வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6 (Post.14,069)


Written by London Swaminathan

Post No. 14,069

Date uploaded in Sydney, Australia – 9 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 6

வள்ளலார் இயற்றிய திருவருட்பாவில் பகவத் கீதை மற்றும்  ஆதி சங்கரரின் ஸ்லோககங்களின் தாக்கம் நன்றாகவே தெரிகிறது . இந்து சந்யாசிகள் ஒரே மாதிரிதான் சிந்திக்க முடியும். இதனால் இமயம் முதல் குமரி வரையிலுள்ள எல்லா ஆன்மீக நூல்களிலும் வேத, உபநிஷத் கருத்துக்கள் இருக்கும். அதைச் சொல்லும் முறையில் வேண்டுமானால் சிறிது மாறுதல் இருக்கும். உபநிஷத்தின் சாரம் பகவத் கீதை ஆகும்.

வேதங்கள் அனைத்தும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் துவங்குகின்றன ; இந்த ஓரெழுத்திலிருந்துதான் – ஏகாக்ஷரத்திலிருந்துதான் —பிரபஞ்சம் தோன்றியது ; இதை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டு பிக் பேங் BIG BANG என்னும் மாபெரும் வெடிப்பு கொள்கையை வெளியிட்டனர்

பிராதஸ் மரணம் என்று இந்துக்கள் தினமும் சொல்லும் துதியிலும் நபஸ்ச சப்தம் மஹாதா சைவ என்ற வரியில் இந்தக் கருத்து வெளிப்படுகிறது

पृथ्वी सगन्धा सरसास्तथापः

स्पर्शी च वायुर्ज्वलितं च तेजः ।

नभः सशब्दं महता सहैव

कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् ॥७॥

Prthvii Sa-Gandhaa Sa-Rasaas-Tatha-Apah

Sparshii Ca Vaayur-Jvalitam Ca Tejah |

Nabhah Sa-Shabdam Mahataa Sahai[a-E]va

Kurvantu Sarve Mama Suprabhaatam ||5||

ஆகாயம் என்பது சப்தம் நிரம்பியது

Morning:

5.1: (In the early morning I remember) Mother Nature manifesting as the Prithivi (Earth) which is connected with Gandha (Smell), Apah (Water) which is connected with Rasa (Taste), …

5.2: … Vayu (Air, Wind) which is connected with Sparsha (Touch), Tejah (Fire) which is connected with Light and …

5.3: … Sky which is connected with Sabda (Sound); I remember all these Mahat Tatvas (Material Energy),

5.4: May all of them make my Morning Auspicious.

****

தெய்வமணிமாலை

தெய்வமணி மாலையில் ஓம் என்னும் எழுத்தை ராமலிங்க சுவாமிகள் — வள்ளலார்- குறைந்தது இரண்டு இடங்களில் போற்றித் துதிக்கிறார்  பகவத் கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா   ஓம் என்னும் அக்ஷரத்தின் பெருமையை இரண்டு இடங்களில் விளக்குகிறார் .

6. காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்

கனலோப முழுமூடனும்

கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்

ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்

றியம்புபா தகனுமாம்இவ்

வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்

எனைப்பற்றி டாமல்அருள்வாய்

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்

திறன்அருளி மலயமுனிவன்

சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ

தேசிக சிகாரத்னமே

தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

24. கற்றமே லவரொடும் கூடிநில் லேன்கல்வி

கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்

கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்

கருதிலேன் நல்லன்அல்லேன்

குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்

குற்றம்எல் லாம்குணம்எனக்

கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்

குறைதவிர்த் தருள்புரிகுவாய்

பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்

பெற்றெழுந் தோங்குசுடரே

பிரணவா காராரின் மயவிமல சொரூபமே

பேதமில் பரப்பிரமமே

தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

****

பகவத் கீதையில் ஓம்

பகவத் கீதை 17-24

BG 17.24: எனவே, யாகம் செய்யும் போதும், தானம் செய்யும்போதும், தவம் செய்யும்போதும், வேதங்களை விளக்குவோர் எப்போதும் வேத கட்டளைகளின்படி ஓம் என்று உச்சரிப்பதன் மூலம் தொடங்குகிறார்கள்.

தஸ்மாதோமித்யுதாஹ்ருத்ய யஞ்ஞதானதப: க்ரியா: |

ப்ரவர்தன்தேவிதானோக்தா: ஸததம் ப்3ரஹ்மவாதி3னாம் ||17-24||

तस्माद् ॐ इत्युदाहृत्य यज्ञदानतप:क्रिया: |

प्रवर्तन्ते विधानोक्ता: सततं ब्रह्मवादिनाम् || 17-24||

****

பரம புருஷனாகிய என்னை நினைவு செய்து, ஓம் என்ற எழுத்தை உச்சரித்துக்கொண்டே உடலை விட்டுப் பிரிந்தவன், உன்னதமான இலக்கை அடைவான் 8-13

ஓமித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரன்மாமனுஸ்மரன் |

ய: ப்ரயாதி த்யஜன்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் ||8-13||

ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् |

य: प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् || 8-13||

****

தந்தை யார் தயார் யார் ?

