திருப்பாவையின் அமைப்பு; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 9 (Post No.14,031)

Written by London Swaminathan

Post No. 14,031

Date uploaded in Sydney, Australia – 30 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்பாவை நூலை நன்றாகப் படிப்பவர்கள் அதிலுள்ள அழகான அமைப்பினைக் கண்டு ரசிக்கலாம். அதைப் பாடிய ஆண்டாள் ஒரு கோர்வையாக அதைப் பாடுகிறார். முஃப்தீ பாசுரங்களில் கண்ணனை, அவனது அவதாரங்களை 56 வகையாக அழைக்கிறார்; நப்பின்னையை எட்டு விதமாகத் துதி பாடுகிறார். நந்த கோபாலனையும் யஸோதையையும் கொண்டாடுமிடத்து     ஐந்தைந்து வெவ்வேறு சொற்களைக் கையாளுகிறார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நில்லாமல் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்ற பாரதியார் வகுத்த இலக்கணப்படி பாடியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோர் நாவிலும் பாவைப் பாசுரங்கள் ஒலிப்பதற்கு  இதுவே காரணம். தட்டொளி, உக்கம், பறை, முதலிய புதிய சொற்களைத்  தந்து தமிழ் மொழியையே வளப்படுத்துகிறார்.

சங்கத் தமிழ் மாலை முப்பது என்பதுதான் அவர் தனது பாசுரத் தொகுப்புக்கு கொடுத்த பெயர். அது மிகவும் பொருத்தமான பெயரே. ஏனெனில் அவர் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலிருந்தும் மேற்கோள் காட்ட முடிகிறது; திருப்பாவை மாலை நூலை எழுதிய திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கக் காரியதரிசி , தமிழ் வித்துவான், பந்தல்குடி மாடபூசி ரெ. திருமலை அய்யங்கார் எழுதிய 276 பக்க நூல் முழுதும் சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டியுள்ளார். ஆண்டாள் சொன்னதை கம்பனும் வில்லிப்புத்தூராரும் கூடப் பிற்காலத்தில் பாடியுள்ளதையும் காட்டுகிறார்.

***** 

அமைப்பு

பாவை வகை நூல்களில் இப்பொழுது நமக்கு கிடைத்திருப்பது இரண்டே  நூல்கள்தான்; அவை திருப்பாவை, திருவெம்பாவை .

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப் பாடல்களை உள்ளன. அவற்றுள் கலிப்பாவானது ஒத்தாழி சைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி,   என மூன்றுவகையாம்.

கொச்சகக்கலிப்பாவானது  தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணை கொச்சகக்கலிப் பா,  சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகையாம்.

திருப்பாவையின் பாசுரங்கள் தனிச் சொல்லும் சுரிதரமும் இன்றி  வந்த தரவு கொச்சகக்கலிப்பாக்களே. இவற்றுள் ஒவ்வொன்றும் எட்டடி கொண்டுவந்திருக்கின்றது . இப்பாசுரங்களில் பெரும்பாலன முழுதும் வெண்டளை வரப்பெற்றுள்ளன. சில பாசுரங்கள் கலிப்பாவிற்குரிய கலித்தளையும் வெண்டளையும் கலந்தும் ,  சில பாசுரங்கள் வெண்டளையும், நேரென்றோராசிரியத்தளையும் கலந்தும் வரப்பெற்றிருக்கின்றன என்று தமிழ் வித்துவான் திருமலை அய்யங்கார் விளக்குகிறார்.

மாணிக்க வாசகர் இயற்றிய திருவெம்பாவையின் பாடல்களும் எட்டடியால் அமைந்த  தரவு கொச்சகக் கலிப்பாக்களே . அவற்றினும் ஈரசைச் சீர்கள் வந்திருக்கின்றன. ஆயினும் அவை முற்றிலும் வெண்டளையினாலேயே அமைந்திருக்கின்றன.

நாந்திச் செய்யுள்

திருப்பாவையின் ஈற்றுப் பாசுரம் நாந்திச் செய்யுள். நாந்திச் செய்யுளாவது நூல் இயற்றுவோர் நூலுக்கு முன்னாகவேனும் பின்னாகவேனும் தம்மைப் படர்க்கையில் வைத்து, இன்னார் இயற்றியது இந்நூல் என்பது தோன்றக்கூறுவது . இங்ஙனமே ஆழ்வார்களுள் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுர கவியாழ்வார் என்னும் இவ்வருவரும் நாந்திச் செய்யுள் கூறியிருக்கின்றனர்.

