
Post No. 14,016
Date uploaded in Sydney, Australia – 25 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆண்டாள் காலத்தை ஏழாம் நூற்றாண்டு என்றும் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் இணைய தளங்களிலும் நூல்களிலும் எழுதியிருப்பதைக் காணலாம். மு.ராகவையங்கார் என்பவர் அந்தக் காலத்தில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் 9-ஆம் நூற்றாண்டு என்று நிரூபித்தார். ஆயினும் ஆண்டாள் மற்றும் அவரது வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் காலத்திய பாண்டிய மன்னர் யார் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆக, இந்த இரண்டு குழப்பங்களும் நீடிக்கின்றன.
எப்படிக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் என்ற வரி சிலப்பதிகார மன்னர் காலம் பற்றிய புதிருக்கு விடை கண்டதோ அதே போல ஆண்டாளும் ஒரு வரியைத் திருப்பாவையில் பாடியதால் அவரை இரு நூறு அல்லது முன்னூறு ஆண்டு வட்டத்துக்குள் வைக்க முடிகிறது .
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.- பாடல் 13
ஆண்டாள் மிகப்பெரிய அறிஞர். அவருக்கு A to Z (Astronomy to Zoology) அஸ்ட்ரானாமி /வானவியல் முதல் சூவாலஜி என்னும் விலங்கியல் வரை எல்லாம் தெரியும்; அவைகளை பாடலிலும் பாடியிருப்பதால் அவரது பேரறிவினை நாம் மெச்ச முடிகிறது. சிங்கம் பற்றி அவர் பாடியது அவருடைய விலங்கியல் அறிவினைக் காட்டுகிறது; நகைகள் மற்றும் திருமண முறை பற்றி வரிசைக் கிரமத்தில் நாச்சியார் திருமொழியில் பாடி இருப்பதால் அவருடைய உலகியல் அறிவினை நாம் அறிய முடிகிறது மார்கழி பற்றி நான்குத் திருப்பாவைப் பாடல்களில் பாடியிருப்பதால் அவருடை கால ஞானத்தை Time Sense நாம் அறிகிறோம். தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி மழை பெய்ய வேண்டுவதால் அவரது தேசபக்கத்தியையும் லோகா சமஸ்தா சுகினோ பயந்து என்ற நல்ல ஞானிகளின் குணத்தையும் காண முடிகிறது. அவள் டீன் ஏஜ் கேர்ள் Teen Age Girl அல்ல. சம்பந்தர் போல பிறவி ஞானி .
வியாழன் என்றால் ஜூபிடர் JUPITER என்னும் பிருஹஸ்பதி/ குரு கிரகம். வெள்ளி என்றால் சுக்ரன் என்னும் வீனஸ் VENUS அல்லது வெள்ளி கிரகம். இந்த இரண்டையும் வானத்தில் காணலாம். இதில் வெள்ளி மட்டும் சில காலத்தில் விடி வெள்ளியாக சூரிய உதயத்துக்கு முன்னரும் சில காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் தோன்றும். ஆண்டாள் அதிகாலைப் பொழுதில் தோழிகளை எழுப்பச் சென்றபோது வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமனமானதைக் கண்டார் உடனே இதை பாடலில் குறிப்பிட்டுத் தோழிகளே எழுந்திருங்கள் என்று பாடுகிறார். வானவியல் தெரிந்தவர்கள் இது கிபி. 600 முதல் கி.பி 900 வரை 4 முறை நிகழந்ததைக் கொண்டு அவரை 300 ஆண்டு கால வட்டத்திற்குள் வைக்கின்றார்கள்.

(Reference 1- திருப்பாவை பதின்மூன்றாவது பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற ஒரு சொற்றொடார் வருகிறது. இந்த சொற்றொடரை வைத்துக்கொண்டு மகாவித்துவான் முகவை ராகவ ஐயங்கார் (1878-1960), ஆண்டாள் தமது திருப்பாவையின் பதின்மூன்றாம் பாசுரம் பாடி அருளிய நாளன்று நிலவிய வானவியல் அமைப்புகளை ஆழ்ந்து ஆராய்ந்து திருப்பாவையின் காலத்தை கி.பி. 885 அல்லது கி.பி. 886 என தோராயமாக நிர்ணயம் செய்துள்ளார். தமது ஆய்வு முடிவுகளை ‘ஆழ்வார்கள் கால நிலை‘ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.)
