WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,015
Date uploaded in Sydney, Australia – —25 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
22-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை உலகம் அறிய வழி வகுத்தவரான திரு மகேந்ந்திரநாத் குப்தா அவர்களைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்..
பரமஹம்ஸர் அவரை மாஸ்டர் என்று அழைப்பார். ஆகவே அவரை அனைவரும் மரியாதையுடன் மாஸ்டர் மஹாஷய் என்று கூறுவர்.
அவர் எம் என்றே அனைவராலும் அறியப்பட்டார்; அறியப்படுகிறார்.
‘எம்’ என்றே அவர் அனைத்து ஆன்மீக விஷயங்களையும் எழுதுவது வழக்கம்.
அவருக்கு இன்னும் சில புனைப்பெயர்கள் உண்டு – மணி, மோஹினி மோஹன், பக்தர் – இப்படியெல்லாம் அவர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்.
1854ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அவர் பிறந்தார். அன்று நாக பஞ்சமி தினம். சதயம் அவரது நக்ஷத்திரம்.
நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் ஆக எட்டுக் குழந்தைகளில் மூன்றாவதாக அவர் பிறந்தார். அவரது தந்தையார் மதுசூதன் குப்தாவும் தாயார் ஸ்வர்ணமயி தேவியும் இயல்பாகவே தெய்வ பக்தி நிரம்ப உடைய எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மதுசூதன் குப்தா கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் வேலை பார்த்து வந்தார்.
மகேந்திரநாதர் இளமையில் ஒரு பாடசாலையில் ஒரு குருவிடம் கல்வி கற்றார். பின்னர் ஒரு பள்ளியில் சேர்ந்து படித்தார். அவர் 1867ம் ஆண்டு எட்டாம் வகுப்பில் படிக்கும் போது அவருக்கு வயது 13. அப்போது முதல் அவர் டயரி எழுதுவதை தனது வழக்கமாகக் கொண்டார். இப்படி ஒரு நாட்குறிப்பை தினமும் எழுத வேண்டும் என்று அவரிடம் யாரும் சொல்லவில்லை. தானாக ஆரம்பித்தார் இந்த நற்பழக்கத்தை. இதன் பலன் 15 ஆண்டுகள் கழித்து அவர் 1882 பிப்ரவரி மாதம் 25ம் தேதி பரமஹம்ஸரைச் சந்தித்த போது தான் தெரிய வந்தது. தனது நாட்குறிப்பில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை சந்திக்கும்போதெல்லாம் அங்கு நடப்பது அனைத்தையும் நாட்குறிப்பில் எழுதலானார்.
இதுவே ஶ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதமாகப் பரிணமித்தது
கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் எம் இரண்டாவதாக வந்தார். தனது எப்.ஏ தேர்வில் ஐந்தாவதாகவும் பி.ஏ. தேர்வில் மூன்றாவதாகவும் அவர் வந்தார். பின்னர் சட்டப்படிப்பை அவர் மேற்கொண்டார். அப்போது ஹிந்து சாஸ்திரங்களை சம்ஸ்கிருத மொழியிலேயே படித்துக் கரைத்துக் குடித்தார். அத்துடன் ஆங்கில இலக்கியம், தத்துவம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார். இத்துடன் ஜைன மத, புத்த மத நூல்களைக் கற்றார். ஜோதிடத்தையும் ஆயுர்வேதத்தையும் கற்று அவற்றிலும் அவர் நிபுணரானார்.
தனது படிப்பை முடிக்கும் முன்பேயே அவர் வேலை பார்க்க நேர்ந்தது. அவர் முதலில் பிரிட்டிஷ் வணிக நிறுவனத்தில் வேலை பார்த்தவர் பின் கல்வித் துறைக்குத் திரும்பினார். ஜெஸூர் மாவட்டத்தில் நரெய்ல் உயர்நிலைப் பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கல்கத்தா திரும்பி வந்து அங்கு பல பள்ளிகளிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1873ஆம் ஆண்டு பி. ஏ. படிக்கும் போது அவர் நிகுஞ்சா தேவி என்னும் அம்மையாரை மணந்தார்.
