புத்திகூர்மை அதிகரிக்க சில புதிர்கள்! (Post No.14,064)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,064

Date uploaded in Sydney, Australia – –8 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-12-24 KALKIONLINE-ல் வெளியாகியுள்ள கட்டுரை

மூளைக்கு வேலை

புத்திகூர்மை அதிகரிக்க சில புதிர்கள்!

ச.நாகராஜன்

புத்திகூர்மையை அதிகரிக்கச் செய்யவும் நிறுவனங்களில் நேரடி பேட்டியில் கேட்கப்படும் புதிர் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் ஏராளமான புதிர்கள் உள்ளன.

இவற்றை புதிருக்கான புத்தகங்களிலும் படிக்கலாம்; இணைய தளத்திலும் பார்க்கலாம்.

மாதிரிக்காக மூன்று புதிர்கள் இதோ!

1

கேள்வி:

உங்களிடம் 3 லிட்டர் மற்றும் 5 லிட்டர் கேன்கள் உள்ளன. நீரைப் பிடிக்க பக்கத்தில் ஒரு குழாயும் உள்ளது. 4 லிட்டர் தண்ணீர் வேண்டும். இந்த இரண்டு கேன்களையும் மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். வேண்டுமானால் கேன்களில் உள்ள நீரை கீழேயும் கொட்டிக் கொள்ளலாம். எப்படி 4 லிட்டர் நீரை நீங்கள் தருவீர்கள்?

விடை:

சற்று யோசித்தால் நமக்கு நல்ல வழி புலப்படும்.

முதல் வழி இதோ:

முதலில் 5 லிட்டர் கேனை குழாயிலிருந்து கொட்டும் நீரால் நிரப்புங்கள்

3 லிட்டர் கேனில் இந்த 5 லிட்டர் கேன் நீரைக் கொட்டுங்கள். இப்போது 5 லிட்டர் கேனில் இரண்டு லிட்டர் நீர் மட்டுமே இருக்கும்.

அடுத்து 3 லிட்டர் கேனில் உள்ள நீரைக் கீழே கொட்டுங்கள்.

5 லிட்டர் கேனில் உள்ள 2 லிட்டர் நீரை 3 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.

அடுத்து 5 லிட்டர் கேனில் நீரை நிரப்புங்கள்

3 லிட்டர் கேனில் மீதி இருக்கும் 1 லிட்டர் அளவுக்கு நீரை நிரப்புங்கள்/

இப்போது 5 லிட்டர் கேனில் இருப்பது நான்கு லிட்டர் நீர் தான்!

நீங்கள் கேட்ட 4 லிட்டர் நீர் இதோ என்று சொல்லலாம்.

இன்னொரு வழியும் இருக்கிறது.

குழாயிலிருந்து வரும் நீரால் 3 லிட்டர் கேனை நிரப்புங்கள்.

இந்த நீரை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.

மீண்டும் 3 லிட்டர் கேனை நிரப்புங்கள்

5 லிட்டர் கேனில் இந்த நீரைக் கொட்டுங்கள். இப்போது ஒரு லிட்டர் நீரே 3 லிட்டர் கேனில் இருக்கும்.

5 லிட்டர் கேனில் உள்ள நீரைக் கொட்டி விடுங்கள்.

3 லிட்டர் கேனில் உள்ள ஒரு லிட்டர் நீரை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.

இப்போது 3 லிட்டர் கேனில் நீரை நிரப்புங்கள்.

இதை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.

இப்போது 5 லிட்டர் கேனில் இருப்பது 4 லிட்டர் நீர் தான்!

நீங்கள் கேட்ட 4 லிட்டர் நீர் இதோ என்று சொல்லலாம்.

2

ஒரு ஜப்பானிய கப்பல் பசிபிக் கடலில் சென்று கொண்டிருக்கிறது. காப்டன் குளிப்பதற்குச் செல்ல நினைத்து தனது வைர செயினையும் தங்க கடிகாரத்தையும் மேஜையின் மீது வைத்து விட்டு குளியலறைக்குச் செல்கிறார். பத்து நிமிடங்கள் குளியலை முடித்து விட்டு மீண்டும் வந்து மேஜையைப் பார்க்கும் போது செயினையும் கடிகாரத்தையும் காணோம்.

