Post No. 14,021
Date uploaded in Sydney, Australia – —27 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (23)
ராமாயணத்தில் வரங்கள் (23) மாரீசன் பிரம்மாவிடம் வரம் பெற்றது!
ச. நாகராஜன்
.ஆரண்ய காண்டத்தில் முப்பத்தெட்டாவது ஸர்க்கமாக அமைவது ஶ்ரீ ராமரது மஹிமையைச் சொல்வது என்னும் ஸர்க்கம்.
இதில் ராவணனைச் சந்திக்கும் மாரீசன் ஶ்ரீ ராமரது மஹிமையை விரிவாக எடுத்துச் சொல்கிறான்.
அவன் ராவணனிடம் கூறுகிறான்:
“ஒரு காலத்தில் பராக்கிரமத்தோடு உலகங்களுக்கு பயத்தை உண்டுபண்ணுகிறவனாய் இந்த பூமியில் எங்கும் திரிந்தேன். தண்டகாரண்யத்தில் ரிஷி மாமிசங்களைப் புசிக்கின்றவனாகக் காலம் கழித்தேன்.
அப்போது என்னைக் கண்டு பயந்த விஸ்வாமித்திரர் தசரத மஹாராஜாவிடம் சென்று மாரீசனிடம் எனக்குப் பெரும் பயம் ஏற்பட்டிருக்கிறது. யக்ஞம் செய்யும் காலத்தில் ராமன் ஊக்கமுடையவனாக என்னைப் பாதுகாக்கட்டும் என்று வேண்டினார். அவரோ ராமன் பன்னிரெண்டு வயதே நிரம்பிய சிறு பையன். நான் வருகிறேன்: என்றார். ஆனால் விஸ்வாமித்திரரரோ ராமர் சிறு பையனாக இருந்தாலும் மாரீசனை ஒழிக்கும் விஷயத்தில் மஹா ஆற்றல் கொண்டவன். அவனை அழைத்துப் போகிறேன் என்றார்.
விஸ்வாமித்திரருடன் தண்டகாவனம் வந்த ராமர் அப்போதே உதித்த இளம்பிறைச் சந்திரனைப் போலக் காணப்பெற்றார்.
ததோஹம் மேகசங்காசஸ்தப்தகாஞ்சனகுண்டல: |
பலீ தத்தவரோ தர்பாதாஜகாம ததாஸ்ரமம் |\
மேக சங்காச: – மேகத்திற்கு நிகரானவனும்
தப்தகாஞ்சனகுண்டல: – சுத்த பொன் குண்டலங்களை அணிந்தவனும்
பலீ – பலசாலியும்
தத்தவர: – (பிரம்மாவிடமிருந்து) வரங்களைப் பெற்றவனுமான
அஹம் – நான்
தர்பாத் – செருக்கால்
ததாஸ்ரமம் – அவரது ஆசிரமத்திற்கு
தத; – அப்போது
ஆஜகாம – வந்தேன்.
ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டவனாகிய நான் ஆலோசனையின்ரு புகுபவனாகவே அவனால் பார்க்கப்பட்டேன். அவன் தனுசில் நாணேற்றி ஒரு கூரிய பாணத்தை விடுத்தான். நான் சமுத்திரத்தில் நூறு யோசனை தூரம் தள்ளப்பட்டேன். பிரக்ஞை அற்றவனாக இருந்த நான் நெடுநேரம் கழித்து இலங்கையை அடைந்தேன்.”
இவ்வாறு கூறிய மாரீசன் ராவணனை உயிரைப் பாதுகாக்குமாறும் ராமனுடன் போர் செய்ய வேண்டாமென்றும் அறிவுறுத்துகிறான்.
இந்த இடத்தில் ‘வரங்களைப் பெற்றவனாகிய நான்’ என்று மாரீசன் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.
ஆனால் எப்போது என்ன வரங்களைப் பெற்றான் என்ற விவரங்கள் தரப்படவில்லை.
ஆனால் மாரீசன் வரம் பெற்றதை அறிகிறோம்.
**