ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 29-12-2024

Nationala Yogasana Meet; Tamil Nadu Students came first.

Written by London Swaminathan

Post No. 14,032

Date uploaded in Sydney, Australia – 30 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 29-12-2024

Collected from National Newspapers and edited.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்




அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 29–ம் தேதி 2024-ம் ஆண்டு

*****

வைகுண்ட ஏகாதசி 2025 ஜனவரி 10ம் தேதி

விரதங்களில் மிகவும் புண்ணியமான விரதமாகவும், பெருமாளுக்கு மிகவும் விருப்பமான விரதமாகவும் கருதப்படுவது ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பஞ்சமா பாவமும் நீங்கி, அவர்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைப்பதுடன், இறுதியில் மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 திதிகளில் 11வது திதியாக வரும் ஏகாதசி, வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவற்றில் வருவது உண்டு. அதாவது மாதத்திற்கு 2 ஏகாதசிகள் என வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசி விரத நாட்கள் வரும். இவை ஒவ்வொன்றிற்கும் தனியான பெயர்கள், சிறப்புகள் மற்றும் தனியான பலன்கள் உண்டு. சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அப்படி மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என சிறப்பித்து கொண்டாடுகிறோம். மார்கழி மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாகவும் விரத நாளாகவும் வரும் வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்லுவதுண்டு.

****

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடங்குகிறது

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, வருகிற 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 31-ந்தேதி முதல், ஜனவரி 9-ந்தேதி வரையிலும், ராப்பத்து உற்சவம் ஜனவரி 10-ந்தேதி முதல், 20-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ளது.


இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்வும் நடத்தப்படும். வைகுண்ட துவாரம் எனப்படும் இந்த வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பவர்களுக்கு வைண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் பக்தர்கள் அனைவரும் இந்த ஒரு நாள் வைகுண்ட துவாரம் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் இரவு முழுவதும் கண் விழித்து, உபவாசமாக இருந்து விரதம் கடைபிடிப்பது உண்டு

ஜனவரி 10ம் தேதி வரக் கூடியது தான் வளர்பிறை ஏகாதசி .அதைத் தான் வைகுண்ட ஏகாதசியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். திருப்பதியில் பாலாஜி கோவிலிலும் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது

*****

வைஷ்ணவ தேவி கோவில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரிலுள்ள புகழ்பெற்ற சக்தித்  தலமான

வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ரோப் வே ROPE WAY எனப்படும் கயிறு வழிப்பாதை அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் 72 மணி நேர ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மூன்று நாள் கிளர்ச்சி நடத்திய சங்கர்ஷ கமிட்டி, இந்த ரோப் வே என்னும்  கயிறு வழிப்பாதை வழக்கமான நடை முறைகளையும் வியாபாரிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று கூறியுள்ளது

250 கோடி ரூபாய் செலவில் இந்தப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .

 கிளர்ச்சிக்கு முன்னர் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை .

மாதா வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகம் இதை 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற எண்ணியது. இதன் மூலம் பக்தர்கள் 13 கிலோமீட்டர் பாதையைக் கஷ்டப்பட்டு கடக்காமல், ஆறே நிமிடங்களில் கோவில் வளாகத்தை அடைய முடியும். 

பகதர்கள் இப்படி ரோப் காரில் சென்றால் 13 கிலோமீட்டர் பாதையிலுள்ள வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது சங்கர்ஷ கமிட்டியின் வாதம் . பல்லக்குத் தூக்கிகள், மட்டக் குதிரை சவாரி நடத்துவோர் கற்களை வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வியாபாரிகளின் கவலையைத் தீர்க்க பேச்சுவார்த்தை உதவும் என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

******

பெற்றோர் பாத பூஜைக்கு தடை: இந்து முன்னணி  கடும் கண்டனம் 

 ‘பள்ளிகளில் பெற்றோருக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக்கூடாது’ என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை, ஹிந்து முன்னணி கண்டித்துள்ளது. இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

‘தனியார் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்வது கூடாது. மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது தான், தமிழர்களின் அடிப்படை பண்பாடு. பெற்றோரை போற்றுதல், வணங்குதல் என்பது தமிழர் மரபிலே உள்ள நல்லொழுக்கமாகும்.

யாரெல்லாம் பெற்றோரை போற்றினரோ, அவர்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக மக்களால் போற்றப்படுகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். தனியார் பள்ளியில் பெற்றோர், மாணவர் விருப்பத்துடன் தான் பாத பூஜை நடக்கிறது. மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை.

இதுபோன்ற நிகழ்வுகளால், மாணவர் – பெற்றோர் உறவு மேம்படுகிறது. பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் மீதான அன்பும், அக்கறையும் கூடுகிறது என்பதே உண்மை. இத்தகைய நிகழ்வுகள் தவறான செயலாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. நம் பண்பாட்டை சிதைக்கும் வெளிநாட்டு கலாசாரத்தை, பள்ளிகளில் புகுத்துவதை திராவிட மாடல் ஆட்சி ஊக்கப்படுத்துகிறது.

மாணவர்களிடம் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பள்ளிகளில் வன்முறை பெருகி வருகிறது. இதற்கு தீர்வாக பண்பாட்டு போதனை வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வைத்த கோரிக்கையை, நடைமுறைப்படுத்த கல்வித் துறை மறுக்கிறது. தி.மு.க.,வின் அரசியல் பிரிவு போல் செயல்படுவதை, பள்ளிக்கல்வித் துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்

என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கையில் கூறியுள்ளார்.

