அம்பரமே தண்ணீரே சோறே! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 12 (Post No.14,046)

Written by London Swaminathan

Post No. 14,046

Date uploaded in Sydney, Australia – 3 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்—திருப்பாவை 17

பொருள்: ஆடைகளையும்குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

****

ஆராய்ச்சிக்குரிய நான்கு விஷயங்கள்

1.உம்பியும் நீயும் உறங்கேல்

2.அம்பரமே தண்ணீரே சோறே

3.அறிவுறாய்!

4.அம்பரம் ஊடறுத்து

ரோட்டி (ரொட்டி)  கப்டா  அவுர் மகான் Roti Kapda Aur Makaan रोटी कपड़ा और मकान உணவுஉடைஉறைவிடம் என்பன மனிதனின் அடிப்படைத் தேவைகள்; இது உலகெங்கிலும் முழங்கும் சொற்கள். தில் உறைவிடம் (வீடு) பற்றி ஆண்டாள் சொல்லவில்லை, அதற்குப் பதிலாக பாதுகாக்கப்பட்ட குடி நீர் பற்றிப் பேசுகிறாள் ; ஏனெனில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் யாருக்கும் வீடு அல்லது வசிப்பிடம் ஒரு பிரச்சனையே இல்லை ; காலி இடங்களில் மக்கள் குடிசை போட்டு வாழ்ந்தனர்; அரசும் காடு திருத்தி நாடக்கிக் கொடுத்தது  ஆனால் சுத்தமான குடிநீர்,  ஆறுகள் ஓடாத இடங்களில் ஒரு பிரச்சினையாக இருந்தது . இதற்காக சத்திரங்களைக் கட்டி, குளங்களையும் கிணறுகளையும்  வெட்டி அரசு உதவி செய்தது. இதை ஆண்டாள் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.

அம்பரம் என்ற சொல்லைச் சிலேடைப் பொருளில் ஆண்டாள் பயன்படுத்துகிறாள். முதலில் அம்பரம் என்பது ஆடை என்னும்

பொருளிலும் பின்னர் அம்பரம் என்பது ஆகாயம் என்னும்

பொருளிலும் வருகிறது; இது ஆண்டாளின் தமிழ் அறிவினைக் காட்டுகிறது.

சமணர்களால் இரு பிரிவினர் உண்டு திகம்பரர் , ஸ்வேதாம்பரர்:

திக் என்னும் திசையையே  ஆடையாக   கருதியோர் நிர்வாணமாக வலம் வந்தனர் ; அவர்கள்  திகம்பரர்.

வெள்ளை /ஸ்வேதா உடை அணிந்தோர் இன்னுமொரு பிரிவினர்; அவர்கள் வெள்ளை ஆடை அணிந்த ஸ்வேதாம்பரர்;

அங்கு அம்பரம் என்பது ஆடையைக் குறித்தது.

ஆண்டாள் பயன்படுத்தும் இரண்டாவது அம்பரம் ஆகாயம் என்னும்  பொருளில் வந்தது  வாமனாவதாரத்தில் குள்ளனாக வந்த விஷ்ணு த்ரிவிக்ரமனாக விச்வரூபம் எடுத்தபோது அவன் ஆகாயத்(அம்பரம்) தையும் தாண்டிச் சென்றான்.

இந்த வாமனாவதாரம் ரிக் வேதத்திலும் உள்ளது ; வள்ளுவனும் ஒரு குறளில் அடி அளந்தான் என்று  வாமானவதாரத்தைப் போற்றுகிறார்; இன்னும் சில இட ங்களில் தாமரைக் கண்ணன், பல் மாயக் கள்ளன் என்று கிருஷ்ணனை வள்ளுவர் போற்றுகிறார்; ஆண்டாளும் நரசிம்ம அவதாரம் முதல்  பல அவதாரங்களைக் குறிப்பிட்ட போதும் வாமன/ த்ரிவிக்ரமன் கதையை இந்தப்பாசுரத்தி லும், மேலும் இரண்டு பாசுரங்களிலும் போற்றுகிறார் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றும் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் பாடியுள்ளார்.   .

அறிவுறாய்! என்ற ஆண்டாளின் சொல்லுக்கு விழித்தெழு , விழிமின் என்று ஆன்றோர்கள் பொருள் சொல்லுவர். அதுவும் ஆண்டாளின் சொல்லாக்கத்தைக் காட்டி  நிற்கிறது

உம்பியும் நீயும் என்று பலராமனிடம் சொல்லுவது அக்கால வழக்கினைக் காட்டுகிறது இப்போது நாம் தம்பி என்று சொல்லுவது அக்காலத்தில் அம்பி, உம்பி என்ற பொருளில் வழங்கின

இலங்கைத் தமிழில் அவன், இவன் உவன் என்ற மூன்று சொற்களை பயன்படுத்துகின்றனர் அருகில் இருப்பவன் இவன் ;தொலைவில் இருப்பவன் அவன் ; இடையில் இருப்பவனே உவன்.

சங்க காலத்தில் அம்பி, உம்பி இம்பி என்று பேச்சு வழக்கில் இருந்திருக்கலாம்.

