
Post No. 14,045
Date uploaded in Sydney, Australia – –3 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
26-12-24 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
காஸுமா ததேய்ஷி – வியத்தகு மாமனிதர்! -1
ச. நாகராஜன்
பழைய காலம் போல வங்கியில் க்யூ வரிசையில் நின்று காசோலையைக் கொடுத்து பணத்தை வாங்குவது போய், நினைத்த நேரத்தில் நமக்கு மிக அருகில் உள்ள இடத்தில் உள்ள பூத்துக்குப் போய் ஒரு கார்டைச் செருகி வேண்டுமென்ற பணத்தை நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள வழி செய்யும் ஏ.டி.எம் எனப்படும் ஆடோமேடட் டெல்லர் மெஷினைப் பெருமளவில் உருவாக்க வழி வகுத்தவர் யார்? ஆரோக்கியம் பெற ஏராளமான எலக்ட்ரானிக் கண்காணிப்பு சாதனங்களைப் பெருமளவில் தரத்துடன் உற்பத்தி செய்ப வழி வகுத்தவர் யார்? இவற்றை விட ஊனமுற்றவருக்காக வியத்தகும் சேவையைச் செய்தவர் யார்? இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் காஸுமா ததேய்ஷி என்பது தான்!
பிறப்பும் இளமையும்
ஜப்பானில் உள்ள குமாமோடோ என்ற நகரில் 1900ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி குமானோசுகே – ஐ ததேய்ஷி தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தார் காஸுமா ததேய்ஷி. இந்தக் குடும்பம் பாரம்பரியமாக ஜப்பானியர் பயன்படுத்தும் கோப்பைகளைத் தயாரித்து வந்தது. இவைகள் பரிசுப் பொருள்களாகக் கொடுக்கப்பட்டு வந்தன.
1908ம் ஆண்டு மார்ச் 26ம் நாள் ததேய்ஷியின் தந்தை மறைந்தார். உடனே குடும்பத்தின் வியாபாரம் குறைய ஆரம்பித்தது. ததேய்ஷியின் தாயார் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பப்பள்ளியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாலும் அவர் குடும்பத்தின் நிலைமையைக் கருதி செய்தித்தாள்களை விநியோகிக்க ஆரம்பித்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ததேய்ஷியின் பாட்டி குடும்பத்தைப் பார்த்துக் கொண்டதோடு அவருக்கு ஒழுக்கம், விஸ்வாசம், சுதந்திரமாக இருத்தல் போன்ற நற்பண்புகளை ஊட்டினார்.
இளமையில் குறும்புக்காரராக இருந்த ததேய்ஷி நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொண்டார். ‘இளமைக்கால அனுபவங்கள் பின்னால் எனக்குப் பெரிதும் உதவியது’ என்றார் அவர்.
ட்ரவுஸர் ப்ரஸ்

ஆரம்பகால தொழில்நுட்பப் படிப்பை குமாமோடோ தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் துறையில் முடித்துப் பட்டம் பெற்ற அவர் ஹையாகோ ப்ரீஃபெக்சுரல் அரசு நிறுவனத்தில் மின்னியல் பொறியாளராக வேலை பார்க்கத் தொடங்கினார். அவரது நண்பர் ஒருவர் அவரை இண்டக்ஷன் டைப் ரிலேயைத் தயாரிக்கத் தூண்டினார். இது அவருக்கு மின் சாதனங்களைத் தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தது.
1929ல் அமெரிக்காவில் வால் மார்ட் பெரும் வீழ்ச்சியை அடைந்தது. இது ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளை அனைத்தையும் பாதித்தது. ததேய்ஷி தனது ராஜிநாமாவைச் சமர்ப்பித்து தனியாகத் தொழிலைத் தொடங்கினார். முதலில் ட்ரவுஸர் ப்ரஸ் ஒன்றை அவர் தயாரித்தார்.