காலம் வேகமாகச் செல்லும் போது அவரது குடும்பத்தில் ஏராளமான சண்டைகள் நிகழ்ந்தன. இதனால் மிகவும் மன உளைச்சலை அடைந்த எம் வீட்டை விட்டுப் புறப்படத் தயார் ஆனார். அவரைப் புரிந்து கொண்ட அவரது மனைவியும் கூட வரத் தயார் ஆனார். அது ஒரு சனிக்கிழமை.இரவு ஒரு வாடகை வண்டியைப் பிடித்து அவர்கள் செல்லும் போது வண்டியின் ஒரு சக்கரம் முறிந்தது. நண்பர் ஒருவர் வீட்டில் அவர் அடைக்கலம் புக நேர்ந்தது. மறு நாள் ஞாயிற்றுக்கிழமை தனது சொந்தக்காரரான சித்தேஸ்வரனுடன் ஒவ்வொரு பூங்காவாக அவர் செல்ல ஆரம்பித்தார். பல பூங்காக்களில் அலைந்து திரிந்த போது சித்தேஸ்வரன், “இன்னும் ஒரு பூங்கா நதிக்கரையில் இருக்கிறது., அங்கே ஒரு பரமஹம்ஸர் இருக்கிறார். அங்கே போவோமா? என்று கேட்க இருவரும் அங்கு சென்றனர்.
கங்கைக் கரைத் தோட்டம். ரோஜா மலர்களின் கூட்டம். மகேந்திரநாதர் மெய் சிலிர்த்தார். பரமஹம்ஸரின் அறைக்கு வெளியே சென்று நின்றார். பின்னர் உள்ளே நுழைந்த போது, ராமகிருஷ்ண பரமஹம்ஸர்,”ஹரி அல்லது ராமா என்ற பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு மயிர்க்கூச்சல் எடுக்க வேண்டும். நீங்கள் சந்தியா உள்ளிட்ட எந்த சடங்குகளையும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த எம் இவரே சுகதேவர் என்று நிச்சயித்தார். அன்புடன் பரமஹம்ஸர் அவரை யார் என்று விசாரித்தார்.
அன்று முதல் பரமஹம்ஸரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ‘எம்’மால். ஒரு வாரத்திலேயே அவர் பரமஹம்ஸரின் அணுக்கத் தொண்டராக ஆகி விட்டார்.
ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 1836ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் அவதரித்தார். 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சமாதி எய்தினார்.
பரமஹம்ஸருடன் சந்திப்பு
1882ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முதலாக அவர் தக்ஷிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைச் சந்தித்தார். இதற்குச் சில மாதங்கள் முன்னரேயே நரேந்திரன், அதாவது ஸ்வாமி விவேகானந்தர் பரமஹம்ஸரிடம் வந்து விட்டார்.
விவேகானந்தர் கூறும் ஒரு சம்பவம் இது:
ஒரு நாள் அவர் பரமஹம்ஸருடன் தக்ஷிணேஸ்வரத்தில் இரவில் தங்கி இருந்தார். பஞ்சவடியில் அவர் அமர்ந்திருந்த போது திடீரென்று பரமஹம்ஸர் அவரிடம் வந்தார். சிரித்துக் கொண்டே அவரது கையை பிடித்துக் கொண்டார். பிறகு அவரைப் பார்த்து, “உனது புத்திகூர்மையும் கற்ற விஷயங்களும் இன்று சோதனைக்குள்ளாகப் போகிறது. நீ இரண்டரை தேர்வுகளைத் தான் பாஸ் செய்திருக்கிறாய். மூன்றரை தேர்வுகளைப் பார்த்த ஒரு ஆசிரியர் இங்கு வந்திருக்கிறார். வா, பார்ப்போம், அவருடனான உரையாடலில் நீ எந்த அளவு இருக்கிறாய் என்று பார்ப்போம்” என்றார்.
விருப்பத்துடனேயோ அல்லது விருப்பமில்லாமலோ விவேகானந்தர் அவருடன் செல்ல வேண்டி இருந்தது.
to be continued…………………………..