திருப்பாவைக்கு உரை எழுதிய சான்றோர்கள் நந்த கோபன் அரண்மனையில் நான்கு அடுத்தடுத்த அறைகள் இருந்ததாக ஊகிக்கின்றனர் .

முதற்கட்டில் நந்தகோபரும், இரண்டாங்  கட்டில் யசோதையும் மூன்றாங் கட்டில் கண்ணபிரானும் நான்காம் கட்டில் பலதேவரும் பள்ளி கொள்ளுவது முறையாதலால் இந்த வரிசையைத் திருப்பாவை 17ல் பின்பற்றியதாகவும் சொல்கிறார்கள்..

****

கோவிலில் இரு பெரும் தெய்வங்கள்

சங்க காலத்தில் கண்ணனையும் பலதேவனையும் ஒரே சந்நிதியிலோ அல்லது அடுத்தடுத்த சந்நிதிகளிலோ வைத்து வணங்கியதை பல கோவில்களிலும் சங்கப்பாடல்களிலும் காண முடிகிறது (ஆனால் பலதேவன் சந்நிதிகள் இப்போது காலியாக உள்ளன.) அதே போல சிவனையும் விஷ்ணுவையும் ஒரே கோவிலில் வணங்கியதையும் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் கூட மிகப்பெரிய சைவத் தலமான சிதம்பரத்தில் சிவனும் பெருமாளும் ஒரே கோவிலில் இருப்பதைக் காண்கிறோம். கேரளத்திலும் இது போல உள்ளது

2200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய-கிரேக்க அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் பலராமனையும் வாசுதேவ கிருஷ்ணனையும் பொறித்துள்ளார்கள்.

Indo-Greek Coins

சங்கத் பாடல்கள் முழுவதிலும், புலவர்கள்  கிருஷ்ணன்—

பலராமன் ஜோடியை வருணித்துள்ளார்கள்  இதை ஆண்டாளும் பாசுரம் 17-ல் பாடியுள்ளார்.

***

புறநானூறு 56

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,       5

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல் இசை, நால்வருள்ளும்,                 10

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்   15

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,          20

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! —  புறநானூறு 56

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது..

கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி, ,கலப்பை ஆயுதப் படை, பனைமரக் கொடி ஆகியவற்றை உடைய பலராமன் ;

இந்தப் பலராமன் போல் வலிமை கொண்டவன்.

நீல நிற ரத்தினக்கல் போன்ற நீலநிற மேனி, கருடப்பறவைக் கொடி

ஆகியவற்றை உடைய திருமால் ;

திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்.

(பலராமனின் பனைக்கொடியைத் தொல்காப்பியமும் கூறியுள்ளது)

****

நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,

முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்

கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,

தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,

நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ,                 5

இளையது ஆயினும் கிளை அரா எறியும்

அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்

செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,

அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,                  10

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;

பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீல் நிற உருவின் நேமியோனும், என்று                    15

இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?

இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்                 20

உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்

பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்

கையகப்படுவது பொய் ஆகாதே;

அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,

தொல்லோர் சென்ற நெறிய போலவும்,                     25

காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்

ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,

இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று

அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்

கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி       30

நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த

குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.– புறநானூறு 58

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும்,

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்,

ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

****

மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,

வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி

அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்

வருந்தினன்” என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;

நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,                        5

அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு

அரிய வாழி, தோழி! பெரியோர்

நாடி நட்பின் அல்லது,

நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே.--நற்றிணை 32

மாயோன் -கிருஷ்ணன் / விஷ்ணு

வாலியோன் – பலராமன்/ பலதேவன்

****

சங்க காலம் முதல் ஐந்தாம் நூற்றாண்டு  வரை இந்தியா முழுதும் இவ்விருவரையும் போற்றித் துதிபாடியதையும் கோவில்களில் வைத்து வணங்கியதையும் இலக்கியங்களும் கல்வெட்டுகளும் உறுதிசெய்கின்றன..

மேலும் பல இலக்கியச் சான்றுகள்

கலித்தொகை 104; 105;

பரிபாடல் 2-20/23;

பரிபாடல் 3-81;

பரிபாடல் 13-29/33;

பரிபாடல் 15-54/61

சிலப்பதிகாரம் 5-171/172;

சிலப்பதிகாரம் 14-8/9

இன்னா நாற்பது -1

திணைமாலை 58

யாப்பருங்கல விருத்தி – 78 உரை

சீவக சிந்தாமணி

ஆகியவற்றிலும் இரு பெருந் தெய்வங்களைப் புலவர்கள் பாடிப்பரவியள்ளனர்.

—subham—

Tags- சங்க இலக்கியம் புறநானூறு , நற்றிணை ,இரு பெரும் தெய்வங்கள் , பலதேவன், பலராமன், கண்ணன், வாலியோன் , பனைக்கொடி, அம்பரம் , ஆண்டாள் , திருப்பாவை  பாசுரம் 17

Leave a comment

Leave a comment