Bengaluru Nagarajan is speaking on Panini
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,054
Date uploaded in Sydney, Australia – –6 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
29-12-2024 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
மஹரிஷி பாணினி! – 2
மீண்டும் பாடலிபுத்ரத்திற்கு தான் இயற்றிய இலக்கண நூலுடன் பாணினி வந்தார். அப்போது வர்ஸாவிடம் பயின்ற இன்னொரு சீடரான வரருசி இந்திரனின் அருளால் இயற்றிய இன்னொரு இலக்கண நூலைக் கொண்டிருந்தார்.
பாணினி வரருசியை வாதுக்கு அழைத்தார். எட்டு நாட்கள் நீண்ட விவாதம் நடந்தது. எட்டாம் நாளன்று வரருசி பாணினியைத் தோற்க அடித்தார். அப்போது வானிலிருந்து ஒரு பெரும் ரீங்கார ஒலி கேட்டது.
வரருசியின் இலக்கணப் புத்தகம் அழிக்கப்பட்டது. பின்னர் பாணினி தனது சகாக்கள் அனைவரையும் தோற்கடித்தார் பெரும் இலக்கண வித்வானாகத் திகழ்ந்தார்.
பாணினி சிவனை நோக்கித் தவம் செய்த போது சிவன் அவர் முன்னே தோன்றி நடனமாடலானார். தனது உடுக்கையை சிவபிரான் 14 முறை அடித்தார். அதிலிருந்து அய்ம் ருக் இன் அவ் ஹயவரட் உள்ளிட்ட 14 ஒலிகள் எழுந்தன.
பாணினி இந்த பதினான்கையும் 14 சூத்ரங்களாக அமைத்தார். இவை ப்ரத்யாஹார சூத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. இப்போது இவை மாஹேஸ்வர சூத்ரங்கள் என்று அழைக்கின்றனர்.
சம்ஸ்கிருத மொழிக்கு உள்ள சிறப்புகளில் ஒன்று கடபயாதி அமைப்பு முறையாகும்.
அது என்ன கடபயாதி முறை?
சம்ஸ்கிருதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் உண்டு. தாங்கள் சொல்ல வந்ததை இந்த கடபயாதி அமைப்பு முறை மூலமாக ஏராளமான கவிஞர்களும் அறிஞர்களும் கூறி விடுவார்கள்.
நாராயணீயம் இயற்றிய நாராயண பட்டத்ரி தான் எந்த ஆண்டு இந்த நூல் இயற்றி முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அமைப்பைப்
பயன்படுத்தியே சொல்லி இருக்கிறார்.
நாராயணீயம், ஆயுர் ஆரோக்ய சௌக்யம் என்ற வார்த்தைகளுடன் முடிகிறது. இந்த வார்த்தைகளுக்கான எண் கடபயாதி சங்க்யா முறைப்படி 17,12,210 ஆகும். கலியுகத்தின் ஆரம்பத்திலிருந்து எண்ணிப் பார்த்தால் 1586, டிசம்பர் 8 என்று வருகிறது. அன்று தான் நாராயணீயம் எழுதி முடிக்கப்பட்ட நாளாகும்.
மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் முதல் ஸ்லோகம், ‘நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம் தேவீம் சரஸ்வதீ சைவ ததோ ஜயம் உதீரியேத்’ என்று ஆரம்பிக்கிறது. இதிலிருந்து மஹாபாரதத்தின் பெயர் ஜய என்று தெரிகிறது,
ஜ என்ற எழுத்திற்கு உரிய எண் 8. ய என்ற எழுத்திற்கு உரிய எண் 1. ஆக 81 என்ற இதை திருப்பிப் போட்டால் வருவது 18.
மஹாபாரதத்தில் 18 பர்வங்கள் உள்ளது. கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளது. மஹாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது. ஆக ஜய என்ற இந்தப் பெயர் பொருள் பொதிந்த ஒன்றாக இருக்கிறது. கடபயாதி சங்க்யா இதை சூசகமாக விளக்குகிறது.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இறுதியில் சொல்லப்படும் முக்கியமான ஸ்லோகம் ஒன்று உண்டு.
ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
ராம ராம ராம என்று மூன்று முறை உச்சரித்தால் அது ஆயிரம் முறை உச்சரித்ததற்கு சமமாகும் என்பது இதன் பொருள்.
