

Written by London Swaminathan
Post No. 14,055
Date uploaded in Sydney, Australia – 6 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected and edited from national newspapers.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 5–ம் தேதி 2025-ம் ஆண்டு
*****
நேயர்கள் அனைவருக்கும் 2025–ஆம் ஆண்டு புத்தாண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
****
மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகாகும்பமேளா நடக்கிறது. இந்த மகாகும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கிடையே உத்தரபிரதேச மாநில நிதி மந்திரி சுரேஷ் கன்னா, நேற்று டெல்லியில் ஒரு வாகன பேரணியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-
மகாகும்பமேளாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
இந்த கும்பமேளாவின்போது, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில், சுமார் 40 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது
2 ஆயிரம் டிரோன்கள் வானில் பறந்தபடி புராண காட்சிகளை லேசர் ஒளியில் காட்சிப்படுத்த உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைகளுக்காக இந்திய ராணுவம் முகாம்களை அமைத்துள்ளது.
கும்ப மேளா இந்த ஆண்டு இன்னொரு வகையில் சிறப்பு பெறுகிறது. சனாதனத்திற்கு என தனி வாரியம் அமைக்கும் குரல் வலுப்பெறுகிறது
வரும் ஜனவரி 26ம் தேதி திரிவேணி சங்கமத்தில் நான்கு சங்கராச்சார்யார்கள் மற்றும் 13 அகாரா அமைப்பின் தலைவர்கள் கூடி, சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி சனாதன வாரியம் அமைக்குமாறு வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சனாதன தர்மத்தைக் காக்கவும், ஹிந்து கோயில்கள், நிலங்களை மீட்கவும் சனாதன வாரியம் அவசியமாகிறது.
முஸ்லிம்களுக்கு வக்பு வாரியம் இருப்பதைப் போல், ஹிந்துக்களுக்கு சனாதன வாரியம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.
சனாதன தர்ம கொடி ஏற்றம்
மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். திரிவேணி சங்கமம் நோக்கி ஊர்வலமாக செல்லும சாதுக்களை பொதுமக்கள் உற்சாகமாக மலர்கள் தூவி வரவேற்றனர்
நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட நிலத்தில், திங்களன்று, இரண்டு சன்னியாசி அகாராக்கள், பாரம்பரிய சடங்குகளைப் பின்பற்றி தங்கள் தர்மக் கொடிகளை நிறுவின. நாகா சன்னியாசிகளின் தலைமையில் 41 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
******
2024-இல் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை !!
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் 2024 ஆம் ஆண்டில், 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்; உண்டியலில் ரூ.1365 கோடி காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024 -ஆம் ஆண்டில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய மொத்த காணிக்கை ஆயிரத்து 365 கோடி ரூபாய் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
சென்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை திருப்பதி பாலாஜியை 2 கோடியே 55 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளதாகவும், 99 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறுகிறது .
****

டெல்லியில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் – கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி மீண்டும் அமைத்தால் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜரிவால் அறிவித்தார்.
3-வது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 100, முதியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை, ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு அர்ச்சகர் கோஷ்டி ஆர்ப்பாட்டமும் செய்தனர். டில்லி நகர கன்னாட் பிளேஸ் அனுமார் கோவிலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த அர்ச்சகர்கள், ஒரு கேள்வியை எழுப்பினர். பத்தாண்டுக்காலமாக டில்லியை ஆண்ட ஆம் ஆத்மீ கட்சி அர்ச்சகர்களைக் கவனிக்காமல் இருந்துவிட்டு தேர்தல் வந்தவுடன் அறிவிப்பு வெளியிடுவது ஏனோ என்று குரல் எழுப்பினர்.
******
தெலுங்கானா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்
தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி அரசு, கோவில் நிலங்களில் சூரிய ஒளி மின்சாரப் பண்ணைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது இதைக் கைவிட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது
இது கோவில் நிலங்களை அரசு எடுத்துக்கொள்ளும் மறைமுக வேலை என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவித்தது
கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு துஷ்பிரயோகம் செய்கிறது; கோவில் நிலங்கள் இறைவனுக்கே சொந்தம்; அதைப் பராமரிக்கும் பொறுப்புதான் அரசு கையில் இருக்கிறது; மனம்போனபோக்கில் பயன்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்று பரிஷத் கூறுகிறது .
****
அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து 8 வடை மாலை
நாமக்கல் மாநகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சிரமமின்றி ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏதுவாக கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி என 3 வழிகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டன.
****
2569 ஏக்கரில் சபரிமலை கிரீன்பீல்டு விமான நிலையம்!
சபரிமலை விமான நிலையம் 2569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பட்சத்தில் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமான நிலையம் அவசியம் என்பது அங்குள்ளோரின் நீண்ட நாளைய கோரிக்கையாகும்.
இதையடுத்து, அங்கு சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலையம் 2,569 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக, மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து 1039.876 ஏக்கர் நிலங்கள் விமான நிலைய கட்டுமான பணிக்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், விமான நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து கோட்டயம் மாவட்ட நிர்வாகம் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
விமான நிலையம் அமைக்க மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து மட்டும் 1039.876 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும். அவற்றில் 3.3 லட்சம் ரப்பர் மரங்கள், 2492 தேக்கு, 2247 காட்டு பலாமரங்கள், 828 மகோகனி, 1131 பலாமரங்கள், 184 மாமரங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும்.
சில வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்பட வேண்டியிருக்கும். அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
விமான நிலைய கட்டுமான பணிகள் மூலமாக 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். அவர்களில் 238 குடும்பங்கள் செருவேலி எஸ்டேட் பகுதியில் பணியாற்றும் குடும்பங்களாகும். விமான நிலையம் அமைக்கப்பட்டால் உள்ளூர் வணிகம் மேம்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மகர விளக்கு பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 30ம் தேதி 4 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 26ம் தேதி நிறைவுபெற்றது. மண்டல பூஜை காலத்தில் சுமார் 32 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். வருமானம் ரூ.297 கோடி கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 4 லட்சம் பக்தர்கள் அதிகம் வந்துள்ளனர்.
மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ம் தேதி நடைபெறும்., ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும் ,
******
5 கிலோ தங்க ஆபரணங்களுடன் ஆண்டவனை தரிசினம் செய்த தெலங்கானா பக்தர்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ தங்க ஆபரணங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
தெலங்கானாவை சேர்ந்த ஆபரண பிரியரான விஜயகுமார் என்பவர் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து சென்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.
தங்க ஆபரணங்களை அணிவதில் ஏழுமலையானுடன் போட்டி போடுவது போல் நகைகளை அணிந்து கோயிலுக்கு சென்ற விஜயகுமாரை சக பக்தர்கள் ஆச்சரித்துடன் பார்த்தனர்..
****
மாதா அமிர்தானந்தமயி அம்மாவை வணங்குகிறேன் ; அண்ணாமலை
நம் அனைவரின் கருணை மற்றும் அன்பின் மூலம் நம் உலகத்தை சிறந்த இடமாக மாற்றிய அமிர்தானந்தமயி அம்மாவை நான் மரியாதையுடன் வணங்குவதாக தமிழக பாரதீய ஜனதாக் கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :‘”சில நேரங்களில் நமக்குத் தேவைப்படுவது ஒரு அணைப்பு மட்டுமே’
நம் அனைவரின் கருணை மற்றும் அன்பின் மூலம் நம் உலகத்தை சிறந்த இடமாக மாற்றியதற்காக மாதா அமிர்தானந்தமயி அம்மாவை நான் மரியாதையுடன் வணங்குகிறேன்!
அனைவருக்கும் மகிழ்ச்சியான, வளமான மற்றும் நிறைவான 2025 ஐ ஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

