Post No. 14,043
Date uploaded in Sydney, Australia – 2 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முப்பத்து மூவர் திருப்பாவை ஆராய்ச்சிக்கட்டுரைகள்-11
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.
பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
வேதகாகத்தில் ‘மிஸ்டர் முப்பது’ Mr Thirty என்று இந்திரனுக்குப் பெயர்; அதாவது திருவாளர் முப்பது; ஏனெனில் அவர் முப்பது என்ற தொகுதியுடைய வேத கால தெய்வங்களுக்கு தலைவர் . இந்திரன் என்பது ஒரே ஆளின்/ தெய்வத்தின்/ பெயர் அல்ல. அது பிரதமர், ஜனாதிபதி, தலைவர் என்பது போலப் பதவியின் பெயர்; இதைக் காஞ்சி பரமாசார்யாள் (1894-1994) போன்ற பெரியோர்கள் தமது சொற்பழிவுகளில் விளக்கியுள்ளார்கள்; அது தெரியாத வெள்ளைக்கார அரை வேக்காடுகளும் அவர்களைப் பின்பற்றும் அரைகுறை அறிஞர்களும் ‘இந்திரன் அதைச் செய்தான் இதைச் செய்தான்’ என்று ஒரே ஆளின் பேரில் கதை கட்டிவிட்டுள்ளனர் . நிற்க.
***
முப்பத்து மூவர் என்பதுடன் கோடி என்ற எண்ணைச் சேர்த்து முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லுவது வழக்கம். அதாவது கடவுளின் உருவங்கள் எண்ணற்றவை என்பதே இதன் பொருள். எடுத்துக்கட்டாக நாம் அஷ்டோத்திரம் (108) என்றும் சஹஸ்ர நாமம் (1008) என்றும் பெயர்களைச் சொல்லி வழிபடுகிறோம் இறைவனின் குணங்களை இப்படி 108, 1008 எண்களால் குறிப்பிடுகிறோம். லலிதா சஹஸ்ர நாமக் கதைகளிலும் தேவிக்குப் பல கோடி பெயர்கள் இருக்கும் சம்பவம் வருகிறது.
***
தேவர்கள் எண்ணிக்கை 33. அவர்கள் யார் யார் ?
ஆதித்யர்கள் 12;
ருத்ரர்கள் 11;
வசுக்கள் 8;
அஸ்வினி தேவர்கள் 2= 33
இவர்களுக்கு இந்திரன் தலைவன்
இவர்களைத் துவாதச ஆதித்தர், ஏகாதச ருத்ரர், அஷ்ட வசுக்கள் , அஸ்வினி தேவர்கள் அல்லது நாஸத்யர்கள் என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லுவர்.
இந்த விஷயம் வேத கால இலக்கியம் முழுவதிலும் வருவதைச் சங்க நூல்களும் செப்புகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமதத்தின் அத்தனை தகவல்களையும் தமிழர்கள் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. பரிபாடல், திருமுருகாற்றுப்படை மற்றும் சங்க காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் முப்பத்து மூவர் இடம்பெறுகின்றனர்.
****
பரிபாடல் வரிகள்
விதியின் மக்களும்
மாசிலெண்மரும் பதினோரு கபிலரும்
……..
தாமா விருவரும் — பரிபாடல் 3
(கபிலர் – காசிபன் மக்கள் பன்னிரு ஆதித்தர் )
****
நாலெண் டேவரும் நயந்து நிற்பாடுவார் —பரிபாடல் 3
(வசுக்கள், திவாகரர்/ஆதித்தர், உருத்திரர், மருத்துவர் என நால்வகைப்பட்ட தேவர்களும் விரும்பி நின்னைப் புகழ்வர் )
****
உலகிருளகற்றிய பதின் மருமிரிருவரும்
மருந்துரையிறுவருவருந்திருந்து நூலெண்மரும்
ஆதிரை முதல்வனிற்கிளந்த
நாதர் பன்னொருவரும்— பரிபாடல் 8
****
நால்வேறியற் கைப்பதி னொரு மூவர் — திருமுருகாற்றுப்படை
****
நால்வகைத்த தேவரும் மூவறுகணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்ததொரு பாடல் — சிலப்பதிகாரம்
***

பரிபாடல் முதலிய நூல்களில் விரிவாகச் சொன்ன தகவலை ஆண்டாள் ஓரிரு சொற்களில் முப்பத்து மூவர் என்று சுருக்கிச் சொன்னதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். 33 என்ற எண்ணைச் சொன்னாலே தமிழர்களுக்கு உடனே புரிந்து விடும்; அந்த அளவுக்குத் தமிழர்கள் வேதங்களை அறிந்திருந்தனர் என்பதை ஆண்டாள் பாசுரம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
பரிபாடலில் உள்ள பெரும்பாலான விஷயங்கள், ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாலும் அவரது வாசகங்கள் சங்க கால வாசககங்களுக்கு அருகிலிருப்பதாலும் அவரை ஒன்பதாவது நூற்றாண்டில் வைக்காமல் ஏழாவது நூற்றாண்டில் அல்லது அதற்கு முன் வைப்பதே பொருந்தும்.
—subham—-
Tags– முப்பத்து மூவர், திருப்பாவை, ஆராய்ச்சிக்கட்டுரைகள் 11