வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே (Post.14,049)

Written by London Swaminathan

Post No. 14,049

Date uploaded in Sydney, Australia – 4 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே— திருவருட்பா பாடல் , அருட்பிரகாச  வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 

எனக்கு ஆறு அல்லது ஏழு வயதில் மனப்பாடம் ஆன பாடல் இது.  ஏனெனில் நான் மதுரையில் யாதவர்கள் நடத்தும் யாதவா ஸ்கூலில் முதல் ஐந்து வகுப்புகளைப் படித்தேன்.  யாதவர்கள் ஒரு புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலையும் நடத்தி வந்தார்கள். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அடுத்தபடியாக நான்கு மாசி வீதிகளையும் வலம் வரும் ஒரே தெய்வம் அந்தக் கிருஷ்ணர் மட்டுமே. அவ்வளவு சிறப்பாக நடத்திய கோவில் அது. என்னுடைய வடக்கு மாசிவீ தி வீட்டிலிருந்து பள்ளிக்கூடமும் கோவிலும்  கூப்பிடு தூரம்தான் .

யாதவர்கள்களோ க்ருஷ்ண பக்தர்கள். ஆயினும் அந்தப் பள்ளியில் பாடிய பாடலோ வள்ளலார் பாடல். அதுதான் காலையில் தினமும் பள்ளிக்கூட இறைவணக்கப் பாடல். குடுமி வைத்த, நாமம் போட்ட ஒரு அய்யங்கார் எங்களுக்கு ஹெட்மாஸ்டர் ; பெயர் எல்லாம் மறந்துவிட்டது என்னுடைய ஆப்த நண்பர்கள் சுடலை முத்து, கோவிந்தன், பக்கோடா சுந்தரம்; இவை தவிர எதுவுமே நினைவு இல்லாவிடினும் வள்ளலார் பாடல் மட்டும் இன்று வரை– 77 வயது வரை–  நினைவில் இருக்கிறது.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ( எஸ் எஸ் எல் சி ) படித்தேன். அங்கு தினசரி இறைவணக்கப் பாடல் காக்கைச் சிறகினிலே நந்த லாலா. அதைப் பாடிய மதுரை சேஷகோபாலன் எனக்கெல்லாம் மிகவும் சீனியர். பிற்காலத்தில் மதுரை சேஷகோபாலன் மிகவும் புகழ்பெற்ற பாடகர் ஆனார்.

இப்பொழுது ஆரம்பப்பள்ளிக் கூடப் பாடலுக்கு நன்றாகப் பொருள் தெரிகிறது  நிறைய நல்ல விஷயங்களை சிறு வயதிலேயே குழந்தைங்களை மனப்பாடம் செய்ய வைக்க வேண்டும். பிற்காலத்தில் அவர்களுக்கு ஆழ்ந்த பொருளைக் கற்பிக்கும் . விநாயகர் அகவல் பற்றி காஞ்சி பரமாசார்யசுவாமிகள் (1894-1994) குறிப்பிடுகையில் தினமும் அதைப்படித்து வந்தால் போகப்போகப் பொருள் புரியும் என்று சொல்லிவிட்டு நிறுத்திவிடுகிறார் காரணம் இதை எத்தனை விளக்கினாலும் நாமே மனதில் பொருளை வரவழைத்துக் கொண்டால் அது ஆழம் ஆழமாகச் சென்று கொண்டே போகும்.

சிறைச் சாலையில் இந்துக் கைதிகளை சந்திக்கும் பகுதிநேர வேலையையும்  லண்டனில்  செய்துவந்தேன். HINDU CHAPLAIN ஹிந்து சாப்ளைன் என்று பெயர்.  பெண்கள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. ஒரு இலங்கைப் பெண்மணி – இளம் வயது — பாஸ்போர்ட் திருத்திய குற்றத்துக்காக ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றிருந்தார் ; அவரிடம் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்குகிறீர்கள் என்றேன் ; முருகன் என்றார். என்ன தெய்வபக்திப்   பாடல் தெரியும்? என்று கேட்டேன். பேந்தப் பேந்த விழித்தார் ; அம்மா ,அப்பா என்ன பாடினார்கள் ; அதாவது நினைவு இருக்கிறதா? என்று கேட்டேன் . ஆங்கிலத்தில் மில்க், ஹனி என்றெல்லாம் வரும் பாடல் என்றார். உடனே நான் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்….. என்ற பிள்ளையார் துதியைச் சொன்னேன். ஆமாம் அதுதான் அதுதான் அம்மா சொல்லிக்கொடுத்தார் என்று தலையை ஆட்டினார்  இதனால்தான் இளமையில் கல் என்று என்று ஆன்றோரும் சொன்னார்கள்.  ஆங்கிலத்திலும் CATCH THEM YOUNG  என்று சொல்லுவார்கள் .

****

இப்போது வள்ளலார் பாடலின் பொருளைக் காண்போம் :

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

களிப்பு = பேரானந்தம்

பக்த விஜயம் என்ற நூலைப் படித்தால் கீழ்மட்ட தொழில்களை செய்துவந்த குயவர்கள், நெசவாளர்கள், சக்கிலியர் , உழவர்கள் — அதாவது பள்ளிக் கல்வி கற்காத –பக்தர்களும் பெரிய மஹான்களான கதைகளை அறியலாம். ஆழ்வார்களில், நாயன்மார்களில், இது போல பல அடியார்களைக் காண்கிறோம். ராம கிருஷ்ண பரமஹம்சரோ ரமணரோ சேஷாத்ரி சுவாமிகளோ  பள்ளிக்கூடம் செல்லவில்லை .அவர்கள் எல்லோர்க்கும் இறைவன் அருள் புரிந்தார் ; பெரிய படிப்பு படித்த சுவாமி சிவானந்தர், ஆதிசங்கரர் போன்றோருக்கும் அருள் புரிந்தார் ஆக ஆன்மீக முன்னேற்றம் அடைய கல்வி என்பது ஒரு பொருட்டல்ல .