அதை யார் திருடி இருப்பார்கள்?

தனது கப்பலில் உள்ள குழுவினரை அழைத்த அவர் கடந்த 10 நிமிடங்களில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று கேட்கிறார்.

குழுவில் இருந்த நான்கு பேரும் பதிலைச் சொல்கிறார்கள் இப்படி.

முதலில் சமையல்காரர்: “நான்  குளிர் பதன அறைக்குச் சென்று சமைப்பதற்காக எந்த இறைச்சியை எடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரண்டாவதாக ஒரு வேலையாள் : நான் கப்பலின் மேல் தளம் சென்று தலைகீழாக இருந்த கொடியைச் சரி செய்து கொண்டிருந்தேன்.

மூன்றாவதாக எஞ்ஜினியர் : நான் ஜெனரேட்டர் ரூமில் ஜெனரேட்டரை சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான்காவதாக சுத்தம் செய்யும் வேலையாள் : இரவு ஷிப்டை முடித்து விட்டு நான் தூங்கிக் கொண்டிருந்தேன்.

காப்டன் நன்கு யோசித்தார். வேலையாள் தான் பொய் சொல்கிறான், அவன் தான் செயினையும் கடிகாரத்தையும் எடுத்தான் என்பதை அவர் கண்டு பிடித்தார். எப்படி?

ஒரு வட்டத்தை மட்டுமே கொண்டிருக்கும் ஜப்பானிய கொடியில் மேல், கீழ் என்பது கிடையாது. எந்தப் பக்கம் பார்த்தாலும் வட்டம் ஒன்று தான். ஆகவே கொடி தலைகிழாக இருக்கிறது என்று அவன் சொல்வது நிச்சயம் பொய் தான்!\\

அவனை அதட்டி விசாரிக்க அவன் தான் எடுத்ததை ஒப்புக் கொண்டு செயினையும் கடிகாரத்தையும் திருப்பித் தந்தான்.

ஜப்பானிய கொடியின் படம் இதோ:

3

கேள்வி:

தவறாக லேபிள்கள் ஒட்டப்பட்ட 3 ஜாடிகள் உள்ளன. ஜாடிகள், உள்ளே இருப்பதைப் பார்க்கக் கூடியபடி உள்ள அமைப்பைக் கொண்டவை அல்ல. ஒன்றில் ஆப்பிளும் இன்னொன்றில் ஆரஞ்சும் மூன்றாவதில் இரண்டும் கலந்தும் உள்ளன. சரியாக லேபிள்களை நீங்கள் தான் ஒட்ட வேண்டும். எத்தனை பழங்களை வேண்டுமானாலும் எந்த ஜாடியிலிருந்து வேண்டுமானாலும் நீங்கள் எடுக்கலாம். நீங்கள் எத்தனை பழத்தை எடுத்து ஜாடிகளை  முறைப்படுத்தி லேபிளை ஒட்டுவீர்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்!

விடை

ஒரே ஒரு பழத்தை எடுத்தால் போதும்.

எப்படி?

ஜாடிகளின் லேபிள்கள் தவறாக ஒட்டப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆகவே முதலில் இரண்டு பழங்களும் கலந்தவை என்று லேபிள் ஒட்டப்பட்ட ஜாடியிலிருந்து ஒரு பழத்தை எடுங்கள். அது ஆப்பிள். ஆக அது ஆப்பிள் ஜாடியாகத் தான் இருக்க வேண்டும்.

அடுத்து மீதி உள்ள இரண்டு ஜாடிகளில் ஆரஞ்சு என்று தவறாக ஒட்டப்பட்ட ஜாடி நிச்சயமாக ஆரஞ்சுப் பழங்கள் உள்ள ஜாடி இல்லை என்பது தெரிகிறது. அதுவே அது நிச்சயமாக இரு பழங்களும் கலந்த ஜாடி. மீதி இருப்பது ஆரஞ்சுப் பழ ஜாடி.

அவ்வளவு தான் சார்!

தேவை புத்திகூர்மை தான்!

***

Leave a comment

Leave a comment