WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,056
Date uploaded in Sydney, Australia — 6 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
5-1-2025 ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசிய ஆகிய மூன்று கண்டங்களிலிருந்து ஞாயிறு தோறும் (இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு) ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹந்நாயகி சத்யநாராயணன்.
விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேஸ்வரம் |
அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் ||
– ஶ்ரீ வேத வியாஸர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது இந்துக்களுக்கு மிக முக்கியமாக அமையும் ஒரு திருத் தலமாகும். இதுவே புத்தமதத்தினருக்கும் மிக முக்கியமாக அமையும் திருத்தலமாகவும் திகழ்கிறது.
இத்திருத்தலம் பீகார் மாநிலத்தில் அதன் தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தெற்கில் உள்ளது. கல்கத்தா- வாரணாசி செல்லும் ரயில் பாதையில் கயா ரயில் நிலையத்தில் இறங்கி 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மூலவர் : கதாதரர்
தீர்த்தம் : ராமாயணத்தில் நிரஞ்சனா என்று குறிப்பிடப்படும் பல்குனி நதி
தல விருட்சம் : அட்சய வடம் எனப்படும் ஆலமரம்
இந்தத் தலத்தைப் பற்றிய முக்கியமான புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்பொரு காலத்தில் கயாசுரன் என்று ஒரு அசுரன் இருந்தான். சிறந்த விஷ்ணு பக்தனான அவன் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மா, சிவன் ஆகியோருடைய சரீரங்களை விடத் தனது சரீரம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அவன் வேண்டினான். அதன் படியே அவன் பரிசுத்தமாக ஆனான். இதனால் அவன் யாரைத் தொட்டாலும் அவர்கள் சொர்க்கத்தை அடைய ஆரம்பித்தனர். அவனால் பாவிகளும் கூட ஏராளமானோர் சொர்க்கத்திற்குச் செல்லவே தேவர்கள் விஷ்ணுவை நோக்கிப் பிரார்த்தித்து இதற்கு ஒரு தீர்வைத் தருமாறு வேண்டினர். விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா ஒரு யாகத்தை கயாசுரனின் சரீரத்தின் மீது செய்தார். யாகத்திற்கு பிரம்மாவும் சிவனும் வந்திருந்தனர்.
அக்னியின் சூடு அந்த அசுரனை ஒன்றும் செய்யவில்லை. யமனை அழைத்து அவனை எழுந்திருக்காதபடி செய்ய முயன்ற போதும் அவன் தலை ஆடியது. யமனின் மகன் அந்தத் தலை மீது காலால் அமுக்கியபோதும் உடல் அசைவு நிற்கவில்லை.
விஷ்ணு நேரில் பிரத்யட்சமாகி அசுரன் தலை மேல் தன் பாதத்தை வைத்தார். அத்துடன் அவன் தலை ஆடாமல் நின்றது. யாகமும் பூர்த்தியாயிற்று.
இங்குள்ள கோவில் விஷ்ணுவின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதாளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவே இந்த விஷ்ணு பாதம் ஆகும்.
இது கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்கு உள்ளது. எண்கோண வடிவில் அமைந்த இந்த கோவில் 30 மீட்டர் உயரமும் எட்டு அடுக்குகளும் கொண்டதாகும்.
அசுரனின் பிரார்த்தனையின் படி மும்மூர்த்திகளும் அனைத்து தேவதைகளும் இங்கு வசிக்கின்றனர். இங்குள்ள அட்சய வடத்தில் திதியை முடிப்பவர்களுக்கு முக்தி நிலையைக் கொடுக்க வேண்டும் என்ற கயாசுரனின் வேண்டுதலும் அருளப்பட்டது.
ஆகவே இங்கு சிரார்த்தம் செய்தால் ஏழு தலைமுறை பித்ருக்கள் மோக்ஷம் அடைவார்கள் என்பது ஐதீகம். ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமரும் சீதையும் லக்ஷ்மணரும் இங்கு வந்ததையும் ராமர் தசரதருக்கு பிண்ட தானம் கொடுத்ததையும் ராமாயணன் குறிப்பிடுகிறது
இங்கு வருபவர்கள் காமம், கோபம், மோகம் ஆகிய மூன்றையும் விட வேண்டும் என்பது ஐதீகம். அட்சய வடத்தில் சிரார்த்தம் செய்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்குப் பிடித்த ஒரு காய் அல்லது பழம் போன்ற எதையாவது விட்டு விடுதல் வேண்டும். இந்த உறுதி மொழியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
இங்குள்ள அட்சய வடத்தின் வேர்ப்பகுதி பிரயாகையிலும் நடுப்பகுதி காசியிலும் உச்சி மரக்கிளை கயாவிலும் இருப்பதாக ஐதீகம். இதை மூலம் – மத்யம் – அக்ரம் என்று குறிப்பிடுவது வழக்கம்.
இது உயரமான ஒரு இடத்தில் இருப்பதால் படிகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். அங்குள்ள கிணறு ஒன்றில் குளிக்கலாம்; கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
புத்த கயா
புத்த மதம் தொடங்கிய இடம் புத்த கயா ஆகும். இங்குள்ள போதிமரத்தடியின் கீழ் அமர்ந்து புத்தர் தியானம் செய்து ஞானம் பெற்றார். புத்தர் ஞானம் பெற்ற நாள் புத்த பூர்ணிமா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
புத்த கயாவில் போதி விருட்சம் எனப்படும் அரச மரம் உள்ளது.
இங்கிருக்கும் புத்தர் கோவில் 185 அடி உயரம் கொண்டது. இங்குள்ள போதி விருட்சத்தின் அடியில் புத்த பிட்சுக்கள் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பது பாரம்பரியப் பழக்கமாகும். இந்த மரத்திலிருந்து உதிரும் இலைகளே இங்கு வழங்கப்படும் பிரசாதமாகும். இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை உள்ளது. இதன் அருகே வைக்கப்பட்டிருக்கும் மரப்பலகை மீது நமஸ்கரித்து அனைவரும் வணங்குகிறார்கள்.
இங்குள்ள பிரகாரத்தைச் சுற்றி மணி மகுட அமைப்புகள் உள்ளன. புத்தரின் வாழ்க்கை வரலாறு இங்கு சித்திரமாக வரையப்பட்டுள்ளது. இங்குள்ள உருளைகளைச் சுற்றினால் செய்த பாவம் போகும் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை.
இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தாய் மடாலயம், முச்சலிண்டா ஏரி, பல்கு நதி, பிரம்மயோனி கோவில், சங்கமனா, சீனக் கோவில். வியட்நாம் கோவில் உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. இவற்றிற்கும் அனைவரும் செல்வது வழக்கம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ மஹாவிஷ்ணுவும் புத்த பெருமானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
***