Post No. 14,028
Date uploaded in Sydney, Australia – 29 DECEMBER 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கானகம் சென்ற சீதையும், கணவனை இழந்த கண்ணகியும் சன்யாசிகளுக்கு அன்னமிடும் அறிய வாய்ப்பினை இழந்து விட்டோமே என்று வருத்தப்படுவதை கம்பனும் இளங்கோவும் பாடிச் சென்றனர்
“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”
(கொலைக்களக் காதை, சிலப்பதிகாரம், இளங்கோ)
ஆண்டாளும் இதே தொனியில் திருப்பாவையில் சந்யாசிகள் வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுகிறார் :
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
ஐயம் பிச்சை வேறுபாடு
ஐயம் என்பது தமிழ்ச் சொல்
பிச்சை என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்.
ஐயம் என்பது நாமாக விருந்தினர்கள் மற்றும் சன்யாசிகளுக்குப் படைக்கும் உணவு ; அதாவது அவர்களை அழைத்து உணவிடுதல்.
பிக்ஷை என்பது வீட்டு வாசலில் வந்து பவதி பிக்ஷாம் தேஹி என்று கேட்போருக்கு இடும் உணவாகும் இதிலிருந்தது வந்த சொல்லே பிக்ஷு, பிக்ஷாவந்தனம்
மனு ஸ்ம்ருதியில் மூன்று ஜாதியினரும் பூணூல் போட்டுக்கொண்டவுடன் எப்படி வீட்டு வாசலில் நின்று பிக்ஷை கேட்கவேண்டும் என்று எழுதியிருக்கிறார் . பிராமணர்கள் , க்ஷத்ரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று ஜாதியினரும் பெர்முடேஷன் காம்பினேஷனில் permutation combination சொல்லவேண்டும் என்று விதித்திருக்கிறார் பவதி , பிக்ஷாம் தேஹி என்ற மூன்று சொற்களையும் வெவ்வேறு ஆர்டரில் சொல்லவேண்டும்
பவதி பிக்ஷாம் தேஹி
பிக்ஷாம் தேஹி பவதி
தேஹி பிக்ஷாம் பவதி
ஆக வீட்டு வாசலில் வந்து அம்மா தாயே பிச்சை போடுங்கள் என்று தற்காலத்தில் கேட்போரும் இந்த வகையினர்தான் .
நான் சிறுபயனாக இருந்தபோது மதுரையில் வேத பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் இப்படி எங்கள் வீட்டுக்கு வந்து குரல் எழுப்பியதை நானே பார்த்து இருக்கிறேன்; ராமேஸ்வரம் வேத பாடசாலையிலும் சேதுபதி உயர்நிலைப்பள்ளி அருகில் இருந்த வேத பாடசாலையிலும் தானப்ப முதலீத் தெரு வேத பாடசாலையிலும் மாணவர்கள் வேதம் படித்தார்கள்; இவை தவிர மதுரை பெருமாள் கோவில் அருகிலும் வேத பாடசாலை இருந்தது திராவிட ஆட்சி வந்த பின்னர் இந்த வேத பாடசாலைகள் மூடப்பட்டன. திராவிட ஆட்சி மட்டும் காரணமல்ல; பிராமணர்களின் உதாசீனமும் மனப் போக்கு இதற்கு காரணங்கள் ஆகும் .
****
திருப்பாவையில் சந்யாசிகள் வருணனை
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.-14
பொருள்: எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
காஷாய வஸ்திரத்தை — காவி உடையை — சந்யாசிகள் அணிவார்கள்; செங்கல்லைப்பொடி செய்து வெள்ளை வேட்டியை அதில் நனைத்து காவி உடையைத் தயாரித்ததை ஆண்டாள் பாடுகிறாள். அது மட்டுமல்லாமல் வெண் பல் என்ற சொல்லையும் சேர்க்கிறான் ; ஏனெனில் சந்யாசிகள் வெற்றிலை பாக்கு போடமாட்டார்கள்; தூய சாத்வீக உணவையே உட்கொள்வார்கள் இதனால் அவர்களுக்கு வெள்ளை பற்கள் ; சமண சந்யாசிகள் பல் தேய்க்க மாட்டார்கள் இதனால் அவர்களை ஊத்தை வாய் சமணர்கள் என்னு சம்பந்தர் திட்டுவதைக் காண்கிறோம். புத்த சந்யாசிகள் மற்றவர்கள் கொன்ற மிருகங்களை சாப்பிடுவார்கள் ; அவர்களும், நாற்ற வாயர்களே ; இந்து சந்யாசிகள் வெள்ளைப் பற்களை உடையவர்கள் என்பதை ஆண்டாள் வேறுபடுத்திக் காட்டுகிறாள்.
அந்தக் காலத்தில் கோயில்கள் இருந்ததையும் அங்கு அதிகாலையில் சங்கு முழக்கம் எழுந்ததையும் ஆண்டாள் குறிப்பிடுகிறார் அவருக்கு முன்னர் வாழந்த அப்பர் பெருமான் எத்தனை வகைக் கோவில்கள் இருந்தன என்பதையும் பாடலில் பாடியிருக்கிறார்.
தவத்தவர் என்ற ஆண்டாள் சொல்லையும் கவனிக்க வேண்டும் அவர்களுடைய ஒரே நிதி – செல்வம் – தபோ நிதி ஆகும்
தபஸ் = தவம்
ப = வ மொழியியல் குறிப்பையும் கவனிக்கவும்.
முல்லைப்பாட்டு என்னும் சங்க நூலிலும் கல் தோய்ந்து உடுத்த படிவ பார்ப்பான் என்ற வரி உண்டு .
