Post No. 14,057
Date uploaded in Sydney, Australia – 6 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் இயற்றிய திருவருட்பாவில் ஒரு துதி தெய்வமணி மாலை. அதிலுள்ள பாடல்கள் அனைத்திலும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன. சென்னை நகர கந்த கோட்டத்தில் கோவில் கொண்டுள்ள சண்முகனைப் பற்றிய 31 பாடல்கள் அவை .
முதலில் கவனிக்கவேண்டிய விஷயம் சென்னை நகருக்குத் தரப்படும் சிறப்பு அடைமொழிகள் ஆகும் .
சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே. என்று 31 பாடல்களும் முடிகின்றன ; ஆயினும் தருமமிகு , திரு ஓங்கு, நன்னரிய, தலைவர் புகழ், தரையில் உயர், தார் கொண்ட , தன் புகழ் செய், தானமிகு, தப்பற்ற, சந்தமிகு, தானம் நீடு, தாய்கொண்ட, தரமேவு, முதலிய சிறப்பு அடைமொழிகளால் சென்னையை உயர்த்திப் பேசுகிறார்
அவர் காலத்தில் இருந்த சென்னையைவிட இப்பொழுது சென்னை எவ்வளவோ மாறிவிட்டது; ஆனாலும் அவர் தீர்க்கதரிசி போல, சொன்ன சில விஷயங்கள் இன்றும் உண்மையாகி வருகிறது. தலைவர் புகழ், தானமிகு , தரமேவு என்பன குறிப்பிடத்தக்கவை; சென்னையில் சங்கீதமும் நாட்டியமும் திரைப்படத் துறையும் கொடி கட்டிப் பறக்கின்றன. சென்னை நகரிலுள்ளது போல இத்தனை சபாக்கள் வேறு எங்கும் இல்லை. எங்கும் கோவில்களும் திருவிழாக்களும் நடக்கின்றன. அறுபத்து மூவர் பவனி போன்ற சிறப்பான விழாக்களும் நடக்கின்றன ; நல்லோர்கள் கொடுத்த நன்கொடையில் பச்சையப்பா கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களும் சென்னைப் பல்கலைக் கழகமும் நடக்கின்றன ; இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
*****
இனி சில உவமைகளைக் காண்போம்
“நான்கொண்ட விரதம்
நின் அடிஅலால்
பிறர்தம்மை நாடாமை ஆகும்
இந்த நல்விரத மாங்கனியை
இன்மைஎனும் ஒருதுட்ட
நாய்வந்து கவ்விஅந்தோ
தான் கொண்டு போவதினி
என்செய்வேன் என்செய்வேன்
தளராமை என்னும்
ஒருகைத் தடிகொண் டடிக்கவோ
வலியிலேன் சிறியனேன்
தன்முகம் பார்த்தருளுவாய் — என்று பாடி தெய்வ மணிமாலையை முடிக்கிறார்
கந்தன் திருவடிகளைத்தவிர பிறரை விரும்பிச் செல்லாமல் இருப்பதே என் விரதம்; இந்த விரத மாங்கனியை கெட்ட நாய் கவ்விக்கொண்டு போகிறதே என்று அலறுகிறார். நாய் என்பது நாய் போன்றலையும் மனம். அதை மன உறுதி என்னும் தடியைக் கொண்டு அடிக்க முடியவில்லை; முருகப்பெருமானே நீதான் அருளவேண்டும் என்கிறார்.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உருகிய வள்ளலார், அவரைப் போலவே நாய் என்ற சொல்லை, உவமையைப் பல இடங்களில் பயன்படுத்துவதும் குறிப்பிடத் தக்கது.
****
25. பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
பாழ்பட்ட மனையில்நெடுநாள்
பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
பட்டபா டாகும்அன்றிப்…… என்ற பாடலிலும் நாய் வருகிறது
பாயும் புலி போன்ற கொடுமையும் நாய் போன்ற அற்ப குணமும் உடைய கொடியவர்கள் வாழும் பாழான வீட்டில்…….. என்பது பொருள் .