******

 சபரிமலையில் மண்டல பூஜை: தங்க அங்கி வருகை

 சபரிமலையில் டிசம்பர் .26 ஆம் தேதி  மண்டல பூஜை நடைபெற் றது. அதற்கு முன்னர், தங்க அங்கி சன்னிதானம் வந்தடைந்தது.

நவ., 16-ல் தொடங்கிய மண்டல கால சீசன் சபரிமலையில் இத்துடன்  நிறைவு பெறுகிறது. 

ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனி   பம்பை வந்தடைந்தது

மாலை 3:00 மணி வரை பம்பை கணபதி கோயிலில் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு . அதன் பின்னர் பெட்டகத்தில் அடைக்கப்பட்டு தலை சுமடாக நீலிமலை, அப்பாச்சி மேடு, சரங்குத்தி வழியாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டது . அங்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு , மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர்  அதை பெற்று ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்தினார்கள்.

மதியம்  களபாபிேஷகத்துக்கு   பின் இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது . இதை தொடர்ந்து சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறுகிறது

டிச.,22ல் ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி 74 கோயில்களுக்கு சென்று விட்டு இன்று பம்பை வந்தது

2018ல் ஏற்பட்ட பெருவெள்ளம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றால் தடைபட்ட பம்பா சங்கமம் நிகழ்ச்சி 2025 ஜன.,12-ல் பம்பையில் நடைபெறும். அன்றைய தினம் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 75 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி 75 தீபங்கள் அனைத்து கோயில்களிலும் ஏற்றப்படும். 2025 மகர விளக்கு சீசனில் ஐயப்பன் படம் பொறித்த தங்க லாக்கெட் விற்பனைக்கு விடப்படும்.

மகர ஜோதி தரிசனத்துக்கு முன்னர் மீண்டும் நடை திறக்கப்படும்

*****

ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார்.

அதில்,: துணை முதல்வர் உதயநிதி, மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார். பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார் என

கூறியிருந்தார்.

ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை டிச.,15ல் கைது செய்தனர்.

இதனை எதிர்த்து, அவரது மகன் முகுந்தன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் ‘ சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டா்’ எனக் கூறியிருந்தார்.ஆனால் போலீசார் சா்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ விதிகளை பின்பற்றித் தான் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது’ எனக்கூறியிருந்தனர்.

இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் பற்றிபேசக்கூடாது என்ற நிபந்னையின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

*******

திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை

 திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகைதீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது.

 விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 13-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளித்த மகாதீபத்   ததரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சுமார் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம், மழை மற்றும் பலத்த காற்றிலும் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. செங்குத்தான மலைப்பாதையில் தீப கொப்பரை இறக்கி கொண்டு வரப்பட்டது தொடர்பான டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.


*******

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது

மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.

கோவை: ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே ஆதியோகியை தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை டிசம்பர் 22–ல்
தொடங்கியது. கோவை ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் ஆரத்தி எடுத்து தொடங்கி வைத்தனர்.

 முன்னதாக, கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


******

பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி, பழனி முருகன் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படிபழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போது பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள்வர தொடங்கி உள்ளனர்.

பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், தைப்பூச திருவிழா அனுமதி பெறுவதற்கும் பழனி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஆனந்தவிநாயகர் சன்னதி முன்பு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி யாகம் நடந்தது.


ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னர் மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

******

தேசிய அளவிலான யோகாசன போட்டி – தமிழ்நாடு அணி சாம்பியன்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 68வது தேசிய அளவிலான யோகாசன போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது.இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட டார்கள். அவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதில் மொத்தமாக 780 புள்ளிகளை பெற்று தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்தது.

*****

அமெரிக்காவில் சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு உயர் பதவி!

வாஷிங்டன்: அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.


இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமித்துள்ளார். தொழில் முனைவோரான ஸ்ரீராம் கிருஷ்ணன், எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். முன்னதாக, மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழரான இவர் சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

‘பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்ஸூடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏ.ஐ.,க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க இருக்கிறார். அரசின் ஏ.ஐ., கொள்கையை வடிவமைக்க இருக்கும் இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்,’ என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

*****

ராமாயணம்‘: ராவணனாக நடிக்க யாஷ் வாங்கும் சம்பளம் !


பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் யாஷ். இந்த படங்கள் அனைத்து ரசிகர்களையும கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தற்போது ‘டாக்ஸிக்’ மற்றும் ராமாயணம் படங்களில் நடித்து வருகிறார்.

ராமாயணம் படத்தில் ராவணனாக யாஷ் நடிக்கிறார். மேலும், ராமராக ரன்பீர் கபூரும் , சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.

வில்லனாக நடிக்கும் யாஷ் இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வில்லன் கதாபாத்தித்திற்காக இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக யாஷ் இருப்பார்.

*******

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

ஜனவரி 5 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

நேரம் மாறுதலைக் கவனத்திற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

நேயர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே 2025–ஆம் ஆண்டு புத்தாண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

வணக்கம்.

—-subham—-Tags- ஞானமயம், உலக இந்து செய்தி மடல் 29-12-2024,

Leave a comment

Leave a comment