தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-7 (Post No.14,073)

Written by London Swaminathan

Post No. 14,073

Date uploaded in Sydney, Australia – 10 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 7 

எனக்கு ரொம்ப நாளாக ஒரு டவுட்டு; சந்தேகம்; சம்சயம்;ஐயப்பாடு !

அது என்னவெனில் தமிழை முதலில் எளிமைப் படுத்தியவர் பாரதியாரா அல்லது அவருக்கு முன்னர் வாழ்ந்த அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகளா என்பதே .

இருவரும் தமிழை வளப்படுத்தினர், எளிமைப்படுத்தினர் என்பதில் ஐயமில்லை. அந்த மொழியின் கடின நடையை எளிமைப்படுத்தியதில் முதலில் நிற்பவர் வள்ளலார் ; ஆனாலும் வள்ளலாரின் வீச்சு தெய்வ பக்திப் பாடல்களுடன் நின்றுவிட்டது .

பாரதியாரோ தெய்வம், தேசம், பெண் விடுதலை, தமிழ் மொழியின் உயர்வு , இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ் வளர்ச்சி, அகத்தியர் ஆதிசங்கரர் , காளிதாசர்,  வீர சிவாஜி, குரு கோவிந்த சிங் முதலிய இந்திய பெரியோர்கள் , உலகப் புகழ்பெற்ற தலைவர்கள்,  என்று நூற்றுக் கணக்கானோரை பாடிவிட்டார். ; அவை தெரு முழக்கம் ஆகிவிட்ட பாடல்கள்.

 மேலும் வள்ளலார் போல,.பாரதியார் சிக்கலில் சிக்கவில்லை. அவர் ஆறுமுக நாவலருடன் மோதி வழக்கு மன்றம் ஏக நேரிட்டது ; திருமுறை என்ற சொல்லை உபயோகித்ததால் சைவர்களால் நிராகரிக்கப்பட்டார் .பாரதியார் வழக்கில் சிக்கியது வேறு விதம்; சுதந்திர  போராட்டத்தில் மட்டுமே !

பாரதியாரினால் பாடப்பட்டவை இன்றுவரை சிறுவர் நாவிலும் தவழ்கிறது; ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதி பாடலில் கூட ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன.

பாரதியாரும் வள்ளலாரும் மாணிக்க வாசகரின் செல்வாக்கிற்கு உட்பட்டதால் திருப்பள்ளி எழுச்சி போன்ற வகைப் பாடல்களைக் காணமுடிகிறது

இருவரும் எல்லா சமயங்களையும் போற்றி அவற்றின் உட்பொருள் ஒன்றே என்று உணர்த்தினர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலாளர்; பாரதியாரோ தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார்.

இருவரும் வேதங்களைப் போற்றினர்;  ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் புகழ்ந்தனர்  இருவரும் முருக பக்தர்கள் ; ஆயினும் ஒரு வித்தியாசம்! வள்ளலார் கிருஷ்ண, விஷ்ணு பக்தர் என்று காட்டவில்லை; பாரதியாரோ கண்ணன் மீது ஏராளமான பாடல்களைப் பாடினார்.

சொல்லப்போனால் பாரதியார் பாடாத தெய்வங் கள் இல்லை கணபதி முதல் கிராம தேவதைகள் வரை பாடினார்; பெரிய தேவி பக்தரும்  கூட;  அது போன்ற பாடல்களை வள்ளலாரின் திருவருட்பாவில் காண இயலாது .

காட்டுவழியினில் கள்ளர் பயமிருந்தால் –

வண்டிக்காரன் பாட்டு

(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)

காட்டு வழிதனிலே-அண்ணே!

கள்ளர் பயமிருந்தால்?எங்கள்

வீட்டுக் குலதெய்வம்-தம்பி

வீரம்மை காக்குமடா! 1

நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்

நெருங்கிக் கேட்கையிலே-எங்கள்

கறுத்த மாரியின் பேர்-சொன்னால்

காலனும் அஞ்சுமடா! 2– பாரதியார்

முத்துமாரி முதல் பராசக்தி வரை பாடினார் பாரதி

****

பாரதியார் 1882-1921

வள்ளலார் 1823- 1874

பாரதியார் இறந்தது  1921- ஆம் ஆண்டில்; வள்ளலார் மறைந்தது 1874 – ஆம் ஆண்டில் இருவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.

