Post No. 14,077
Date uploaded in Sydney, Australia – 11 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவ பக்த வள்ளலார் !
சிவபெருமான் மீது வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடிய மஹாதேவ மாலையில் நூறு பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் சிவ பெருமானின் போற்றலை விட தத்துவ வசனங்களே அதிகம். இந்து மதம் பற்றியும் சம்ஸ்க்ருத மொழி வசனங்கள் பற்றியும் அறியாதோர் அதைப் பின்பற்றுவது கடினம். ஆனால் பஜனைகளில் பாடக்கூடிய தாளத்துடன் வரக்கூடிய சிவ நாமாவளி அம்பலத் தரசே என்று துவங்கும் பாடல்தான்:
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
134. அம்பலத்தரசே
நாமாவளி
1. சிவசிவ கஜமுக கணநாதா
சிவகண வந்தித குணநீதா.
2. சிவசிவ சிவசிவ தத்துவ போதா
சிவகுரு பரசிவ சண்முக நாதா.
3. அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
4. பொதுநடத் தரசே புண்ணிய னே
புலவரெ லாம்புகழ் கண்ணிய னே.
5. மலைதரு மகளே மடமயி லே
மதிமுக அமுதே இளங்குயி லே.
6. ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
அற்புதத் தேனே மலைமா னே.
7. சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
8. படன விவேக பரம்பர வேதா
நடன சபேச சிதம்பர நாதா.
9. அரிபிர மாதியர் தேடிய நாதா
அரகர சிவசிவ ஆடிய பாதா.
10. அந்தண அங்கண அம்பர போகா
அம்பல நம்பர அம்பிகை பாகா.
11. அம்பர விம்ப சிதம்பர நாதா
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.
12. தந்திர மந்திர யந்திரபாதா
சங்கர சங்கர சங்கர நாதா.
13. கனக சிதம்பர கங்கர புரஹர
அனக பரம்பர சங்கர ஹரஹர.
14. சகல கலாண்ட சராசர காரண
சகுண சிவாண்ட பராபர பூரண.
15. இக்கரை கடந்திடில் அக்கரை யே
இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
16. என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே.
17. ஐயர் திருச்சபை ஆடக மே
ஆடுதல் ஆனந்த நாடக மே.
18. உத்தர ஞான சிதம்பர மே
சித்திஎ லாந்தரும் அம்பரமே.
19. அம்பல வாசிவ மாதே வா
வம்பல வாவிங்கு வாவா வா.
20. நடராஜன் எல்லார்க்கும் நல்லவ னே
நல்லஎ லாம்செய வல்லவ னே.
21. ஆனந்த நாடகம் கண்டோ மே – பர
மானந்த போனகம் கொண்டோ மே.
22. சகள உபகள நிட்கள நாதா
உகள சததள மங்கள பாதா.
23. சந்தத மும்சிவ சங்கர பஜனம்
சங்கிதம் என்பது சற்சன வசனம்.
24. சங்கர மும்சிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா.
25. அரகர சிவசிவ மாதே வா
அருளமு தம்தர வாவா வா.
26. நடனசி காமணி நவமணி யே
திடனக மாமணி சிவமணி யே.
27. நடமிடும் அம்பல நன்மணி யே
புடமிடு செம்பல பொன்மணி யே.
33. நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
34. சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
35. அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு.
43. நான்சொல்லும் இதுகேளீர் சத்திய மே
நடராஜ எனில்வரும் நித்திய மே.
46. சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
90. நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
91. நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
நடராஜ நடராஜ நடராஜ குருவே.
92. நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
நடராஜ நடராஜ நடராஜ பலமே.
இதிலும் நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருந்தாலும் ராக, தாளத்துக்கு ஏற்ப வருவதால் பஜனைகளில் பாடலாம்
****
இரண்டாம் திருமுறையில் வரும் கீழ்கண்ட பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும்; இதையும் எம் எஸ் . உள்பட நிறைய சங்கீத வித்துவான்கள் பாடியுள்ளனர் .
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
இதைத் தொடர்ந்து வரும் பாடல்களிலும் நமச்சிவாயத்தைப் போற்று கிறார்
இப்போது மகாதேவ மாலையிலிருந்து சில பாடல்களைப் பார்ப்போம்.
5. வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
முதலாகி மனாதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
31. தத்துவமே தத்துவா தீத மேசிற்
சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
49. பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
50. வான்காணா மறைகாணா மலரோன் காணான்
மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.
101. அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
சிவ லீலைகளை பற்றி அதிகம் பாடாமல் வருணனை மட்டுமே உளது.
நாயினேன் போன்ற சொற்கள் மாணிக்கவாசகரின் தாக்கத்தைக் காட்டுகிறது .
ஆயினும் முன்னர் கூறியது போல ராமலிங்க சுவாமிகள் பாடலில் அதிகமாகப் போற்றப்படுபவர் முருகப் பெருமானே .
—subham—
Tags- வள்ளலார், ராமலிங்க சுவாமிகள், சிவ பக்தி, வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-8, அம்பலத்தரசே, பெற்ற தாய் தனை, மகாதேவ மாலை