ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சில சுவையான சம்பவங்கள்! (Post.14,081)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,081

Date uploaded in Sydney, Australia – –12 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

விவேகானந்தர் அவதார தினம் : 12-1-1863

                  சமாதி : 4-7-1902

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சில சுவையான சம்பவங்கள்!

 ச. நாகராஜன் 

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொன்றும் ஒரு உண்மையை வெளிப்படுத்தும்.

அவற்றில் சில இதோ:

1

இந்தியாவை நேசி!

ஸ்வாமி விவேகானந்தர்  அல்மொராவில் இருந்த போது நடந்த சம்பவம் இது:

அங்கிருந்த மேலை நாட்டு பக்தையான மெக்லவுட் ஸ்வாமிஜியிடம், “ஸ்வாமிஜி, உங்களுக்கும் மிகச் சிறப்பாக சேவை செய்ய வேண்டும் எனில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

உடனே ஸ்வாமிஜி, “இந்தியாவை நேசி!” என்று பதில் அளித்தார்.

ஸ்வாமிக்கு இந்தியா மீது இருந்த அளவு கடந்த அன்பு இப்படி அவ்வப்பொழுது வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது! 

2

குரு தட்சிணை!

ஸ்வாமிஜி 1899 ஆகஸ்ட் 28ம் தேதியன்று நியூயார்க்கை அடைந்தார்.

நியூயார்க்கிலிருந்து 80 மைல் தொலைவில் இருந்த ரிஜ்லிமேனரில் (RIDGELY MANOR) அவரும் துரியானந்தரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அது ஒரு பெரிய வீடு.

அங்கு இருந்தவர்களில் ஒருவர் மிஸ் ஸ்டம். அவர் ஒரு ஓவியர். ஒரு நாள் ஸ்வாமிஜி அவரிடம், “சும்மா இருப்பதை விட ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபட விரும்புகிறேன். நீங்கள் ஏன் எனக்கு ஓவியம் கற்றுத் தரக் கூடாது?” என்று கேட்டார்.

ஸ்டம் உடனடியாக அதற்கு இசைந்தார்., தேவையான பொருள்கள் வாங்கப்பட்டன. ஓவியப் பயிற்சி தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது. குறித்த நாளில் குறித்த நேரத்தில் ஸ்வாமிஜி சென்றார். கையில் ஒரு சிவந்த ஆப்பிளை எடுத்துச் சென்ற அவர் பணிவுடன் தலை வணங்கியபடி அதை ஸ்டம்மிடம் குரு தட்சிணையாகத் தந்தார்.

ஸ்டம்முக்கு ஒன்றும் புரியவில்லை. இது என்ன என்று அவர் கேட்க, ஸ்வாமிஜி, “நான் உங்கள் மாணவன். பாடங்கள் பலன் அளிப்பதற்காக இதனை தட்சிணையாக நான் உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.

மிக விரைவாக ஓவியக் கலையைக் கற்றுக் கொண்ட அவர் சிறப்பாக ஓவியம் வரையத் தொடங்கினார்.

வியந்து போனார் ஸ்டம்.

அவர் எழுதினார்:

“எத்தைகைய மாணவர் அவர்! எதையும் ஒரு முறை சொன்னால் போதும். அப்படியே அதைப் பிடித்துக் கொள்வார். அவரது மனஒருமைப்பாடும் நினைவாற்றலும் அபாரமானவை. அவர் வரைந்த ஓவியங்களை ஏதோ அதைக் கற்கும ஒருவர் வரைந்ததாக நினைக்க முடியாது. அப்படி அவை சிறப்பாக இருந்தன”

3

நைனிடாலைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர் சர்பரஸ் ஹூஸைன் என்பவர்,  அவர் அத்வைத வேதாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டார். ஸ்வாமிஜியால் அவர் மிகவும் கவரப்பட்டார். ஒரு நாள் அவர் ஸ்வாமிஜியிடம், “ ஸ்வாமிஜி! நீங்கள் ஒரு அவதார புருஷர் என்று இனி வரும் காலத்தில் மக்கள் கொண்டாடும் போது ஒன்றை மட்டும் நினவில் வைத்துக் கொள்ளுங்கள்.  அப்படிக் கொண்டாடிய முதல் மனிதன் முஸ்லிமாகிய நான் தான்” என்றார்.

தனது பெயரை அவரை முகம்மதானந்தர் என்று மாற்றி வைத்துக் கொண்டார். அவரைச் சந்தித்த நாளிலிருந்து தன்னை அவரது சீடராகவே கருதினார்.

அவருக்கு ஸ்வாமிஜி எழுதிய கடிதத்தில் வேதாந்தம் மற்றும் இஸ்லாமிய சங்கமத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

வேதாந்த மூளை, இஸ்லாமிய உடல் – இதுவே நம் தாய்நாட்டிற்கான ஒரே நம்பிக்கை என்றார் ஸ்வாமிஜி!

**

Leave a comment

Leave a comment