Post No. 14,052
Date uploaded in Sydney, Australia – 5 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் 1823- 1874
பள்ளிக்கூடப் பருவத்தில் மதுரையில் வீட்டில் பஜனைகள் நடக்கும் . எனது தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெங்கடராமன் சந்தானம் சங்கீத ரசிகர் ; தாயார் வயலினில் சர்ட்டிபிகேட் வாங்கி சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் வயலின் வாசித்தவர். அந்த சங்கீத ஞானத்தைத் தக்கவைத்துக்கொண்டது எனது தம்பி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பிரின்சிபாலாக இருந்த சூரிய நாராயணன் மட்டுமே.
பத்திரிகை ஆசிரியர் என்பதால் தந்தையிடம் செய்திகளைக் கொடுக்க நேரடியாக வடக்கு மாசிவீதி வீட்டுக்கே வந்து விடுவார்கள்; ஏனெனில் என் தாயார் (திருமதி ராஜ லெட்சுமி சந்தானம் ) போடும் காப்பி மிகவும் பிரசித்தம்; யார் எப்போது வந்தாலும் அந்த காப்பி கிடைக்கும். அப்படி வரக்கூடியவர்களில் ஒருவர் மஹாதேவன் அவர் வசித்தது கல்லறைச்ச சந்து (உண்மையான பெயர் சமப்ந்த மூர்த்தித்தெரு). அதிக தூரம் இல்லை. அவர் நாடக நடிகர் ; நன்றாகப் பா டுவார். (உண்மையான தொழில் எனக்குத் தெரியாது) எப்போது வந்தாலும் அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் என்ற பாடலைப் பாடச் சொல்லி கேட்போம் .அவர் வள்ளலார் பாடல்களையும் வள்ளி திருமணம் போன்ற நாடகப் பாடல்களையும் பாடுவார். அவைகளையெல்லாம் ரசித்துக் கேட்போம்.
தந்தையும் பஜனையில் அம்பலத் தரசே அரு மருந்தேஎன்ற பாடலைப்பாடுவார் ஒவ்வொரு வரியையும் நாங்கள் திரும்பிச் சொல்லுவோம். பிற்காலத்தில் நானும் அடுத்த வீட்டு ஐயங்கார் வீட்டில் அவருடைய பையன்களுடன் சேர்ந்து பஜனை செய்தேன்; அதில் ஒரு பாடல் அம்பலத் தரசே அரு மருந்தே ;சிவன் மீது அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்) பாடிய பாடல் ; அப்போதெல்லாம் பட்டையாக விபூதி பூசிய வள்ளலார் சிவ பக்தர் என்றே நினைத்திருந்தேன் ; எங்கள் வீட்டிலும் சுவரில் தொங்கிய படங்களில் ஒன்று வள்ளலார் படம். சொல்லபோனால் எங்கள் வீட்டில் இல்லாத சாமியார் படமே இல்லை. என் தந்தையோ ஆறாயிரம் புஸ்தகங்களை சேர்த்து வீட்டில் லைப்ரரியே வைத்திருந்தார் அவற்றில் பெரும்பாலானவை சாமியார் புஸ்தகங்கள்தான் .
பள்ளிக்கூடத்தில் தமிழ் புஸ்தகத்தில் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே ,அல்லது அப்பா நான் கேட்டருள்புரிதல் வேண்டும் என்ற பாடலும்தான் இருக்கும்; அதைப் பரீட்சைக்காக மனப்பாடம் செய்வோம்.
மதுரைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தபோது முதல் பேப்பர் ஆங்கிலம்; இரண்டாவது பேப்பர் தமிழ்; மூன்றாவது பேப்பர் நாம் எடுத்துக்கொண்ட பாடம். அப்போது தமிழில் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்ற பாடல் வந்தது . அந்தப்பாடலைத்தான் அதிகமான பாகவதர்கள் பாடியுள்ளனர். அதைப்படாத தமிழிசைக்கு கச்சேரிகள் இல்லை .
