பாவை என்பது என்ன?  திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-6 (Post.14,022)

Written by London Swaminathan

Post No. 14,022

Date uploaded in Sydney, Australia – 27 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மார்கழி மதம் வந்துவிட்டால் திருப்பாவை முப்பது பாடல்களும் திருவெம்பாவை இருபது பாடல்களும் எங்கும் ஒலிப்பதைக் கேட்கிறோம் . இந்த ஐம்பது பாடல்களிலும் பாவை என்ற சொல் வருவதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் பலருக்கும் ஏன் இப்படிப்    பாடல்கள் பாவை என்று முடிகின்றன என்று தெரியாது

பாவை என்பது மண்ணினால் செய்த தேவியின் உருவம் ஆகும்காத்தியாயனி தேவியின் உருவத்தை மணலில் செய்து வழிபடுவதே மார்கழி மாத நோன்பு ஆகும். இப்போது இந்த   வழக்கம் பின்பறற்றப்படாததால் பலருக்கும் பாவை பற்றித் தெரியாது.

திரு + பாவை = திருப்பாவை

இதில் திரு என்னும் அடை மொழி செல்வம், இலக்குமி, அழகு, மேன்மை, சிறப்பு என்னும் பொருள் உடைத்து.

பாவை என்பது பெண்கள் அல்லது பெண்கள் நோற்கும் பாவை நோன்பினைக் குறிக்கும்.

பாகவத புராணம் கிருஷ்ணின் சரிதத்தைக் கூறுகிறது. அதில் தசம ஸ்கந்தம் 22- ஆவது அத்தியாயம் கண்ணன், கோபியரின் துகில்க ளைக் (ஆடைகளைக்) கவர்ந்து மரத்தில் ஓளித்து வைத்த நிகழ்ச்சி வருகிறது . இது சங்க இலக்கிய நூலான அகநானூற்றில் வருவதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் பெருமை கன்னியாகுமரி வரை பரவி இருந்தததை அறிகிறோம். அதே அத்தியாயத்தில் மார்கழி நோன்பு பற்றியும் வருகிறது.

“அரசனே! கோகுலத்திலுள்ள பெண்கள் ஹேமந்த ருதுவின் முதல் மாதமான மார்கழியில் காத்யாயனி பூஜையாகிய  விரதத்தைத் துவங்கி அருணோதயத்தில் எழுந்து யமுனா நதியில் ஸ்நானம் பண்ணி, மணலால் காத்யாயனி உருவத்தைச் சமைத்து சந்தனம், மலர் தூபம், தளிர் பழம் மற்றும் சிறந்த நைவேத்யங்களால் தேவியைப் பூஜித்தனர்

காத்யயாயனீ ! ஹே மஹாமாயே ! ஹே மஹாயோகினீ ! ஹே    ஈஸ்வரி! உன்னை வணங்குகிறோம் ; எங்களுக்கு நந்தகோபர் மைந்தனாகிய கண்ணனை நாயகனாக அருள்வீராக ! என்ற மந்திரத்தை ஜபித்தவர்களாய் கண்ணனைத் தியானித்துக் கொண்டு ஒருமாத காலம் பூஜை செய்தனர்.

ஒருநாள் யமுனா நதியில்  ஸ்நானம் செய்வதற்காக அருணோதயத்தில் எழுந்திருந்து அவர்களுடைய தோழிமார்களின் பெயர்களை சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டும்  கிருஷ்ண சரிதத்தைப் பாடிக்கொண்டும் நடந்தனர் . அப்பெண்கள் யமுனா நதியின் ஒருபக்கத்துக்குச் சென்று ஆடைகளைக் கரையில் அவிழ்த்து வைத்துவிட்டு கண்ணன் சரிதங்களை சொல்லி நீரில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர் ; பரம யோகிகளுக்கும் யோகியான , சர்வக்ஞானுமான கண்ணபிரான் கோப கன்னியர் நீர்விளையாட்டு நிகழத்துவதை அறிந்து  அப்பெண்களின் விரத பலனை அளிப்பதற்காக தனது நண்பர்கள் சூழ அவ்விடம் சென்றார் .

சென்ற பெருமான், கரையிலிருந்த மகளிர் துகில்களையெல்லாம் கவர்ந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடம்ப மரத்தில் ஏறி நிற்க , நீராடி முடிந்த பெண்கள் கையது கொண்டு மெய்யது பொத்திக் கண்ணனிடம் வந்து தங்களுடைய துகில்களைத் தருமாறு பிரார்த்தித்தபோது , பெருமாள் அவர்களுடைய அன்பைப் பலவகையில் சோதித்து, முடிவில் அவரவர் துகில்களை அளித்தார் சதிகளாகிய நீங்கள்  எந்த நோக்கத்தைக் கொண்டு காத்யாயனி விரதத்தை அனுஷ்டித்தீர்களோ  அந்த மனோரதம் இன்று இரவில் என்னுடன் கூடி விளையாடுவதால் நிறைவேறும்; எல்லோரும் கோகுலத்துக்குச் செல்லுங்கள்  என்று நியமித்தருளினார்.” 

கோபியர்கள் கண்ணனுடன் ஆடிய ஆட்டம் ராஸக்ரீடை எனப்படும். இதை சிலப்பதிகாரத்திலும் குரவைக்கூத்து என்ற பெயரில் காண்கிறோம்.

இன்றும் மலையாள தேசத்தில் பெண்கள் விரதம் அனுஷ்டித்து திருவாதிரை அன்று முடிப்பதால்  மிருக சீர்ஷ நடத்திரப் பெளர்ணமியில் துவங்கி திருவாதிரையில் முடிந்ததாகவே கொள்ளல் வேண்டும்.

பாவைகளை மண்ணினால் செய்யும் வழக்கம் சங்க நூலான பரிபாடலில் உள்ளது . அது வையை நதி/ பாண்டிய நாடு பற்றிய பாடல்; ஆக ஆண்டாளின் நோன்பு பாண்டிய நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நடந்ததும் உறுதியாகிறது. மேலும் அகநானூற்றில் (59) உள்ள தொழுனை நதி / யமுனா நதி சம்பவம் கண்ணன் பெருமை தமிழ் நாடெங்கிலும் பரவியிருந்ததைக் காட்டுகிறது

மார்கழி நோன்பு எவ்வளவு சீரும் சிறப்புடனும் முடிந்தது என்பதை ஆண்டாள் திருப்பாவையின் கடைசி பகுதியிலும் கேரள திருவாதிரைத் திருவிழாவிலும் இன்றும் காணலாம்

பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்களில் தை நீராடல் பகுதி உள்ளது மார்கழியில் துவங்கி தை மாதத்தில் முடிவடைந்ததை அந்தப் பாடல்களும் உறுதி செய்கின்றன.

—subham—

Tags- பாவை நோன்பு, காத்தியாயனீ ,விரதம், பக்கவாதம், மணல், யமுனை , கோபியர் நீராடல்  நீ திருப்பாவரை ஆராய்ச்சி, கட்டுரை 6

Leave a comment

Leave a comment