ட்ரவுஸர் ப்ரஸ் என்பது நாம் அணியும் சூட்டில் உள்ள சுருக்கங்களை மின்சார இயக்கத்தால் நீக்கும் மின் சாதனமாகும்.
பின்னர் 1932ல் எக்ஸ் ரே விற்பனையாளர்காக இருந்த தனது நண்பரின் தூண்டுதலால் எக்ஸ் ரே மெஷினுக்கான டைமர் ஒன்றைத் தயாரித்தார்.
தனது தொழில் வளர்ந்து வருவதை உணர்ந்த அவர் ஒஸாகா நகரில் உள்ள ஹிகஷினோடா என்ற இடத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினார். ‘ததேய்ஷி எலக்ட்ரிக் மானுஃபாக்சரிங் கம்பெனி’ என்று ஆரம்பிக்கப்பட்ட அது உலகமே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமான ஓம்ரான் நிறுவனமாக உயர்ந்தது.
ஓம்ரான் கார்பொரேஷன்
க்யோடோ நகரில் உள்ள ஒரு பகுதிக்கு ஓமுரோ என்று பெயர். அதிலிருந்து ஓம்ரான் என்ற வார்த்தை உதித்தது. இயந்திரங்கள் தனது வேலையைச் செய்யட்டும்; மனிதனோ இன்னும் அதிகம் படைப்பாற்றலைச் செய்யட்டும்’ என்றார் ததேய்ஷி. எல்லா சாதனங்களையும் தானியங்கி முறையில் அவர் உருவாக்க ஆரம்பித்தார். ஏ டி எம் எனப்படும் ஆடோமேடட் டெல்லர் மெஷினை முதன் முதலில் பெருமளவில் அவர் உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். ஒரு கார்டைச் செருகி மெஷினிலிருந்து பணத்தை எடுப்பதைக் கண்ட நடைமுறையை உலகமே முதலில் பார்த்து வியந்தது. இப்போது இது சகஜமாக ஆகி விட்டது. அவரது இன்னொரு நிறுவனமான ஓம்ரான் ஆயில்ஃபீல்ச் அண்ட் மரைன் என்ற நிறுவனம் ஏசி மற்றும் டிசியால் இயங்கு, சாதனங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது.
2023ல் ஓம்ரான் 8760820 லட்சம் யென்னை விற்பனையாகக் கொண்டது.
(ஒரு யென் என்பது 0.552 இந்திய ரூபாயாகும்). 120 நாடுகளில் ஓம்ரான் தனது தயாரிப்புகளை இப்போது வழங்கி வருகிறது.
வீட்டில் உபயோகப்படுத்தப்படும் சாதனங்களையும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய கண்காணிப்பு சாதனங்களையும் ஓம்ரான் தயாரிக்க ஆரம்பித்தது. இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவிகள், டிஜிடல் தெர்மாமீட்டர், பாடி காம்போஸிஷன் மானிடர், சுவாச சிகிச்சைக்கான நெபுலைசர்கள் உள்ளிட்ட ஏராளமான சாதனங்கள் இந்த தயாரிப்பில் அடங்கும்.
யடாகா நகாமுரா என்ற டாக்டர் ஜப்பானில் நடந்த பாராலிம்பிக்ஸில் போட்டிகள் முடிந்த பின்னர் ஜப்பான் வீரர்கள் மட்டும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்பதைக் கண்டார். வருத்தம் கொண்டார்.
தனது மனப்பான்மை போலவே உள்ள ததேய்ஷியுடன் இணைந்து அவர் 1972ல் ஒம்ரான் டையோ என்ற நிறுவனத்தையும் 1985ல் ஓம்ரான் டையோ எலக்ட்ரிக் கம்பெனி லிமிடட் என்ற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். அவர்களது ஒரே கொள்கை: “தர்மம் அல்ல; வாய்ப்பு தான்” (Not a Charity but a Chance). ஊனமுற்றோருக்கான விசேஷ சாதனங்களை இந்த நிறுவனங்கள் தயாரித்தன.
to be continued……………………………..
.***