அது எப்படி 1000 முறை உச்சரித்தது போல் ஆகும்?
இந்தக் கேள்விக்கு விடை கடபயாதி அமைப்பில் இருக்கிறது.
கடபயாதி அமைப்பின் படி ரா என்றால் 2 ம என்றால் 5.
ஆக ராம என்றால் 2 x 5 = 10. ராம என்று மூன்று முறை சொன்னால் வரும் எண் 1000. அதாவது 10 x 10 x 10 = 1000
இது போல இறைவனின் நாமத்திற்கு கடபயாதி முறை மூலமாக வரும் எண்கள் அற்புதமான உண்மைகளைச் சொல்லி என்ன பயன் கிடைக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
மந்திரங்களுக்குச் சக்தி உண்டு என்பதை ஏராளமான விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
மந்திரங்களில் உச்சரிப்பு மிக முக்கியம்.
யாக்ஞ்யவல்கிய ஸ்மிருதி, ஒரு புலியானது எப்படி தன் குட்டியை வாயில் கவ்வி எடுத்துச் செல்லுமோ அதே போல ஒருவர் ஒரு சொல்லை உச்சரிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இதை பண்டைய காலத்திலிருந்து இன்று வரை மனனம் செய்து ஓதி வரும் வேத பண்டிதர்களை நாம் பார்க்கலாம். மூவாயிரம் வருடத்திற்கும் முந்தைய வேத மந்திரங்களை,- 40000 முதல் ஒரு லட்சம் வார்த்தைகள் உள்ளதை- அவர்கள் மனப்பாடம் செய்து உச்சரிப்புத் தவறாமல் ஓதுவது அதிசயமான ஒரு விஷயம்.
சம்ஸ்கிருதத்தின் பயனை ஆராயப் புகுந்தார் ஜேம்ஸ் ஹார்ட்ஸெல் (JAMES HARTZELL) என்ற ஒரு விஞ்ஞானி.
இவர் ஒரு நியூரோ சயின்டிஸ்ட்.
டெல்லிக்கு வந்த இவர் டெல்லி பகுதியில் இருந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து வேத பண்டிதர்களை ஆய்வுக்காக அழைத்தார். மாக்னெடிக் ரெஸொனென்ஸ் இமேஜிங் எனப்படும் எம் ஆர் ஐ சாதனைத்தால் வேத பண்டிதர்களின் மூளையைப் படம் பிடித்தார்.
வேதம் ஓதும் வேத பண்டிதர்களின் மூளை அதிசயிக்கத்தக்க விதமாக பல்வேறு மூளைப் பகுதிகள் பெரிதாக இருப்பதைக் காண்பித்தன. மூளையில் காணப்படும் க்ரே மேட்டர் எனப்படும் சாம்பல் நிறப் பொருளானது 10 சதவிகிதம் மூளையின் இரு செமிப்ரல் ஹெமிஸ்பியர்களிலும் அதிகமாக இருப்பதை இவர் கண்டறிந்தார். இவை உச்சரிக்கின்ற திறனைக் கூட்டுவதோடு ஒலியை மிகச் சரியாக திறம்பட வழங்க உதவுகின்றன.
மறதி ஏற்படாது என்பன போன்ற இன்னும் பல பயன்களையும் அவர் பட்டியலிடுகிறார். இதற்கு அவர் சான்ஸ்க்ரிட் எஃபெக்ட் (Sanskirt Effect) என்று பெயரிட்டார்.
கம்ப்யூட்டர் புரொகிராமிங்கிற்கு பொருத்தமான மொழி சம்ஸ்கிருதம் என்று நாஸா கருத்துத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத் தகுந்தது.
ஆக இப்படி சம்ஸ்கிருதத்திற்கு ஒரு அருமையான இலக்கணத்தை வகுத்து அதை உலகின் ஒப்பற்ற மொழியாகத் திகழ வைத்ததில் பாணினியின் பங்கு மகத்தானது.
சூரிய சந்திரர் உள்ள வரை சம்ஸ்கிருதம் புகழுடன் நீடித்து நிலைத்து நிற்கும். சம்ஸ்கிருதம் உலகில் உள்ளவரை பாணினியின் புகழும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை!
வாழ்க பாணினி வளர்க சம்ஸ்கிருதம்!
***