WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,072
Date uploaded in Sydney, Australia – –10 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மனிதக் கணினி : கணித மேதை சகுந்தலா தேவி – 2
ச. நாகராஜன்
ஒவ்வொரு குழந்தையும் கணிதத்தில் மேதையாகலாம் என்று அவர் கூறியதோடு அதற்கான திறமையை எப்படி வளர்ப்பது என்பதையும் சொல்லித் தந்தார். தான் எப்படி மனதிலேயே இதை சாதிக்க முடிகிறது என்பதையும் அவர் விளக்கினார்.
மணவாழ்க்கை
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் பரிதோஷ் பானர்ஜி என்பவரை அவர் மணம் புரிந்தார். அனுபமா பானர்ஜி என்ற ஒரு பெண்குழந்தை அவருக்கு உண்டு. ஆனால் 1979ல் தன் கணவரை அவர் விவாக ரத்து செய்தார்.
அரசியல் ஈடுபாடு
அரசியலில் குதித்த அவர் ஆயிரத்தி தொள்ளாயிருத்து எண்பதுகளில் லோக் சபா உறுப்பினராக ஆந்திராவில் மேடக் தொகுதியில் இந்திரா காந்திக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மும்பை தெற்குத் தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளராக நின்று அவர் தோல்வி அடைந்தார்.
நூல்கள்
சகுந்தலா தேவி பல நூல்களை எழுதியுள்ளார். ‘பஸில் டு பஸில் யூ’, ‘தி வோர்ல்ட் ஆஃப் ஹோமோசெக்ஸுவல்ஸ்’, ‘மேதபிலிடி: அவேகன் தி மேத் ஜீனியஸ் இன் யுவர் சைல்ட்’ போன்ற அவரது நூல்கள் பெரும் வரவெற்பைப் பெற்ற நூல்களாகும்.
1977ல் வெளியான ஓரினச் சேர்க்கையைப் பற்றிய அவரது நூல் தான் இதைப் பற்றி முழு ஆய்வு செய்யப்பட்ட நூலாக இருந்தது.
அவர் ஒரு ஜோதிட நிபுணரும் கூட. எண்களைப் பற்றிய மர்மங்கள் அனைத்தையும் அறிந்த பெரும் கணித நிபுணராக அவரை உலகம் அங்கீகரித்தது.
மறைவு
2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவாசக் கோளாறுகளுக்காக பங்களூரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அடுத்த இரு வாரங்களில் இதயத்திலும் சிறுநீரகத்திலும் பாதிப்புகள் ஏற்பட அவர் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி தனது 83ம் வயதில் மரணமடைந்தார்.
திரைப்படம்
சகுந்தலா தேவி பற்றிய திரைப்படம் ஒன்று 2020,ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.
சகுந்தலா தேவி தன் வாழ்க்கை மூலம் தெரிவிப்பது
சகுந்தலா தன் வாழ்க்கை மூலம் தெரிவிக்கும் ஒரு செய்தி இது தான். கடவுள் படைப்பில் – அல்லது இயற்கை என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் – அனைத்துமே எண்கள் தான் – கணிதம் தான்! “எல்லாமே எண்கள் தான்” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன பிதகோரஸின் கூற்றை திடமாக, வலுவாக ஆமோதிக்கிறார் அவர். கணிதம் இல்லாத ஒரு பொருள் உலகத்திலேயே இல்லை. அவரது ‘கணிதப் புதிர்களும் விடுகதைகளும் ‘என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் விரிவாக இதைக் கூறுகிறார்.
“மனிதனும், மிருகங்களும் தங்கள் உள்ளுணர்வு மூலம் கணிதத்தை தங்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கின்றனர். நத்தை தன் கூடை துல்லியமான கணித அடிப்படையில் உருவாக்குகிறது. சிலந்திகளின் கணித ஆற்றல் அதன் கூட்டை அமைக்கும் போது தெரிய வருகிறது. சோளம், சூரியகாந்திப் பூ ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தால் அவற்றில் கணித அமைப்பைக் காணலாம்.” என்று அவர் கூறுகிறார்.
சகுந்தலா தேவியின் பொன்மொழிகளில் சில:
எண்கள் எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு; அவை பேப்பரில் அடையாளங்களாக மட்டும் உள்ளன!
கணிதமில்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே எண்கள் தான்!
கல்வி என்பது பள்ளிக்குச் சென்று ஒரு பட்டத்தைப் பெறுவது அல்ல; அது உங்கள் அறிவைப் பெருக்கி வாழ்க்கையைப் பற்றிய உண்மையை உள்ளே இழுத்து உணர்வதாகும்.
உங்கள் உடலில் உள்ள எந்த ஒரு தசையையும் பயன்படுத்தாவிடில் அது சுருங்கி வறண்டு விடும். அதே போலத் தான் மூளையும். அதை அதிகமதிகம் பயன்படுத்தப் பயன்படுத்த அது இன்னும் சிறப்பாக ஆகிவிடும்.
கணிதம் என்றாலேயே ஏன் குழந்தைகள் அஞ்சி நடுங்குகின்றன? ஏனெனில் தவறான அணுகுமுறையே அதற்குக் காரணம். அதை ஒரு பாடமாக அணுகுவதனால் தான் இது ஏற்படுகிறது.
இந்தியாவின் பெருமைக்குரிய கணித மேதையாக விளங்கிய சகுந்தலா தேவியின் நூல்கள் நமது மூளை ஆற்றலை வளர்க்க உதவுபவை. அவற்றைப் பயன்படுத்துவோமாக.
***