வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-4;  மேலும்  பல உவமைகள் (Post No.14,062)

Written by London Swaminathan

Post No. 14,062

Date uploaded in Sydney, Australia – 7 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தெய்வமணி மாலையில் உவமை நயம் தொடர்ச்சி

தெய்வமணி மாலை பாடல் எண் 3

துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்

துணைஎனும் பிணையல்அளகம்

சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்

சுழிஎன்ன மொழிசெய்உந்தி

வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என

மங்கையர்தம் அங்கம்உற்றே…………

இந்தப் பாடலில் பெண்கள் வருணனை நாடு முழுதும் காணப்படும் வருணனையைப் போல உள்ளது

பெண்களின் இடுப்பு = துடி= உடுக்கை;

நடை= அன்னம், பெண் யானையின் நடை;

முகில், அளகம் = மேகம் போல கருத்த கூந்தல்;

சூது முலை/ நகில் = சூதாடு கருவி, தாமரை மொட்டு

சுழி உந்தி= நீர்ச்சுழல் போன்ற கொப்பூழ் ;

வடி விழி = வேல் விழியாள்;

மதிவதனம் = சந்திர வதனா/முகம்  

****

ஏழு பகைவர்கள்

காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்

கனலோப முழுமூடனும்

கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்

ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்

றியம்புபா தகனுமாம்இவ்

வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்

காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மார்ச்சர்யம் இவை ஆறும் உட்பகைவர்கள்; இத்துடன் கொலை சேர்ந்து ஏழு பகைவர்கள் ; மற்றும் அவைகளுடன் தொடரும் பொய் போன்ற பிற குணங்கள் .

ஆறு உட்பகையாகிய தீய குணங்களைப் பகைவன், கொடியன் மூடன், வீணன், அகங்காரி /ஆங்காரி, விழலன் என்று உருவகித்துக் கூறுகிறார் வள்ளலார் .

****

எனக்கு வேண்டுபவை

7.நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு

நிகழ்சாந்த மாம்புதல்வனும்

நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்

நீக்கும்அறி வாம்துணைவனும்

மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு

மனம்என்னும் நல்ஏவலும்

வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று

வாழ்கின்ற வாழ்வருளுவாய்

முந்தைய பாடலில் ஏழு பகைவர்களை வேண்டாம் என்றார்; இனி வரும் பாடல்களில் என்ன வேண்டும் என்று ராமலிங்கர் பட்டியலிடுகிறார். இந்தப் பாடலில் அவைகளை உருவகப் படுத்துகிறார்.

உயர்குலப்பெண் மனைவி= நிராசை; ஆசையே இல்லாத நிலை ;

மைந்தன் = சாந்தம்; அமைதி ;

உதார குணம் = நற்பொருள்; செல்வம்;

மருள் நீக்கும் அறிவு = துணைவன் ;

பகைமையைப்போக்கும் நிரங்காரம்= நண்பன் ;

மாசற்ற மனம் = வேலைக்காரன்;

சகலாவத்தை, கேவலாவத்தை இல்லாத வசிப்பிடம்= வீடு;

இவைகளை அருள்வாயாக. 

****

கிழட்டுக் காகம்

கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்

கதறுவார் கள்ளுண்டதீக்

கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு

கடும்பொய்இரு காதம்நாற

வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ

மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு

மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு

வழக்குநல் வழக்கெனினும்நான்

உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ

ரோடுறவு பெறஅருளுவாய்

சாகின்ற கிழட்டுக் காகம் கத்துதல் – வீண் கதை பேசுதல்;

குடிகாரன் உளறல், வாய் நாற்றம் = பொய்கள், குதர்க்கவாதம்;

மணங் கமழ்  பொன்வாய் உரை = சிவனடியார் பேச்சு.

****

13. வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ

வானைஒரு மான்தாவுமோ

வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய

மலையைஓர் ஈச்சிறகினால்

துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு

துரும்பினால் துண்டமாமோ

சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை

தோயுமோ இல்லைஅதுபோல்…………………………..