(Reference 2 ஆண்டாள் திருப்பாவை பாடி அருளிய காலம்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்துள்ளபடியால் இந்த தேதிகளில் ஒன்று மட்டும் ஆண்டாள் பாடி அருளிய திருப்பாவை 13 ஆம் பாசுரம் பாடிய நாளாக இருக்க வாய்ப்புள்ளது.)
*****
ஆயினும் எவரும், மொழியியல் ரீதியில் (Linguistic approach) அவரை அணுகவில்லை ; இதற்கு அதிக மொழியியல் ஞானம் தேவை. அதாவது ஒரு மொழி வளர்ந்து கொண்டே இருக்கும்; இப்பொழுது கபிலர் பாடலையும் கம்பன் பாடலையும் கண்ணதாசன் பாடலையும் ஒரு தமிழ் தெரிந்த தமிழனிடம் கொடுத்தால், அவைகளை எளிதில் கால வரிசைப்படுத்திவிடுவான். இதே போல ஆண்டாள் பாடலையும் கம்பன் பாடலையும் அருகருகே வைத்தால் சொற்களைக் கொண்டும், பாடலின் யாப்பு இலக்கணத்தைக் கொண்டும் அவர் சொல்லும் கருத்தினைக் கொண்டும் காலத்தைக் கண்டு பிடிக்கலாம்.
ஆண்டாளைப் போல திருவெம்பாவை பாடிய மாணிக்க வாசகர் காலம் பற்றிய புதிரும் தீர்ந்தபாடில்லை. காளிதாசனை அறிஞர்கள் எழுநூறு ஆண்டு வட்டத்தில் வைக்கின்றனர். இந்திய வரலாறு புதிர்கள் நிறைந்தது; மாணிக்க வாசகர் நால்வரில் முதலாமவர் என்று நான் என்னுடைய ஆராய்ச்சியில் காட்டியுள்ளேன். அவர் கணபதி பற்றியோ, லிங்கம் பற்றியோ பாடவில்லை. அதே போல . காளிதாசநும் கணபதி பற்றிப் பாடவில்லை இது போன்ற குறிப்புகளும் பாடல் நடையும் ஒரு வகையில் காலத்தைக் கணிக்க உதவும்.
ஆண்டாளும் பறை , தட்டொளி, ஆந்தனை, உக்கம் போன்ற பல புதிய சொற்களைக் கையாள்கிறார்.
திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதால் ஆண்டாளைக் காலத்தால் முந்தியவர் என்றே நான் கருதுகிறேன். அதாவது, அவரை மாணிக்க வாசகருக்கு அருகில் வைக்கவேண்டும் ஆறாவது ஏழாவது நூற்றாண்டு என்றே கருத வேண்டும்.
மேலை நாடுகளில் கவிஞர்களின் சொற்களையும் பாடல்களையும் கம்பியூட்டரில் கொடுத்து காலத்தைக் கணிக்கின்றனர். அதே போல ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரண்டு நூல்களையும் கம்ப்யூட்டரில் கொடுத்து ஏனைய நூல்களுடன் ஆராயலாம். இந்தத் துறையை தமிழ் பல்கலைக் கழகம் அல்லது தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் செய்யலாம். கம்ப்யூட்டர் அறிவுடன் தமிழ் மொழி அறிவும் இருந்தால் சரியான முடிவுக்கு வரமுடியும். இவ்வாறு கொடுக்காமலேயே திருப்பாவையையும் திருவெம்பாவையையும் ஒப்பிடுகையில் இருவரின் காலமும் அருகருகே இருப்பதை நான் காண்கிறேன் .
****
ஆண்டாள் போடும் இன்னுமொரு புதிர்
மார்கழி மாதம் முதல் நாள் பௌர்ணமி திதியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டாள் தமது திருப்பாவையின் முதல் பாசுரமான ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளியுள்ளார் என்பது ஒரு கருத்து. இது சரியென்றால் அவர் முப்பது பாடல்களையும் பாடி முடிக்கும் நாளன்று அடுத்த பௌர்ணமி திதி வந்திருக்க வேண்டும் அது தைப்பூச பௌர்ணமி திதியாக இருக்கவேண்டும் ; இதற்கிடையில் பொங்கல் என்னும் மகர சங்கராந்தி முடிந்திருக்கவேண்டும் ; மார்கழி என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு; இவைகளை அடுத்த கட்டுரையில் காண்போம்.
—subham—
Tags– ஆண்டாள் காலம் ,குழப்பம்,திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 4 , வியாழன், வெள்ளி, மாணிக்கவாசகர், திருவெம்பாவை