மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா (Post No.14,018)-2

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,018

Date uploaded in Sydney, Australia – 26 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்! – 2 

பரமஹம்ஸரது அறைக்குச் சென்றவுடன் அங்கிருந்த மாஸ்டர் மஹாஷய் எனப்படும் மகேந்திரநாதரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பரமஹம்ஸர். அவருடனான உரையாடல் ஆரம்பித்தது. பரமஹம்ஸரோ மௌனமாக இவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தார். பின்னர் எம் அங்கிருந்து விடை பெற்றுச் சென்றவுடன் பரமஹம்ஸர் கூறினார்: “அவர் அத்தனை தேர்வுகளையும் பாஸ் செய்து என்ன பிரயோஜனம்? ஆசிரியர் ஒரு பெண்ணைப் போல வெட்கப்படுகிறார். அவரால் அழுத்தமாகவே பேச முடியவில்லை.”

இப்படியாக விவேகானந்தரை இன்னொருவருடன் மோத விட்டு பரமஹம்ஸர் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தார்.

ஏராளமான சுவையான சம்பவங்கள் எம் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு சங்கடமான தருணத்திலும் குரு தேவர் அவரைக் காப்பாற்றுவதை அவர் கண்கூடாகக் கண்டார். குருதேவர் மீது அவர் அளவிலா பக்தி கொண்டிருந்தார்.

ஒரு சம்பவம் இது.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நடத்திய ஷ்யாம் பஜார் கிளையான   மெட்ரோபாலிடன் பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராக நான்கு வருடங்கள் பணியாற்றி வந்தார். 1886ல் ப்ரமஹம்ஸர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனது. அதனால் அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வது எம்மின் வழக்கமானது.  இதனால் பள்ளியின் வருடாந்திர தேர்வு  முடிவுகள் முந்தைய ஆண்டுகளில் வந்தது போல நன்றாக அமையவில்லை. இதை கவனித்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவரிடம், “ இப்போது நீங்கள் அடிக்கடி பரமஹம்ஸரை தரிசிக்க காஸிபூர் தோட்டத்திற்குச் சென்று விடுகிறீர்கள். அதனால் தான் தேர்வு முடிவுகள் முன்பு போல இல்லாமல் போய் விட்டது” என்றார். குருதேவரைப் பற்றி அவர் கூறியது எம்மிற்குப் பிடிக்கவில்லை. உடனடியாக தன் வேலையை ராஜிநாமா செய்தார். பரஹம்ஸரிடம் நடந்ததைக் கூறினார். பரமஹம்ஸர், ‘நன்றாகச் செய்தாய் நன்றாகச் செய்தாய்’ என்று கூறினார்.

ஆனால் பதினைந்து நாட்களில் வேலையை விட்டதன் விளைவு அவருக்குத் தெரிந்தது. குடும்பத்தில் அடுப்பு பற்ற வைக்கக் கூட முடியாத சூழ்நிலை. இது பொறுக்காத எம் அங்கும் இங்குமாக தனது வீட்டில் முதல் மாடியில் இருந்த வாரந்தாவில் மூன்று மணி நேரம் நடந்து கொண்டிருந்தார். என்ன செய்வது? குழந்தைகளுக்கு எப்படி நான் சாப்பாடு போடுவேன் என்ற கவலை அவரை வாட்டியது. அப்போது கீழேஇருந்து ஒரு குரல் கேட்டது: மஹேந்திர பாபு இருக்கிறாரா?என்று!

கீழே வந்து வந்தவரைச் சந்தித்த போது அவர் சுரேந்திரநாத் பானர்ஜி கொடுத்த ஒரு கடிதத்தைத் தந்தார். ரிப்பன் காலேஜில் புரபஸராக அவரை நியமிக்க உள்ளதாகவும் அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் கடிதம் கூறியது.  அவர் உடனே சென்று அதை ஏற்றுக் கொண்டார்.

இப்படி அவருக்கு அன்றாட பிரச்சனைகளான தீர்வுக்கும் குருதேவர் தான்; ஆன்மீக உபதேசங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் குருதேவர் தான்.

ஒரு முறை குருதேவர் கீதையில் உள்ள மிதமான சாப்பாடு, மிதமான இயக்கம் பற்றிக் கூறி அதைப் பார் என்றார். சுத்த பக்தி கொண்ட எம் குருதேவர் கூறியதை எல்லாம் கடைப்பிடித்தார். மிக உயரிய நிலையை ஆன்மீகத்தில் அடைந்தார்.