பாரதியாரும் வள்ளலாரும் ஸம்ஸ்க்ருதச் சொற்களைத் தவிர்க்காமல், வெறுக்காமல் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினார்கள். இருவரும் கவிதை மட்டுமின்றி உரைநடை இலக்கியத்தையும் நமக்கு அளித்தனர்  . இருவரும் இந்து மதத்தின் காவலர்களாக நின்றனர்.

*****

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்– என்கிறார் வள்ளலார்

‘’பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்!

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்!

மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும் தேவ தேவா!’’

என்று இறைவனை இறைஞ்சுகின்றார் பாரதி.

அது மட்டுமல்லாமல் காக்கை குருவி எங்கள் ஜாதி என்றும் மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன் என்றும் சொன்னார் பாரதியார் ;  ஆகவே இவ்விஷயத்தில் இருவர் கருத்தும் ஒன்றே.

****

பாரதியார் திருவெம்பாவை பற்றி உரையாற்றினார் ; ஆண்டாள் பற்றியும் நம்மாழ்வார் பற்றியும் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதினார்; வள்ளலாரும் சைவ விஷயங்கள் பற்றி உரையாற்றினார்; ஆனால் ஆங்கிலத்தில் எழுதவில்லை.

****

பாரதி, நாடு முழுதும் பயணம் செய்தார் ; பல மொழிகளைக் கற்றார் ; இதை வள்ளலார் செய்யவில்லை. இருவரும் படிக்காத மேதைகள்! பிறவியிலேயே கவிஞர்கள்!! இளம் வயதிலேயே கவிதைகளை புனைந்து சான்றோர்களை அசத்தியவர்கள்.

*****

இருவரும் சமய ஒற்றுமையை வலியுறுத்தினர்

பூமியிலே, கண்ட மைந்து, மதங்கள் கோடி!

புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்

சாமி யென யேசு மதம் போற்று மார்க்கம்,

ஸநாதன மாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,

நாம முயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,

நல்ல “கண்பூசி“ மத முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல வுளவா மன்றே;

யாவினுக்கு முட் புதைந்த கருத்திங் கொன்றே.(65)

பூமியிலே வழங்கி வரு மதத்துக் கெல்லாம்

பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்;

சாமி நீ ; சாமி நீ ; கடவுள் நீயே ;

தத்வமஸி ; தத்வமஸி ; நீயே யஃதாம் ;

பூமியிலே நீ கடவு ளில்லையென்று

புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமி நீ அம் மாயை தன்னை நீக்கி

ஸதாகாலம் ‘சிவோஹ’ மென்று ஸாதிப்பாயே. – பாரதியார்

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்

தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்

தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்

செங்குமுத மலரவரு மதியே எல்லாம்

செய்யவல்ல கடவுளே தேவ தேவே – வள்ளலார்

****

இருவரும் தமிழ் மொழியை  வளர்த்தனர்; எளிமைப்படுத்தினர் ; இருவரும் இந்து மதத்தினைப் போற்றினர் ; சிவனையும் முருகனையும் பாடினர்; பசிப்பிணியை அகற்ற விரும்பினர் .

பெரிய வித்தியாசம் – வள்ளலார் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து பசிப்பிணி அகற்ற உணவளித்தார்; பாரதியார் சுதந்திரப் போராட்டத்தில் இருந்ததால் இதைச் செய்யவில்லை.

****

இருவரும் வள்ளுவர் போல புலால் உணவை வெறுத்தனர் ;

பாரதியார் உலக அரசியலை அலசினார் ; வள்ளலார் இந்துக்கடவுளருடன் நின்றுவிட்டார் அரசியலில் புகவில்லை  இருவரும் ஆங்கிலேய ஆட்சியில் வாழ்ந்தவர்கள் .

பாரதியார் பாடிய, பேசிய, எழுதிய  விஷயங்கள் இமய மலை போன்றது. வள்ளலாரின் வீச்சு  ஒரு சிறு குன்றினைப் போன்றது ; ஆயினும் கடுகு சிறுத்தாலும் காரம் போகாது ; மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது! என்ற பழமொழிகளுக்கு இணங்க புகழ் மணம் பரப்பினார் .

தமிழ் உள்ளவரை- இந்து மதம் வாழும் வரை- இவர்கள் இருவர் பெயர்களும் அழியாது என்பதில் ஐயமில்லை .

–subham—

Tags- தமிழ், வளர்ச்சி, பாரதியாரும் வள்ளலாரும், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 7

Leave a comment

Leave a comment