சொன்ன ஒரு மந்திரத்தை உச்சரித்தேன். உடலே வெதுவெதுப்பாக இருந்தது” என்று கூறி அனைவரையும் பிரமிக்க வைத்தார் அவர்.
பறக்கும் தட்டுகளில் ஈடுபாடு கொண்ட அவர் வானவெளியில் இனம் தெரியாத பறக்கும் பொருள்களைப் பார்த்ததாக வேறு கூறியிருக்கிறார்.
எழுபது ஆண்டு காலம் திரைத்துறையிலும் தொலைக்காட்சியிலும் வெற்றிகரமாக வலம் வந்த அவர் தான் ‘எப்படி சபையைப் பார்த்து கூச்சப்படுவதிலிருந்தும் நடுங்குவதிலிருந்தும் மீண்டு வர முடிந்தது’ என்பதை வெளிப்படையாகவே கூறி இருக்கிறர்.
நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் இருந்த ஒரு அகுபங்க்சர் நிபுணரிடம் தான் சென்றதாகவும் அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் பின்னர் சபை நடுக்கம் என்ற பேச்சே அவர் வாழ்வில் எழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சபை நடுக்கம் ஏன் வந்தது என்பதைப் பற்றி அவர் கூறும் விவரம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
தனது முந்தைய ஜென்மங்களைப் பற்றி அவர் நன்கு அறிந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு அரசவையில் அரசவைக் கோமாளியாக இருந்ததாகவும் ஒரு நிகழ்ச்சியின் போது மன்னரால் தண்டிக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த நிகழ்ச்சியை நினைத்தாலேயே தலை உருண்டு ஓடுவதைத் தன்னால் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது என்று கூறிய அவர், “பின்னர் ஏன் எனக்கு சபையைக் கண்டால் நடுக்கம் வராமல் இருக்கும்” என்றார்.
அவரது அதீத உளவியல் ஆற்றல் சம்பவங்களும் அவரது முந்தைய ஜென்ம வரலாறுகளும் படிக்கச் சுவையாக இருக்கும்.
தொண்ணூறு வயதிலும் உற்சாகமாக இருக்கும் இவரைப் போன்ற அதீத உளவியல் ஆற்றல் கொண்ட இன்னொரு நடிகையை உலகம் இனி பார்க்குமா என்பது சந்தேகம் தான்!
**