சைவ சமயாச்சாரியாருள் சம்பந்தர், சுந்தரர் இருவரும் நாந்திச் செய்யுள் கூறியிருக்கின்றனர். திருவெம்பாவையில் நாந்திச் செய்யுள் இல்லை.

*****

திருப்பாவையின் திட்டமிட்ட அமைப்பு

முதல் பாசுரத்தில் நோன்புக் காலம் பற்றியும்

இரண்டாவது நோன்புக்காலத்தில் செய்யவேண்டியது பற்றியும்

மூன்றாம் பாசுரத்தில் மாதம் மும்மாரி மழை பெய்து நாடு செழிக்கச் செய்யும் நல்ல நோக்கம் பற்றியும், நான்காம் பாசுரத்தில் மழைக்குரிய தேவதை பற்றியும் பாடுகிறார்

ஐந்தாம் பாசுரத்தில் இப்படிப்பாடி, மனதில் சிந்தித்தால் அஹங்காரம் அழியும் என்பார் .

ஆறாவது முதல் பதினைந்தாம் பாசுரம் வரை பத்துப்பாசுரங்களில் யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பருவப் பெண்கள் அனைவரையும் தட்டி எழுப்புகிறார் இதுதான் பஜனையின் கருத்தும் கூட. எல்லோரும் பயன் பெற சத் சங்கம் உதவுகிறது

பதினாறாம் பாசுரம் முதல் இருபத்தொன்பதாம் பாசுரம் வரையிலுமுள்ள பதிநான்கு பாசுரங்களில் கண்ணனின் திருமாளிகையை அடைந்து வாயிற்காப்போன் , நந்தகோபர், யசோதைப் பிராட்டி, கண்ணன், பலராமன்,நப்பின்னைப் பிராட்டி முதலியோரை எழுப்புபவத்தையும் காண்கிறோம்.

இறுதியில் கண்ணனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி போற்றி போற்றி என்று துதித்து நோன்பு இருந்த காரணத்தையும் சொல்லி, உள்க்கிடக்கையை வெளிப்படுத்துகிறார்

இதை மூன்று பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். முதல் ஐந்து பாசுரங்கள் ஒரு களத்திலும், ஆறு முதல் பதினைந்து பாசுரங்களில் பாடியவை வேறொரு களத்திலும், பதினாறு முதல் இருபத்தொன்பது வரை பாடியவை வேறொரு களத்திலும் அமைந்துள்ளன.

ஆண்டாள் ஒரு திரைப்பட இயக்குனராக இருந்தால் , வெவ்வேறு இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருப்பார் திருப்பாவை முப்பதையும் நாம் காட்சி வடிவில் மனக்கண் முன் கண்டால்,  இயற்கைக் காட்சிகளில் துவங்கி கண்ண பரமாத்மாவின் அரண்மனை வரை கண்டுகொண்டே போகலாம். இது நமது ஆத்மாவின் பயணம் . இதன் சிறப்பு,  தான் மட்டும் பயன்பெறாமல் மற்றவர்களையும் இறைவனிடத்தில் இட்டுச் செல்வதாகும். அதே நேரத்தில் மழை எய்து நாடு செழிக்கவும் வேண்டுவதாகும்.  திருப்பாவை யில் நாட்டின் செழிப்பு போற்றப்படுகிறதா? அல்லது தனி ஒரு பெண்ணின் முன்னேற்றம் போற்றப்படுகிறதா? அல்லது மக்கள் அனைவரின் ஆன்மீக முன்னேற்றம் போற்றப்படுகிறதா? என்று பட்டி மன்றமே ந டத்தலாம்.  இதற்கு திருப்பாவையின் திட்டமிட்ட அமைப்பு நமக்குத் துணை புரியும்.

–SUBHAM—-

TAGS-திருப்பாவையின் அமைப்பு, திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 9,ஆண்டாள்

Leave a comment

Leave a comment