Post No. 14,092
Date uploaded in Sydney, Australia – 14 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலக அதிசயங்களில் ஒன்று ஆஸ்திரேலிய பவளப் பாறைகளாகும். நவரத்தினங்களில் முத்தும் பவளமும் கடலில் வாழும் பிராணிகளிடமிருந்து கிடைக்கின்றன . பவளம் என்பது உயிருள்ள பிராணிகள்; அவைகள் இறந்த பின்னர் கிடைக்கும் பொருளையே நாம் பாலிஷ் செய்து பவளமாகப் பயன்படுத்துகிறோம்.
Great Barrier Reef
இந்த பவளப்பாறைகள் 1600 மைல் நீளத்துக்கு பசிபிக் மஹா சமுத்திரத்தில் பரந்து விரிந்து வாழ்கின்றன . இவைகளுக்கு இடையே 4000 வகை மீன்கள் வசிக்கினறன .இறைவனின் வண்ண ஜாலத்தை நமக்கு காட்டுவது பவளங்கள் வாழும் கடற்பகுதிதான். பழைய பவளங்கள் இறந்து பாறைகள் ஆகிவிடுகின்றன.
இவை வியாபித்த பரப்பு 3,48,000 சதுர கிலோமீட்டர் ;இவைகளில் 900 தீவுகளும் 3000 தனித்தனிப் பாறைத் திட்டுகளும் உண்டு.
சீனாவின் நெடுஞ்சுவரை விடப் பெரிது; விண்வெளியிலிருந்து காணக்கூடிய ஒரே உயிர் வாழும் அமைப்பு இது ஒன்றுதான்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் நகரிலிருந்து படகுகளில் சென்று பவளத் திட்டுகளைக் காணலாம்.
ஜூன் முதல் அக்டோபர் வரை இந்தப் பகுதியின் கடல் இளம் சூடாக இருப்பதால் பவளப்பாறைகளைக் காணவும் நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும் உகந்த தருணம் ஆகும்.
பவளப் பறைகளைக் கண்ணாடிப் படகுகளிலிருந்து மட்டும் காணாமல் பலர், ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் ஹெலிகாப்டர் சுற்றுலா முதலிவற்றின் மூலமும் கண்டு ரசிக்க இது உதவும்.
இதற்கு 2015-ஆம் ஆண்டில் நான் சென்றபின்னர் எழுதிய கட்டுரையில் மேல் விவரங்களைக் காணலாம்.
உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்! (Post No 2510) Written by london swaminathan; Date: 5 February 2016
உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef). இது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதைக் காண வேண்டுமென்று 30 ஆண்டுகளாக இருந்த கனவு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு உறவினர்கள் அழைக்கவே, இந்த இடத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்று திட உறுதி பூண்டேன். ஏனெனில் பி.பி.சி.தமிழோசையில் வேலை பார்க்கும்போது “வினவுங்கள் விடை தருவோம்” என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இது பற்றி சொல்லியிருந்தேன். அப்போது டெலிவிஷன் டாக்குமெண்டரி (TV Documentary) பார்த்த அடிப்படையில் இது பற்றிப் பேசினேன். என்றாவது ஒரு நாள் இதைக்காண வாய்ப்பு கிட்டும் என்று தெரியும்.
நான் ஜனவரியில் சிட்னி (Sydney) நகருக்குப் பயணமானேன். அங்கு செல்வதற்கு முன்னாலேயே Great Barrier Reef கிரேட் பார்ரியர் ரீF எனப்படும் பெரும்பவளத் திட்டுகள் பற்றிய விவரங்களையும் சேகரித்தேன். சிட்னி நகரிலிருந்து 1300 மைல் தொலைவில் இருப்பதால் விமானத்தில் சென்றோம். அங்கு பல வீர தீரச் செயல்கள் செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் வீட்டிலிருந்து வந்த இருவருக்கு சமுத்திரம் என்றால் அச்சம். ஆகவே இந்த முறை கொஞ்சம் குறைத்து வாசிப்போம் என்ற பாணியில் சேவையை ஏற்பாடு செய்தோம். ஆகவே ஐந்து மணி நேர கப்பல் (Ferry) சவாரி மட்டும் போதும் என்று சொன்னோம்.
சிட்னியிலிருந்து 1300 மைல் தொலைவிலுள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் ஊரிலிருந்துதான் நிறைய படகு சேவை இருப்பதால் அங்கு விமானத்தில் போய்ச் சேர்ந்தோம். பெரும் பவளத்திட்டுகள் பவளப் பூச்சிகளால் உருவாக்கப்படுபவை. அது 1600 மைல் நீளத்துக்குப் பரவியிருந்தாலும் ஒரு சில ஊர்களிலிருந்து சென்று பார்க்கவே வசதி செய்யப்பட்டுள்ளது.