நெருப்பிடத்தில் புழு அணுகாது;

நீண்ட இடைவெளியை மான் கூடத்  தாண்ட முடியாது ;

புலியை எலி வெல்ல முடியாது ;

ஈயின் சிறகடித்து மலையை அசைக்க முடியாது ;

வஜ்ஜிரம் போன்ற தூணைத் துரும்பு ஒன்றும் செய்ய இயலாது;

கதிரவனைக் காரிருள் மங்க செய்யாது;

காற்றினை மழைத்துளிகள் நனைக்க முடியாது

அதேபோல அடியார்களுக்குத் துன்பங்கள் வர இயலாது ; தீய குணங்களும் அவர்களை அணுகமுடியாது .

****

14. காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்

காண்உறு கயிற்றில் அரவும்

கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்

கதித்தபித் தளையின்இடையும்

மானலில் கண்டுள மயங்கல்போல் ………

கானல் நீர் = நீரல்ல;

இருட்டில் தெரியும் கட்டை= திருடன் அல்ல ;

இருட்டில் தெரியும் கயிறு =  பாம்பு அல்ல;

சிப்பியின் பளபளப்பு = வெள்ளி அல்ல;

பளபளப்பு உள்ள பித்தளை= தங்கம் அல்ல;

இந்த உவமைகளில் சில பதினோராம் பாடலிலும் வந்துள்ளன.

****

15. கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்

கன்மவுட லில்பருவம்நேர்

கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்

கடல்நீர்கொ லோகபடமோ

உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட

ஒருவிலோ நீர்க்குமிழியோ

உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துருத்தியோ……..

மாறும் பருவ காலம் = இளமைப் பருவம் ;

இளமைப்பருவம் நீடிக்காது ; அது = கலையும்  வேடம்; கடல் அலை; வெளிப்படும் வஞ்சனை; மாலை நேர மஞ்சள் வெய்யில்;  வானவில் ; நீர்க்குமிழி; காற்று ஊதும் துருத்தி .

மேக்கூறிய அனைத்தும் நிலைக்காமல் மாறிக்கொண்டே இருக்கும் என்று வள்ளலார் சொல்கிறார்

இங்கே நீதிநெறி விளக்கப்   பாடலையும் ஒப்பிட்டு ரசிக்கலாம்

1. கடவுள் வாழ்த்து

நீரில் குமிழி இளமை நிறை செல்வம்

நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்

எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே

வழுத்தாதது எம்பிரான் மன்று

(பொருள்.) இளமை  நீரில் குமிழி – இளமைப்பருவம் நீரிலுண்டாகும்குமிழியாகும்.  நிறை செல்வம்  நீரில் சுருட்டும் நெடுதிரைகள் – நிறைந்த செல்வம்நீரிலே காற்றினாற் சுருட்டப்படும் உயர்ந்த அலைகளாகும், யாக்கை  நீரில் எழுத்துஆகும் – உடம்பு நீரிலெழுதிய எழுத்தாகும்; (இங்ஙனமிருக்க), நமரங்காள் – நம்மவர்களே!’எம்பிரான் மன்று  வழுத்தாதது என்னே – நம்கடவுளுடைய மன்றினை (அம்பலத்தை) வாழ்த்தி வணங்காதது ஏனோ?

(கருத்து.) இளமையும் செல்வமும், யாக்கையும் நிலையாமையால், அவை உள்ள பொழுதே இறைவனை வழிபட்டுக் கொள்கவென்பது.  

அடுத்த கட்டுரையில் வள்ளலாரின் வாய்மொழி வழியாகக் கந்தபுராணக் கதைகளைக் காண்போம்

–SUBHAM—

TAGS -வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 4; மேலும்

 உவமைகள் ,தெய்வமணி மாலை, உவமை நயம்,  தொடர்ச்சி

Leave a comment

Leave a comment