ராமகிருஷ்ண கதாம்ருதம்

மகேந்திரநாதர் ராமகிருஷ்ண கதாம்ருதத்தை முதலில் GOSPEL OF SRI RAMAKRISHNA என்று ஆங்கிலத்தில் 1897ஆம் ஆண்டு வெளியிட்டார்.

வங்காள மொழியில் இதன் முதல் பாகம் 1902லும் இரண்டாம் பாகம் 1904லும் மூன்றாம் பாகம் 1908லும் நான்காம் பாகம் 1910லும் ஐந்தாம் பாகம் 1932லும் வெளியானது.

பின்னால் ஏராளமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.

இந்த கதாம்ருதத்தை உலகிற்கு அளிப்பதற்காகவே அவர் பிறந்தார் போலும்!

ஐந்தாம் பாகத்தின் முடிவை இரவு ஒன்பது மணிக்கு அவர் எழுதி முடித்தார்.

உடனே அவருக்கு தலைவலி ஆரம்பித்தது.

அவருக்குப் பிடித்த பாட்டை அவர் வாய் முணுமுணுக்க ஆரம்பித்தது;

“ஓ! குருவே! அம்மா, என்னை உன் மடியில் ஏந்திக் கொள்”

1932ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி சனிக்கிழமையன்று அவர் சமாதி எய்தினார்.

எழுபதாவது வயது முதல் அவர் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு குடிலில் வசித்து வந்தார். இரு அறைகள் அங்கு இருந்தன. ஒன்றில் எம் வசித்தார். இன்னொன்று ஸ்டோர் ரூம். வாரந்தாவில் இரு சிறிய அறைகள் இருந்தன. ஒன்று சமையலறை. இன்னொன்று குளியலறை.

இங்கு தனது வாழ்நாள் இறுதி வரை அவர் தன்னைச் சந்தித்த பக்தர்களுக்கெல்லாம் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றியும் பல அரிய ஆன்மீக விளக்கங்களையும் தந்து வந்தார்.

அன்னை சாரதா தேவியார் 1853ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அவதரித்தார். அவர் 1920ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாளில் சமாதி அடைந்தார்.

பரமஹஸருடனும் அன்னை சாரதா தேவியாருடனும் அருள் பெற்று வாழ்ந்த நாட்களை மஹேந்திரநாதர் புனிதமாகக் கருதினார்.

மிகுந்த வேதனையுடன் அவர் சில சமயம் புலம்புவதுண்டு இப்படி:

“ அடடா! அன்னை போய் விட்டார். 35 ஆண்டுகள் நம்மை பாதுகாத்தார். ஐந்தே வருடங்கள் தான் ஶ்ரீ ராமகிருஷ்ணரின்  அற்புதமான தெய்வீக பாதுகாப்பில் இருந்தோம். ஆனால் அன்னை 35 ஆண்டுகள் நம்மை நன்கு வளர்த்தார். அடடா! அவரும் போய் விட்டாரே!”

இதனால் அவர் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டார்.

தனிமையில் வாழ மிஹிஜம் நோக்கி வந்து அங்கு வாழலானார்.

மஹேந்திர நாதர் இங்கு தன்னைப் பார்க்க வந்த பக்தர்களிடம் பேசியதை எல்லாம் ஸ்வாமி நித்யாத்மனானந்தா M-The Apostle & the Evangelist  என்று ஆங்கிலத்தில் இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார்.

அற்புதமான ஆன்மீக ரகசியங்களை மஹேந்திரநாதர் விளக்கியுள்ளதை இதில் காணலாம். 

எம் எழுதிய ராமகிருஷ்ண கதாம்ருதம் நூல் பரமஹம்ஸரைப் பற்றிய நுட்பமான விஷயங்களை நமக்குத் தரும் போது அவரைப் பற்றிய விவரங்களை ஸ்வாமி நித்யானந்தர் நூலில் நாம் காணலாம்.

 பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோரைப் பற்றி நமக்கு எம் அளித்த இலக்கிய கொடையை ஒரு நாளும் நம்மால் மறக்க முடியாது.

மஹேந்திரநாத் குப்தா அவர்களை மனமார வணங்குவோம்.

நன்றி, வணக்கம்!

***.

 tags- மஹேந்திரநாத் குப்தா, Master M

Leave a comment

Leave a comment