ஆலயம் அறிவோம்! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் (Post.14,033)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,033

Date uploaded in Sydney, Australia — 30 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை! 

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

ஆலயம் அறிவோம்! 

வழங்குவது பிரஹந்நாயகி சத்யநாராயணன்.

வேதத்தை,

வேதத்தின் சுவைப்பயனை,

விழுமிய முனிவர் விழுங்கும் கோதில் இன்கனியை,

நந்தனார் களிற்றை,

குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை,

அமுதை,

என்னை ஆளுடை அப்பனை,

ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாடமயிலைத்

திருவல்லிக்கேணி கண்டேனே

–    திருமங்கை ஆழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருவல்லிக்கேணி திருத் தலமாகும்

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ளது. இதில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவில் சென்னையில் உள்ள கடற்கரை அருகில் உள்ளது.

மூலவர் : வேங்கடகிருஷ்ணன்

          நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்

உற்சவர் ஶ்ரீ பார்த்தசாரதி

தாயார்: ருக்மிணி தாயார்

விமானம் : ஆனந்த விமானம்

தீர்த்தம் : கைரவிரணி புஷ்கரிணி

மங்களாசாஸனம் : பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்.

சென்னை நகரில் மிகப் பழமையான பகுதியாகும் இது. மைலாப்பூரை அருகில் கொண்டு விளங்கும் இந்தத் தலம் மிகவும் பிரசித்தமான தலமாகும். இங்குள்ள பார்த்தசாரதி கோவிலின் முன்னால் அமைந்துள்ள அல்லி மலர் நிறைந்துள்ள குளத்தால் இது அல்லிக்கேணி என்ற பெயரைப் பெற்றது. முன்பொரு காலத்தில் இது துளசி வனத்தில் நடுவில் அமைந்திருந்தது.

இத்தலத்தைப் பற்றி பிரும்மாண்ட புராணத்தில் பிருந்தாரண்ய மாஹாத்மியம் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளது. பிருந்தம் என்றால் துளஸி. ஆரண்யம் என்றால் காடு என்று பொருள் எனவே பிருந்தாரண்யம் என்றால் துளஸி வனம் என்று பொருள்.

முன்னொரு காலத்தில் சுமதி என்ற மன்னன் வேங்கடமலையில் திருவேங்கடமுடையானை வழிபட்டு, அர்ஜுனனுக்குத் தேரோட்டிய கண்ணனாக பெருமாளை தரிசிக்க எண்ணி, தவம் இருந்தான். பகவான் அவனிடம் கைவரணி தீர்த்தம் கொண்ட பிருந்தாரண்யம் வந்து நீ விரும்பிய தோற்றத்துடன் என்னை தரிசிப்பாயாக என்று அருள் பாலித்தார். அவ்வண்ணமே வியாஸருக்கும் சுமதி ராஜாவுக்கும் இரு திருக்கரங்களுடன் வேங்கடகிருஷ்ணனாகக் காட்சி தந்தார்.

வேங்கடவனால் காட்டப்பட்டதால் வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமம் ஏற்பட்டது..

கர்பக்ருஹத்தில் குடும்ப சமேதராய் ருக்மிணி, பலராமன், ப்ரத்யும்னன், அநிருத்தனோடு கிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார்.

மஹாபாரத யுத்தத்தில் பீஷ்மரால் அம்புகளால் துளைக்கப்பட்ட வடுக்கள் திருமுகத்தில் திகழ, உற்சவர் பார்த்தசாரதி இன்றும் காட்சி தருகிறார்.

இங்குள்ள தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்னி, மீன, விஷ்ணு ஆகிய ஐந்து தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீகம்.

வைணவத் திருத்தலங்களுள் முக்கியமானதாக உள்ள வேங்கடம், திருவரங்கம், கச்சி ஆகிய மூன்று தலத்துப் பெருமாள்களும் இங்குள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.

இத்தலத்திற்கு பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இங்குள்ள மூலவரான வேங்கடகிருஷ்ணன் கம்பீரமான மீசையுடன் காட்சி தருகிறார். 108 திவ்ய க்ஷேத்திரங்களுள் இப்படி மீசையுடன் காட்சி தருவது இத்தலத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஶ்ரீ பார்த்தசாரதி கோவில் வைகாநஸ பகவத் சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த விதிப்படியே பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.மானுட வாசுதேவன் மற்றும் பர வாசுதேவன் என்று இருவிதமாகச் சொல்லப்படுவதில் இங்கு மானுட வாசுதேவனாக குடும்பத்துடன் கிருஷ்ணன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஆக அந்த சாஸ்திரம் சொல்லியுள்ளபடி யுக்தியையும், புத்தியையும் சேர்த்து பொருத்தமான வடிவத்தில் விக்ரஹத்தை அமைத்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பெருமாள் இங்கு மீசையுடன் தோற்றமளிக்கிறார்.

இங்கு பெருமாள் தனது சுதர்ஸன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று வாக்களித்ததால் அவர் கையில் ஆயுதம் இல்லை. ஆனால் போரின் ஆரம்பம் மற்றும் முடிவினைத் தெரிவிக்கும் வகையில் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.

உற்சவ மூர்த்தியும், தன் கதாயுதம் இல்லாமல், செங்கோலுடன் காட்சி தருகிறார்.

இங்கு தங்கத்தால் ஆகிய இரு கருட வாஹனங்கள் உள்ளன. பெரிய கருட வாஹனத்தில் ஶ்ரீ பார்த்தசாரதி வருடத்தில் ஏழு முறை உலா வருகிறார். சிறிய கருட வாகனம் ஶ்ரீ ரங்கநாதருடைய வாகனமாக அமைகிறது.

12 ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் இங்குள்ள அல்லிக் கிணற்றில் தான் பிறந்தார் என்றும் அவர் இங்கு ஓடிக்கொண்டிருந்த கைரவிரணி நதி வழியே பார்த்தசாரதி கோவிலில் உள்ள வேங்கடகிருஷ்ணனைத் தொழ வந்தார் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

இது எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவில் என்று வரலாறு தெரிவிக்கிறது.

கோவிலின் முன் மண்டபம் தொண்டைமானால் கட்டப்பட்டது என்பதை திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார் இப்படி:

‘மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்

மாட மாளிகையும், மண்டபமும்,

தென்னன் தொண்டையர்கோன் செய்த

நன் மயிலைத் திருவல்லிக்கேணி’

என்கிறார் அவர்.

வேங்கட கிருஷ்ணனின் புகழை விரும்பிப் பாடினால் அது பிறப்பை அறுக்கும் மருந்தாகும் என்கிறது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி.

இந்தப் பகுதியில் தான் பாரதியார் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லம் பாரதியார் நினவில்லமாக இப்போது திகழ்கிறது. அதே போல விவேகானந்தர் தங்கிய ஐஸ் ஹவுஸின் பெயரானது 1963ம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் என்று மாற்றப்பட்டது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ பார்த்தசாரதியும் ருக்மிணித் தாயாரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

***

 tags-ஆலயம் அறிவோம், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் 

Leave a comment

Leave a comment