திருமூலர் – 1 (Post No.14,076)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,076

Date uploaded in Sydney, Australia – –11 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-1-2025  ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களிலிருந்து ஞாயிறு தோறும் (இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு) ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.

இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

திருமூலர் – 1

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே, வணக்கம், நமஸ்காரம்.

குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு

முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்

படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டென் உச்சி

அடிமன்ன வைத்த பிரான் மூலனாகின்ற அங்கணே

என நம்பி ஆண்டார் நம்பிகள் போற்றி வணங்கும் திருமூலர் பெரிய சித்தர். துறவி. தமிழின் ரகசியங்களை அறிந்தவர். சிவ ரகசியத்தை உணர்ந்தவர். அனைவரையும் ஆன்மீக உச்சியில் ஏற்ற தியானம், யோகம், மூச்சுக்கலை உள்ளிட்ட பலவற்றையும் தெள்ளுதமிழில் அள்ளித் தந்தவர். அவரைப் பற்றி இப்போது சிறிது சிந்திப்போம்.

மூவாயிரம் அரும் பாடல்களைத் தமிழுக்குத் தந்து பல ரகசியங்களை அனைவரும் அறிய வழி வகுத்த மாபெரும் சித்தர் திருமூலர்.

வேளாளர் குலத்தில் 21வது தலைமுறையைச் சேர்ந்தவர் இவர். ஐப்பசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் தோன்றியவர் திருமூலர்.

ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் சமாதியில் இருந்தவர் என்பது பிரமிக்க வைக்கும் ஒரு உண்மை.

இவரைப் பற்றிய  முக்கிய வரலாறு ஒன்று உண்டு.

கயிலை மலையில் தவம் செய்து கொண்டிருந்த சிவயோகி ஒருவர் பொதிகை மலையில் இருந்த அகத்திய மாமுனிவருடன் சில நாட்கள் இருக்கலாம் என்று பொதிகை நோக்கி வந்தார். சுந்தரநாதர் என்பது இவர் பெயர். திருவாவடுதுறையில் பசுபதி நாதரை தரிசித்து விட்டு அவர் சாத்தனூரை அடைந்தார். அங்கு மூலன் என்னும் இடையன் ஒருவன் மாடுகளை மேய்த்துக்  கொண்டிருக்கும் போதே வினைப்பயனால் கீழே விழுந்து இறந்தான்.  பசுக்கள் அனைத்தும் துயரத்தோடு அவனைச் சுற்றி நின்று புலம்பின. இதைப் பார்த்த சிவயோகி அப்பசுக்களின் துயரைப் போக்குவதற்காகத் தனது உடலை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டுத் தனது தவ ஆற்றலால் மூலனின் உடலில் புகுந்தார். பசுக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தன. சாத்தனூரில் உள்ள பசுக்களின் இருப்பிடங்களில் அவற்றை பத்திரமாகச் சேர்த்த யோகியார் திரும்பி தான் உடலை வைத்த இடத்திற்கு வந்து பார்க்க அங்கு அவர் உடலைக் காணோம். இது சிவனது அருள் விளையாடலே என உணர்ந்த அவர் திருவாவடுதுறைக்குத் திரும்பி வந்து அங்கு மேற்குத் திசையில் இருந்த ஒரு அரச மரத்தின் அடியில் நிஷ்டையில் அமர்ந்தார். ஆண்டிற்கு ஒரு பாடல் வீதம் 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அவர் பாடியருளினார். இப்போது நமக்கு இந்த 3000 பாடல்களும் கிடைத்துள்ளன. சில பிரதிகளில் 3047 பாடல்கள் கூட உள்ளன. பின்னர் சிவபிரானின் திருவடியை அவர் அடைந்தார்.

இவர் அருளிய நூல் திருமந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன.

இந்த வரலாற்றைத் திருத்தொண்டர் புராண சாரமும் திருத்தொண்டர் திருவந்தாதியும் எடுத்துரைக்கின்றன.

நந்தி அருளாலே மூலனை நாடினோம் என்ற திருமந்திரப் பாடல் வரி இதை உறுதி செய்கிறது.

இன்னொரு ஆய்வின் படி இவர் சிதம்பரத்தில் சமாதி அடைந்துள்ளார் என்ற கருத்தும் தரப்படுகிறது.

சதுரகிரி தல புராண வரலாறு திருமூலர் பற்றிய பல சம்பவங்களை எடுத்துரைக்கிறது.

பாண்டிய மன்னனான வீர சேனன் என்பான் ஒரு கொடுங்கோலன். அவனை அவன் மனைவி உள்ளிட்ட அனைவரும் வெறுத்தனர். ஒரு நாள் கொடிய விஷ நாகத்தால் அவன் இறந்து விட்டான். அப்போது வான் வழியே சென்று கொண்டிருந்த திருமூலர் அம்மன்னனின் உடலில் புகுந்தார். தன் கல்ப தேகத்தைத் சீடனான குருராஜனின் பாதுகாப்பில் வைத்து விட்டு அரண்மனைக்கு வந்தார்.

திருமூல வீரசேனர் ஆட்சியில் நாடு செழிப்படைந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். அரசி பழைய வீரசேனனிடம் அடையாத இன்பங்களை திருமூல வீரசேனரிடம் அடைந்தார். அந்த உடலில் இருப்பது ஒரு பெரும் சித்தர் என்பதை அவள் அறிந்து கொண்டாள். அவரது கல்ப தேகம் இருக்கும் இடத்தையும் அதை அழிக்கும் வழியையும் அறிந்து கொண்ட அரசி அந்த உடலை அழித்து விட்டாள்.

நீண்டகாலமாக குருநாதரைக் காணாத சீடன் அவரைத் தேடி அரண்மனைக்கு வரவே அவனைப் பார்த்த திருமூலர் அவனைத் தன் கல்பதேகம் வைத்திருந்த குகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது தேகம் எரிந்து கிடந்தது.  உடனே திரும்பி அரண்மனைக்கு வந்து அங்கு சில நாட்கள் இருந்து பின்னர் சதுரகிரி மலைக்கு வந்து தனது தவ வாழ்க்கையைத் தொடங்கினார். திருமந்திரம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றி, பின்னர் அங்கேயே சமாதி அடைந்தார்.

திருமூலர் மூலனுடைய உடலில் புகுந்த பின் செய்யப்பட்ட நூல் திருமந்திரம் ஒன்றே ஆகும். அதற்கு முன்னர் அவர் உபதேசம் முப்பது, மந்திரம் முந்நூறு என்ற இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.

நிறைமொழி மாந்தரான திருமூலர் சிவபிரானது ஆணையால் மறைபொருள் கூற்றுக்கள் செய்யுள் வடிவில் தமிழ் மூவாயிரம் ஆக்கப்பட்டிருப்பதால் இது மந்திரம் என்ற பெயரைப் பெற்றது.

to be continued……………………….

****

Leave a comment

Leave a comment