திருமூலர் – 2 (Post N0.14,080)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,080

Date uploaded in Sydney, Australia – –12 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-1-2025  ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களிலிருந்து ஞாயிறு தோறும் (இந்திய நேரம் மாலை 5.30 மணிக்கு) ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை

இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது. 

திருமூலர் – 2

ச. நாகராஜன்

திருமந்திர நூலானது பாயிரத்தில் அவையடக்கம், ஆகமச் சிறப்பு, வேதச் சிறப்பு உள்ளிட்ட ஒன்பது பகுதிகளைக் கொண்டது.

 முதல் தந்திரத்தில் அன்புடைமை, கல்வி, கொல்லாமை, தானச்சிறப்பு உள்ளிட்ட 24 பகுதிகளையும், இரண்டாம் தந்திரத்தில் கரு உற்பத்தி, குரு நிந்தை, சிவ நிந்தை, தீர்த்தம் உள்ளிட்ட 25 பகுதிகளையும் மூன்றாம் தந்திரத்தில் அட்டமா சித்தி, அட்டாங்க யோகம், பிராணாயாமம் உள்ளிட்ட 20 பகுதிகளையும் நான்காம் தந்திரத்தில் அர்ச்சனை, நவகுண்டம், பைரவி மந்திரம் உள்ளிட்ட 13 பகுதிகளையும் ஐந்தாம் தந்திரத்தில் கிரியை, சரியை, சன்மார்க்கம், சாமீபம், சாயுச்சியம் உள்ளிட்ட 20 பகுதிகளையும் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம், சிவ வேடம் திருவடிப்பேறு உள்ளிட்ட 14 பகுதிகளையும் ஏழாம் தந்திரத்தில் அடியார் பெருமை, கூடா ஒழுக்கம்,  சிவலிங்கம் உள்ளிட்ட 38 பகுதிகளையும் எட்டாம் தந்திரத்தில் உடல் விடல், பத்தியுடைமை, முக்குற்றம், மும்முத்தி உள்ளிட்ட 43 பகுதிகளையும் ஒன்பதாம் தந்திரத்தில் ஊழ், ஒளி, தோத்திரம், வாழ்த்து உள்ளிட்ட 23 பகுதிகளையும் கொண்டுள்ளது. மொத்த பகுதிகள் 229.

தந்திரம் என்பது ஆகமத்தின் வேறொரு பெயராகும். ஒன்பது ஆகமங்களில் உள்ளவற்றை இந்தத் தந்திரங்கள் கொண்டுள்ளன.

திருமந்திரம் ஒரு யோகானுபவ நூல். குரு மூலமாகவே இதனுடைய முழு அர்த்தத்தையும் நாம் உணர முடியும்.

திருமூலர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தவர் என்பதை

‘தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே – திருமந்திரம் பாடல் 74

என்பதாலும்

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி என்ற எண்பதாவது பாடலாலும் அறிய முடிகிறது.

இவரை சிவபிரான் தன்னை நன்றாகத் தமிழில் பாடுவதற்காகவே படைத்தான் என்பதை இவரே

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (பாடல் 81)

என்று கூறி இருக்கிறார்.

அற்புதமான திருமந்திரம் 3000 பாடல்களில் சில முக்கியமான அடிகளை இப்போது பார்ப்போம்:

சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை – 3

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – 85

பதியினைப் போற் பசு பாசம் அனாதி – 115

ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்தடக்கி

இருமையுங் கேட்டிருந்தார் புரை அற்றே – 133

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே – 145

வேதாந்தமானது வேட்கை ஒழிந்திடம் – 229

நல்லாரைக் காலன் நணுக கில்லானே – 238

வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்? – 240

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் – 250

அன்போடுருகி அகங்குழைவார்க்கன்றி

என்போன் மணியினை எய்த ஒண்ணாதே – 272

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் – 298

ஈசனடியார் இதயம் கலங்கிடத்

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் – 534

பெரியாருடன் கூடல் பேரின்பமாமே – 545

உடம்பால் அழியில் உயிரார் அழிவர்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – 724

சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது- 1459

சைவம் சிவனுடன் சம்பந்தமானது – 1512

குருவே சிவம் எனக் கூறினன் நந்தி – 1581

ஒடுங்கி நிலை பெற்ற உத்தமர் உள்ளம்

நடுங்குவதில்லை நமனும் அங்கில்லை – 1624

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் – 1726

அருள் கண் இல்லாதார்க்கு அரும் பொருள் தோன்றா – 1808

வல்ல பரிசால் உரைமின் வாய்மையை – 2108

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் – 2104

இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் – 2108

ஆவன ஆவ அழிவ அழிவன

போவன போவ புகுவ புகுவனே – 504, 2175

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை – 2303

அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் – 270

3000 பாடல்களையும் வெவ்வேறு விதமாகப் பிரித்துப் படித்து மகிழலாம்.

எந்தக் கேள்விக்கும் இதோ பதில் என்பதே திருமூலரின் திருமந்திரப்பாணி.

உதாரணத்திற்கு ஒரு கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

இறைவன் எங்கு உள்ளான்? கடினமான கேள்விக்கு திருமூலரின் பதில் இதோ:

காலினில் உறும் கரும்பினிற் கட்டியும்

பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்

பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை

காவலன் எங்கும் கலந்து நின்றானே – பாடல் 2639

ஒரு நாடகக் காட்சியை நான்கு அடிகளில் காட்டுகிறார் திருமூலர் ஒரு பாடலில்

அடப் பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடியாரொடு மந்தணங் கொண்டார்

இடப்பக்கமே இறை நொந்தது என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே.

இன்றைய நாட்களில் நாம் காணும் காட்சியை அன்றே காட்டி விட்டார் திருமூலர்.

மனைவி அருமையாக சமைத்து உணவு படைக்க அதை கணவன் உண்டான்.  பின்னர் மடக்கொடியான பேரழகியான தன் மனைவியுடன் ஊஞ்சலில் ஆடியவாறே வெற்றிலை பாக்கைச் சுண்ணாம்புடன் சேர்த்துப் போட்டு நாக்கு சிவ சிவக்க ஆனந்தம் அடைந்தான்.

அப்போது லெப்ட் சைடில் இடது புறத்தில் சிறிது வலி என்றான். ஹார்ட் அட்டாக்!.

ஆ என்று  கிடக்கப் படுத்தான். கிடந்து ஒழிந்தானே.

என்ன அருமையான நாட்டு நடப்பைச் சுட்டிக் காட்டுகிறார் திருமூலர்.

இப்படி நூற்றுக் கணக்கான பாடல்களில் அவர் காட்டும் சித்திரங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

தமிழே தனக்குப் படைத்துக் கொண்ட ஒரு அற்புதமான தமிழ் நூல் திருமந்திரம். அதைத் தந்த அருளாளர் சிவபிரானின் அருளால் தோன்றியவரே என்று கூறி என் உரையை முடிக்க விழைகிறேன்.

இறுதியாக ஒரு விஷயம்:

பல நூல்களையும் கற்று ஆராய்ந்த ஔவையார் தனது முடிவாகச் சொல்லும் ஒரு தீர்ப்பு இது:

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்றுணர் 

திருமந்திரமே சிவகதிக்கு வித்தாம்

திருமந்திரமே சிவமாம்; – அருமந்த

புந்திக்குளே நினைந்து போற்றுமடியார் தமக்கு

சந்திக்குந் தற்பரமே தான்

என்று ஒரு தனிப்பாடல் இதன் பெருமையை விளக்குகிறது.

வாழ்க திருமந்திரம்! போற்றுவோம் திருமூலரை!

***

Leave a comment

Leave a comment