****
ஆங்கிலப்புத்தாண்டில் பரவசம்; ஒரே நாளில் அயோத்தி ராமர் கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சூரிய உதயத்திற்கு முன்பு நள்ளிரவில் ராமரை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில், அயோத்தியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று கடவுளை தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையை கணக்கிட்டு பார்த்தால் 3 லட்சத்தை தாண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் நள்ளிரவு முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரையில் மட்டும் 3.50 லட்சம் பக்தர்கள் சுவாமி செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அலைமோதி வந்ததால் நடை அடைக்கப்படாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Markazzi Month Street Bhajan in Palani Kalayamuthur
பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம், ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக மலைக் கோயிலை வந்தடைந்தனர்.அதில் பலரும் பால் குடம், மயில் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
****
ஆருத்ரா தரிசன விழா – ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் வருடந்தோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா உத்தரவிட்டுள்ளார்.
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
***
கோவிலில் சட்டையை கழற்றும் விவகாரம்: மீண்டும் சர்ச்சை
கேரளாவில், பெரும்பாலான கோவில்களுக்கு செல்லும் ஆண் பக்தர்கள், மேல் சட்டையை கழற்றும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அங்குள்ள நாராயண குருவின் சிவகிரி மடத்தில், சமீபத்தில் சிவகிரி யாத்திரை மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்ற சுவாமி சச்சிதானந்தா, ‘கோவில்களுக்கு செல்லும் ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணியக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. அந்த முறை கைவிடப்பட்ட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இது, கேரள கோவில் நிர்வாகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலர் வெல்லப்பள்ளி நடேசன் கூறியதாவது:
ஹிந்துக்களிடையே உள்ள பல பிரிவினர், பல்வேறு பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். கோவில்களில் ஆண்கள் மேல் சட்டையை கழற்றுவது போன்ற பிரச்னைகள் அவர்களிடையே பிரிவினையை உருவாக்கக் கூடாது. சுவாமி சச்சிதானந்தா கூறியதில் தவறேதும் இல்லை. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் கீழ் செயல்படும் கோவில்களில், ஆண்கள் மேல்சட்டை அணிய அனுமதிக்கப்படுகிறது.
சில கோவில்களில் வெவ்வெறு நடைமுறைகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஒரே நாளில் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சுவாமி சச்சிதானந்தாவின் கருத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்தற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், “பல்வேறு கோவில்களில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களில், சரியான நேரத்தில் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
“அனைத்து பிரிவுகளுடனும் விவாதிக்காமல், இந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வர முடியாது,” என்றார்.
அரசு தலையிடக்கூடாது!
நாயர் சமூக சங்க பொதுச்செயலர் சுகுமாரன் நாயர் கூறியதாவது: அனைத்து ஹிந்துக்களும், அந்தந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள நடைமுறைகளை சீர்குலைக்காமல் கோவில்களுக்குள் நுழைய சுதந்திரம் உள்ளது. எனவே, கோவில்களில் உள்ள பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறையில் அரசு தலையிடக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கேரள யோகக்ஷேம சபா தலைவர் அக்கீரமன் காளிதாசன் பட்டாதிரிபாட்டும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
******
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு
ஜனவரி 12 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,
ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
நேயர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே 2025–ஆம் ஆண்டு புத்தாண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வணக்கம்.
—-subham—-
tags- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 5-1-2025 .