*****
உபநிஷத் வரிகள்
ஆண்டாளுக்கு உபநிஷத்தும் அத்துப்படி .
ஆண்டாளும் திருவள்ளுவரும் உபநிஷத்துக்களைப் படித்து அதில் கரை கண்டவர்கள் .
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்—.குறள் 360:
இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர், ஞான யோகங்கள் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத் தூசு போலுமாகலின் அம்மிகுதி தோன்ற இவை மூன்று நாமம் கெட என்கிறார் .
இதை ஆண்டாளும்
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5
பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
நெருப்பிலிட்ட பஞ்சு போல என்ற சொற்றோடர் உபநிஷத்தில் வருகிறது
ஆகையால் நெருப்பிலிடப்பட்ட த்ருண/ புல் விசேஷத்தின் பஞ்சானது எப்படி கொளுத்தப்படுகிறதோ அப்படியே இந்த உபாசகனுடைய சமஸ்தமான புண்ய பாபங்களும் கொளுத்தப்படுகின்றன என்பது சாந்தோக்ய உபநிடதம் 5-24-3 என்று ஒரு திருப்பாவை உரை கூறும்.
तद्यथेषीकातूलमग्नौ प्रोतं प्रदूयेतैवंहास्य सर्वे पाप्मानः प्रदूयन्ते य एतदेवं विद्वानग्निहोत्रं जुहोति ॥ ५.२४.३ ॥
tadyatheṣīkātūlamagnau protaṃ pradūyetaivaṃhāsya sarve pāpmānaḥ pradūyante ya etadevaṃ vidvānagnihotraṃ juhoti || 5.24.3 ||
3. Just as the cotton fibres of the iṣīkā grass are totally consumed when thrown into the fire, similarly all sins are consumed of one who performs the Agnihotra sacrifice with the knowledge of the Vaiśvānara Self.
*****
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்
சந்திரனும் சூரியனும் உதித்தாற்போல அழகிய திருக்கண்கள் இரண்டினால் எங்களை ஆசீர்வதிப்பாயாக என்று ஆண்டாள் வேண்டுகிறாள்; இது பாவங்கள் அனைத்தையும் பொசுக்கிவிடும்.
இப்படி சந்திர சூரியர்களை இறைவனின் கண்களாக வருணிப்பதை ரிக் வேதம் முதல, விஷ்ணு சஹஸ்ரநாமம் வரை ரிஷி முனிவர்கள் பாடுகிறார்கள்
चन्द्रमा मनसो जातश्चक्षोः सूर्यो अजायत ।
मुखादिन्द्रश्चाग्निश्च प्राणाद्वायुरजायत ॥१३॥
Candramā ṃanaso Jātaś-Cakssoh Sūryo ājāyata |
ṃukhād-īndraś-Ca-āgniś-Ca Prānnād-Vāyur-ājāyata
||13||
The moon was born from his mind and the sun was born from his eyes, Indra and
agni (fire) were born from his mouth, and vayu (wind) was born from his breath.
சந்த்ரமா மன॑ஸோ ஜா॒த: । சக்ஷோர் ஸூர்யோ॑ அஜாயத ।
முகா॒²தி³ன்த்³ர॑ஶ்சா॒க்³னிஶ்ச॑ । ப்ரா॒ணாத்³வா॒யுர॑ஜாயத ॥ என்பது ரிக்வேத புருஷ சூக்த வரிகள்
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்யனும் எழுந்தார்ப்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோரெம்பாவாய்.
*****
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)
இதற்கு முந்தைய பாசுரங்களில் பெண்ணின் தூக்கத்தினைப் பலவகையாக வருணித்த ஆண்டாள் இறுதியில் இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்? என்று வினவி, தட்டி எழுப்புகிறாள்; இதற்கு உரை எழுதிய பெரியோர்கள் இது தினசரி உறக்கம் பற்றியதல்ல; அறியாமை என்னும் இருளில் உறங்கும் ஆத்மாவைத் தட்டி எழுப்பும் வாசகம் இது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்
Uthishtata, Jagrata, Prapya Varanibodhata” is a sloka from the Katha Upanishad that translates to “Arise, awake, and stop not till the goal is reached”. Swami Vivekananda popularized the slogan in the late 19th century as a message to people to break free from their hypnotized state of mind
சுவாமி விவேகானந்தருக்குப் பிடித்த உத்திஷ்ட ஜாக்கிரத ப்ராப்யவரான் நிபோதாத என்ற கடோபநிஷத்தின் எதிரொலி இது
எழுந்திரு விழித்திரு (எழுமின் விழிமின் ) குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ।
क्शुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ 1-3-14 ॥
uttiṣṭhata jāgrata prāpya varānnibodhata |
kśurasya dhārā niśitā duratyayā durgaṃ pathastatkavayo vadanti ||1-3- 14 ||
1-3-14. Arise, awake; having reached the great, learn; the edge of a razor is sharp and impassable; that path, the intelligent say, is hard to go by.
ஆண்டாள் திருப்பாவை இடைச்சியருக்குப் பாடிய சாதாரணப் பாடல்கள் அல்ல. அவர் பிறவி ஞானி என்பதால் தத்துவ முத்துக்களை உதிர்த்து இருக்கிறார்; அவரவர் அறிவின் நிலைக்கேற்ப அதன் பொருளை உய்த்துணரலாம்.
–subham—
TAGS- ஆண்டாள் ,உபநிஷத், சன்யாசி, திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 8, காஷாய வஸ்திரம், காவி உடை, வெண் பற்கள்