இகலோக வாழ்வினை புலிகள் வாழும் காடு , சுறாமீன்கள் வசிக்கும் கடல் என்று ஆதிசங்கரரும் வருணிக்கிறார்.
****
அடுத்த பாடலிலும் உவமை நயம் உளது.
26. சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
தேவரைச் சிந்தைசெய்வோர்
செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
சிறுகருங் காக்கைநிகர்வார்
நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
நற்புகழ் வழுத்தாதபேர்
நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
நவையுடைப் பேயர் ஆவார்
நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
நின்றுமற் றேவல்புரிவோர்
நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
நெடியவெறு வீணராவார்
தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.–தெய்வமணிமாலை பாடல் 27
இதில் நிறைய உவமைகளைக் கையாளுகிறார்
கந்தனை விட்டுவிட்டு சிறு தெய்வங்களை வழிபடுவோர் பசும்பாலை விட்டு நாய்ப்பாலுக்கு அலைவோர் போன்றவர்கள் ; கசப்பான வேப்பம்பழத்தை விரும்பிச் சாப்பிடும் காகம் போன்றவர்கள் ஆவர் நெல்லுக்கு நீர் பாய்ச்சாமல் புல்லுக்கு நீர் இறைந்தவராவார்.
இவ்வாறு மூன்று உவமைகளை ஒரே பாட்டில் கொணர்கிறார்.
நாய்ப்பால் பற்றிய நீதி வெண்பாப்படலையும் நினைவுபடுத்தும் வரிகள் இவை .
பாவிதனந் தண்டிப்போர் பாலாகும் அல்லதருள்
மேவுசிவன் அன்பர்பால் மேவாதே – ஓவியமே!
நாயின்பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே
தூயவருக் காகுமோ சொல். 63– நீதி வெண்பா
பொருள்
நாயினுடைய பால் எல்லாம் நாய்க்குத்தான்; தூயவர்களுக்கு அல்ல .அது போல தீயவர்களின் செல்வம் எல்லாம் அடித்து வாங்கும் தீயவர்களுக்கே போய்ச சேரும்; தூயோருக்குக் கிடைக்காது..
****
இஞ்சி தின்ன குரங்கு போல என்பது தமிழ் ப்பழமொழி ; கள் குடித்த குரங்கு என்ற உவமையை ராமலிங்கர் பயன்படுத்துவது அதைவிட அழகிய சித்திரத்தினை மனக்கண் முன்னே கொண்டுவருகிறது :
23. வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது
பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ
மனம் என்னும் குரங்கு என்பதும் ஆன்றோர் வாக்கே; அத்தோடு நிறுத்தாமல் குயவன் சக்கரமோ பந்தோ, காற்றாடியோ என்றும் உவமிக்கிறார்.
****
இறைவனை வணங்காத உடலுறுப்புகளை சாடுகிறார் வள்ளலார்;
எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
இகழ்விற கெடுக்கும்தலை
கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
கலநீர் சொரிந்தஅழுகண்
கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
கைத்திழவு கேட்கும்செவி
பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
பகீர்என நடுங்கும்நெஞ்சம்
பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
பலிஏற்க நீள்கொடுங்கை
கந்தனை வணங்காத– வாழ்த்தாத — வாய் கூழ் கூடக் கிடைக்காமல் தவிக்கும் வாய்; கண்கள் அழுகின்ற கண்கள்; காதுகள் இழவுச் செய்திகளையே கேட்கும்; கைகள் பிச்சை எடுக்கும் கைகள் என்கிறார்.நெஞ்சமோ திடீர் திடீரென்று நடுங்கும் நெஞ்சம என்கிறார்.
உடம்பினை ஒன்பது வாசல் வீடு என்று வருணிப்பதைப் பகவத் கீதை முதல் பல நூல்களில் காண்கிறோம். அதை வருணிக்கும் வள்ளலார், வள்ளுவர் போல பறவைக்கூடு என்றும் பாடுகிறார்
17. உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
கைவிடேன் என்செய்குவேன்
………
ஒப்பிடுக:
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு— குறள் 338
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
தொடரும்……………………………………
—-Subham—
Tags- வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 3, தெய்வமணி மாலை,உவமை நயம்