****

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

சூர்தாஸ் , தீர்க்கதமஸ் போன்ற பக்தர்கள் கண் பார்வையற்றவர்கள் . தீர்க்க தமஸ் — நீண்ட இருள் –  ஒரு ரிக் வேத ரிஷி; அவருடைய பெயரே அவர் குருடர் என்பதைக் காட்டும்; அவர் பாடிய புகழ்பெற்ற துதிகள் ரிக்வேதத்தில் உள.  புகழ்பெற்ற கிரேக்க இதிஹாசக் கவிஞர் ஹோமர் என்பவரும் அந்கரே ; அவர்களுக்கு எல்லாம் ஞானக் கண் கொடுத்தவன் இறைவன் ; இறைவனைக் கண்டவர்கள் வரிசையில் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சாது சந்யாசிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் ஞானக்கண் கொடுத்ததால் இன்று ரமணர், ராமகிருஷ்ணர் விவேகானந்தர் போன்றோரின் அ,,ய சொற்பொழிவுகளை நாம் படிக்க முடிகிறது 

****

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

வல்லார் என்பதை உடல் வலிமை, மன வலிமை, பொருள் வலிமை உடையோர் என்றும் மாட்டார் என்பதை அவை இல்லாதோர் என்றும் பொருள் கொள்ளாலாம்.  மதுரையில் சிவன் விளையாடிய 64 லீலைகளைக் கூறும்  திருவிளையாடல் புராணத்தைப் படிப்போருக்கு  சிவ பெருமான் பெரிய அரசர்களுக்கும் வலிமையற்ற ஏழைப்பங்காளருக்கும் எப்படியெல்லாம் அருள்புரிந்தார் என்பது புரியும்.

****

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

இறைவனை மதிக்காதவர்களை நாம் அசுரர்கள் என்போம். நரகாசுரன்,  ஹிரண்யகசிபு, மஹாபலி, ராவணன் போன்ற அசுரர்களுக்கும் இறைவன் மோட்ச கதியைக் கொடுத்ததை புராண இதிகாசத்தில் காண்கிறோம் ; அவர்கள் செய்த பாவங்கள் அத்தோடு கழிவதால் அவர்கள் இறைவன் கைகளில் இறக்கும் பாக்கியத்தைப் பெறுகின்றனர் . இதைக் கம்ப ராமாயணத்தில் வாலி வதை படலத்தில் காணலாம்.  மறைந்திருந்து கொன்றதாக ராமனைக் குற்றஞ் சாட்டிய வாலி, இறுதியில் ராமன் கையால் மரணம் அடைந்தது பாக்கியமே என்கிறான்.

இன்னொரு பொருளும் உண்டு  இறைவன் எல்லோருக்கும் மதி- புத்திமதி — சம அளவில் கொடுத்து இருக்கிறான். அவரவர் அதைப் பயன்படுத்துவது வேறு வேறு விதமாக இருக்கிறது பிறப்பொக்கும் எல்லா உயிரும் ; ஆனால் செய்தொழிலால் வேற்றுமை ஏற்படுகிறது என்று வள்ளுவனும் பகர்வான்.

****

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

இறைவன் பாரபட்சமற்றவன்; அவன் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்றவன். தீதும் நன்றும்  பிறர் தர வாரா என்பது கணியன் பூங்குன்றன் என்ற தத்துவ ஞானியின் பொன்மொழி அவரவர் பூர்வ ஜென்ம வினைப்பயனால் ஒருவர்  தவறான வழியிலோ சரியான வழியிலோ  செல்கின்றனர் ; உபநிஷத்தில் வரும்  த,  த, த, கதை இதை விளக்குகிறது அசுரர்கள், தேவர்கள், மனிதர்கள் மூவரும் உபதேசம் கேட்கச் சென்றனர்; இறைவன் பிரஜாபதி  சொன்னது ஒரே சொல் அதைத் தேவர்கள் தர்மம் /அடக்கம் வேண்டும் என்றும் அசுரர்கள் தயா /கருணை வேண்டும் என்றும்  மனிதர்கள் தத்த / தானம் செய்ய வேண்டும் என்றும் பொருள்கொண்டனர் மேற்கூறிய இறப்பிண்டு வள்ளலார் வரிகளையும் விளக்கு கதை இது

நாம் பிறக்கும்போது நமது பாங்கில் இறைவன் ஒரு தொகையை டெபாசிட் செய்து அனுப்புகிறான். எப்படி முதலீடு செய்தால் அது வளரும் என்றும் என்ன செய்தால் அது தேயும் என்றும் (இதிஹாச, புராண, தர்ம சாஸ்திர நூல்களில்) சொல்லியும் கொடுக்கிறான்; இதற்குப் பிறகும் விவேகத்தைப் பயன்படுத்துவது நம் கைகளில்தான் இருக்கிறது ..பஸ்மாசுரன் போன்றவர்க்கும் சிவன் வரம் கொடுத்தார் ராவணனுக்கு வரம்/ அஸ்திரம்  கொடுத்தார் ; அவர்கள் தவறாகப் பயன்படுத்தியதால் அழிந்தனர் .

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே

இவ்வாறு எல்லோருக்கும் பாரபட்சமின்றி அருளும் சிவ பெருமானே என்னுடைய துதியை ஏற்பாயாக என்பது வள்ளலாரின் வேண்டுகோள்.

—SUBHAM—-

TAGS- வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

Leave a comment

Leave a comment