அந்தப்பாடலையும் அது இடம்பெறும் வள்ளலாரின் தெய்வ மணி மாலையையும் படிப்போருக்கு வள்ளளார் பெரிய முருக பக்தர் என்பது தெளிவாகும்.
அவர் பாடிய மகாதேவ மாலையில் நூறு பாடல்கள் இருந்தாலும் சிவ பெருமானைப் பற்றி அதிகம் சொல்லாமல் பொதுவான தத்துவ விஷயங்களையே அதிகம் பாடியுள்ளார்.
ஆனால் தெய்வ மணிமாலை, கந்தர் சரணப் பத்து போன்ற பாடல்களில் தெளிவாக, வெளிப்படையாக முருகனைப் பாடுகிறார்.
வள்ளலார் முருகனை அதிகம் பாடினாரா? சிவனை அதிகம் பாடினாரா? என்று பட்டி மன்றம் நடத்தினால் நான் முருகன் பக்கமே நின்று பேசுவேன்
****
தெய்வ மணிமாலை பற்றிப் பார்ப்போம்.
ராமலிங்க சுவாமிகள் ஒன்பது வயதிலேயே முருகன் பற்றிப் பாடினார்; 24 வயது வரை சென்னையில் வாழ்ந்து கந்த கோட்டத்தினை வலம் வந்தார். சென்னையைத் தரும மிகு சென்னை என்று புகழ்ந்தார்; காரணம்; சென்னையிலும் சென்னையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் சித்தர் சமாதிகள் உள்ளன. கந்த கோட்டம், கபாலீஸ்வரர் கோவில், திரு அல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் ,திருவான்மியூர் கோவில் போன்ற பாடல்பெற்ற தலங்கள் உள்ளன .
ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. அவர் பாடிய ஆறாயிரம் பாடல்களில் முருகன் மீது 560 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
தணிகைப் பெருமாள் மீதும் , சென்னை கந்தகோட்ட முருகன் மேலும் வைத்தீஸ்வரன் கோவில் முத்துக் குமார சுவாமி மீதும் , பொதுவில் முருகன் மீதும் பாடிக் குவித்திருக்கிறார்
இவற்றில் தெய்வமணிமாலை என்ற தலைப்பில் 31 பாடல்களும் கந்தர் சரணப்பத்து என்ற தலைப்பில் பத்து பாடல்களும் பாடியுள்ளார்.
ஆண்டாள் பாடிய முப்பது பாசுரங்களுக்கு அவரே சங்கத் தமிழ் மாலை என்று பெயர் சூட்டினார்; அதே போல வள்ளலார் பாடிய 31 பாடல்களுக்கு தெய்வ மணி மாலை என்று பெயர் சூட்டினார்; ஒவ்வொரு பாடலும் ஒரு ரத்தினம்/ மணி தான்!
எல்லாப் பாடலும் தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே — என்று முடியும்.
இந்தப் பாடல்களில் மிகவும் பாடப்பட்ட பாடல் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற……. அதற்கு அடுத்தபடியாக வரும் சிறந்த பாடல் ஈயென்று நானொருவரிடம் ………
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே
****
ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
இயல்பு மென்னிட மொருவரீ
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
லிடுகின்ற திறமும் இறையாம்
நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
னினை விடா நெறியு மயலார்
நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
நெகிழாத திடமு முலகில்
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
தீங்கு சொல்லாத தெளிவும்
திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
திருவடிக் காளாக்கு வாய்
தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
****
தெய்வமணிமாலை
பாடலில் பயின்று வந்த பா வகை = பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இப்பாடலில் வள்ளலார் வழிபடும் தெய்வம் = கந்தவேலன்.
தெய்வமணிமாலை என்னும் பகுதி திருவருட்பாவின் ஐந்தாம் திருமுறையில் உளது
****
தெய்வ மணிமாலையில் வரும் பாடல்களில் வரும் உவமை நயத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்
–SUBHAM—
வள்ளலார், முருக பக்தனா , சிவ பக்தனா, , ஆராய்ச்சிக் கட்டுரை 2, தெய்வ மணிமாலை, ஈயென்று நானொருவரிட, ஒருமையுடன் நினது திருமலரடி , திருவருட்பா