மனைவி மக்கள் என்பவர் எல்லாம் நிரந்தர உறவுகள் அல்ல ; இந்தக் கருத்தை பகவத் கீதை, ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் முதலிய பாடல்களில் காண்கிறோம்; இதை வள்ளலாரும் ஒரு பாடலில் பாடுகிறார்

14. கானலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்

காண்உறு கயிற்றில் அறவும்

கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்

கதித்தபித் தளையின்இடையும்

மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை

மாயையில் கண்டுவீ ணே

மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்

வாள்வென்றும் மானம்என்றும்

ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்

உள்என்றும் வெளிஎன்றும்வான்

உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை

உண்மைஅறி வித்தகுருவே

தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

****

வீடு வரை உறவுகடைசி வரை யாரோ?

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:- 921 தேதி 21 மார்ச் 2014.

கவிஞர் கண்ணதாசன், இந்து மதக் கருத்துக்களில் ஊறித் திளைத்தவர். அவர் பிறந்த செட்டியார் ஜாதி, கோவில்களையும், கோவில்களைப் போற்றிய பெரியோர்களையும் இரண்டு கண்களாகக் கருதிப் பாதுகாத்த ஜாதி. தெய்வத் தமிழ் தழைத்தோங்க உடல், பொருள், ஆவியைக் கொடுத்த ஜாதி. பொருளை நாடிப் பிழைத்த ஜாதியானாலும் “செம் பொருளை” மறவாத ஜாதி. தர்ம ,அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்கு புருஷார்த்தங்களில் அர்தத்துக்கும் காமத்துக்கும் (பொருள் தேடல், இன்பம் நாடல்) வரையறையாக தர்மத்தையும் மோக்ஷத்தையும் (அறம், வீடு பேறு) வைத்துக் கொண்டு வாழ்ந்த ஜாதி. இது கண்ணதாசனின் ரத்தத்தில் ஓடியதால்— முதலில் வால்மீகி போல மற வாழ்க்கை நடத்தினாலும்– பின்னர் அற வாழ்வில் நுழைந்தார். அவருக்கு ஊற்றுணர்ச்சியாக விளங்கிய பெரியோர்கள் ஆதி சங்கரர், அப்பர்,, பட்டினத்தார் முதலியோர் என்பதை அவரது பாடலே காட்டும். இதோ ஒரு சான்று:

திரைப்படம்: பாதகாணிக்கை

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன?

கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்

கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?

பட்டினத்தார் சொன்னது:

பழந்தமிழ்நாட்டின் ‘பில் கேட்ஸ்’, ‘லெட்சுமி மித்தல்’ — பட்டினத்தார். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பணக்காரருக்கு “காதற்ற ஊசி” மூலம் ஞானம் பிறந்தது. புத்தர் போதி (அரச) மரத்துக்கடியில் பல்லாண்டு தவம் செய்து ஞானோதயம் பெற்றார். பட்டினத்தாருக்கோ ‘பட்’டெனப் பிறந்தது பட்டறிவு! இதோ அவரது பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்

வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்

கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்

எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே

இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?

தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்

தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

பொருள்: முன்னர் செய்த தவம் தினை அளவோ எள் அளவோ இருந்தாலும் போதும். அது கூடவே வந்து பரலோகத்தில் நல்ல கதி கிடைக்க சத்தியமாக உதவும்.

இன்னொரு பாடலிலும்

என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்

பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்

கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்

உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

பொருள்: என்னைப் பெற்ற தாயார் ,’மகனே, பிணமாப் போயிட்டியே’ – என்று அழுது, அத்தோடு நிறுத்திவிட்டாள். நான் கழுத்தில் பொன் தாலி மாட்டிய என் மனைவியோ, அழுது புலம்பி விட்டு, ‘சடலத்தைத் தூக்கிட்டுப் போங்க’ என்று சொல்லிவிட்டாள். என் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய என் மகன்கள், என் சடலத்தைச் சுற்றி வந்து பானையைப் ஓட்டு உடைத்துவிட்டுப் போய்விட்டாங்க. இறைவா உன்னைத் தவிர, வேறு யாரும் இல்லையப்பா!

இப்படிப் பட்டினத்தாரைப் பாட வைத்தவர் அப்பர் பெருமான். அவரும் குடும்பப் பற்றுகளை அறவே துறந்தவர்:

அப்பர் எழுப்பும் கேள்விகள்

தந்தை யார்தாய் யார்உடன்பிறந்தார்,

தாரம்ஆர்புத்திரர் ஆர் அதாம்தாம் ஆரே?

வந்த ஆறு எங்ங்அனேபோம் ஆறு ஏதோ?

மாயம் ஆம்; இதற்கு ஏதும் மகிழ் வேண்டா!

சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்;

திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி

எந்தையார் திரு நாமம் “நமச்சிவாய”

என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே.

——918, ஆறாம் திருமுறை

பொருள்: எளிய தமிழ். பொருளே தேவை இல்லை. சிந்திக்கும் திறம் படைத்த அறிவாளிகளே, ஒன்று மட்டும் சொல்கிறேன். நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டு தினமும் படுக்கையில் இருந்து எழுந்திருங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைப்பதோடு சுவர்க்கமும் கிடைக்கும்.

ஆதிசங்கரர் பாடியது

அப்பர் இப்படிப் பாடுவதற்கு ஊற்றுணர்ச்சி தந்தவர் ஆதி சங்கரர்; அவரது பஜ கோவிந்தம் அற்புதமான ஒரு துதி. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பெரிய புத்தகம் எழுதும் அளவுக்கு ஆழமான கருத்துக்கள்! அவர் பாடுகிறார்:

காதே காந்தாகஸ்தே புத்ர:

சம்சாரோ அயம் அதீவ விசித்ர:

கஸ்ய த்வம்க: குத ஆயாத-

ஸ்தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

———பாடல் 8, பஜ கோவிந்தம்

பொருள்: மனைவி யார்? மகன் யார்? என்ன அதிசயமான உறவுகள் இவை!! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? சகோதரனே, இந்த உண்மையைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்.

குடும்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, குடும்பப் பொறுப்புகளை எல்லாம் உதறிவிட்டு வெளியே வா என்று சொல்லவில்லை. இந்து மதம் ஒன்றுதான் உலகில் மனித வாழ்வை ,அழகாக ,நான்கு கூறு போட்டுக் கொடுத்திருக்கிறது1.பிரம்மசர்யம்: படிப்பு ஒன்றே உனக்கு லட்சியம் 2. க்ருஹஸ்தம்: கல்யாணம் செய்து இன்பத்தை அனுபவித்துக் குடும்பத்தை காப்பாற்று 3. வானப் பிரஸ்தம்: ஒரு கட்டத்தில் பற்றை எல்லாம் விட்டு விட்டு, தாமரை இலைத் தண்ணீர் போல இரு 4.சந்யாசம்: முற்றும் துற. பற்றுக, பற்றற்றான் பற்றை; (எதற்காக?) அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு (வள்ளுவன் குறள்)

(குறிப்பு: அப்பர் பெருமானுக்கு முன் வாழ்ந்தவர் ஆதி சங்கரர்– என்று போதுமான தமிழ் இலக்கியச் சான்றுகளோடு நான் எழுதிய கட்டுரை இதே பிளாக்—கில் உள்ளது.; காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சொல்லுவது போல ஆதி சங்கரர், கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர். மேலே உள்ள அப்பர் பாடலையும் பஜ கோவிந்தத்தையும் ஒப்பிட்டால் இது மேலும் தெளிவாகும். குறிப்பாக, சொற்றொடர்களைக் கவனிக்கவும்)

கீதையிலேயே உள்ளது!

ஆதி சங்கரருக்கும் அனைத்து சாது சந்யாசிகளுக்கும் இக் கருத்தை வழங்கியவர் கண்ண பிரான் ஆவார். பகவத் கீதையிலேயே இக்கருத்து உள்ளது:–

அஸக்திர் அனபிஷ்வங்க: புத்ர தார க்ருஹாதிஷு

நித்யம் ச ஸமச்சித்தத்வம் இஷ்டானிஷ்டோபபத்திஷு (13—9)

பொருள்: மக்கள், மனைவி, மனை முதலியவற்றில் பற்றின்மை, அபிமானமின்மை, இஷ்டமுள்ளதும் இஷ்டமில்லாததும் வாய்த்தபோதும் கூட மன அமைதி (சமச்சித்தம்)———– (ஞானம் என்று கூறப்படும்).

ஆக கண்ணன் முதல், ஆதி சங்கரர் வரை , வள்ளலார் வரை ,கண்ணதாசன் வரை அனைவரும் கூறுவது ஒன்றே!

****

பாம்பும் கயிறும்

கயிறு  என்பதை இருட்டில் பாம்பு என்று கருதுவது போல என்ற உவமையை முதல் முதல் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர்; அதிகமான இடத்தில் ஸ்லோகங்களில் திரும்பத் திரும்ப சொன்னவரும் சங்கரரே.  இதைப் பல சித்தர்களும்

தமிழ் அடியார்களும் பாடியுள்ளனர். வள்ளலாரும் ஆதி சங்கரரைப் பின்பற்றி இதை பல இடங்களில்  பயன்படுத்துகிறார்

–SUBHAM—

TAGS- வள்ளலார் பாடல், பகவத் கீதையின் தாக்கம் 6

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 6, தெய்வமணிமாலை, வீடு வரை உறவுகடைசி வரை யாரோ?, பாம்பு கயிறு

Leave a comment

Leave a comment