ஐந்து மணி நேர சேவையில் முதலில் பெரியகப்பலில் எல்லோரையும் ஏற்றிச்சென்று பசிபிக் மஹா சமுத்திரத்தில் (Pacific Ocean) 35 மைல் தொலைவிலுள்ள க்ரீன் ஐலண்ட் (Green Island) என்னும் பசுமைத் தீவில் இறக்கிவிடுவார்கள். உண்மையிலேயே பசுமையான மரங்களுண்டு. நிறைய கடைகளும் காப்பி விடுதிகளும், சின்ன மிருகக் காட்சி சாலையும் இருக்கின்றன. வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரைக்குச் சென்றால் பலரும் முகமூடி, சுவாசக் குழாய் அணிந்து கடலுக்குள் செல்லுவதைக் காணலாம். எல்லாவற்றிற்குமுதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். முன்னமேயே இதற்கெல்லாம் கட்டணம் செலுத்திவிடுவதால், அவர்கள் நமக்காகக் காத்திருப்பர். நாங்கள் போனபோது நிறைய ஜப்பானிய, சீன பயணிகளைத் தான் கண்டோம்
இந்த இடத்தில் மூச்சுக் குழல் (snorkelling) அணிந்து கடலில் மூழ்குவோர், கடலுக்கடியில் செல்லும் குட்டி நீர்மூழ்கியில் (Submersible vehicles) செல்லுவோர், கண்ணாடி ஜன்னல் பொறுத்தப்பட்ட படகில் (Glass Bottomed Boats) செல்லுவோர் என்று பயணிகளை வகைப்படுத்தி அதற்கான கப்பலில் ஏற்றுவர். நாங்கள் கண்ணாடி ஜன்னல் படகுக்குக் காசு கட்டி இருந்தோம். இது 45 நிமிட பயணம். ஒரு பெரிய படகில் எதிரும் புதிருமாக 20+20 = 40 பேர் அமர்ந்திருப்போம். எங்களுக்கு மூன்றடி கீழே படகின் அடிப்புறத்தில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். படகு புறப்பட்டவுடன் பெரும் பவளத் திட்டு புராணத்தை படகோட்டி சொல்லுவார். அந்த நேர்முக வருணனை நடக்கும் போதே நாம் கேமரா சகிதம் கீழே பார்த்துக் கொண்டிருக்க, பலவகையான பவளப் பாறைகள், கடல் பிராணிகள், தாவரங்கள், ஆமைகள், வண்ண வண்ண மீன்கள் என்று பார்த்துக் கொண்டே போகலாம். இடையிடையே அவர் மீன்களுக்கான இரையைக் கடலில் எறிவார். அதைச் சாப்பிட மீன்கள் துள்ளிக் கொண்டுவர, அந்த மீன்களைச் சாப்பிட பறவைகள் பறந்துவர எல்லாவற்றையும் கண்டு களிக்கலாம். நாங்கள் 20 வகை மீன்களையாவது பார்த்திருப்போம். சில மீன்கள் மிகப் பெரியவை.
இதையும் தாண்டிச் செல்லுவோரை Outer Reef அவுட்டர் ரீF க்கு அழைத்துச் செல்லுவர். அங்கு குட்டி நீர்மூழ்கி வாகனங்களில் ஏறினால் பெரிய ஜன்னல் வழியாக இன்னும் அதிக மீன் வகைகளையும், பெரிய பவளப் பாறைகளையும் காணலாம்.
பவளத்திட்டு மகாத்மியம் அல்லது புராணம்
விண்வெளியில் பறக்கும் வீரர்களும் பவளத்திட்டு இருக்குமிடத்தை எளிதில் காணமுடிகிறதாம். கடலில் சூரிய வெளிச்சம் எந்த அளவுக்குப் போகுமோ அந்த அளவுக்கே பவளப் பூச்சிகள் வளரும். சுண்ணாம்பால் வீடுகட்டி அதில் வசிக்கும். அது இறந்தவுடன் அதன்மீது அடுத்த தலைமுறை வீடு கட்டும் இப்படி வளர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளில் 1600 மைல் வரை பரவிவிட்டது பெரும்பவளத் திட்டு. இத்தான் உலகின் மிகப்பெரிய உயிர்வாழும் பிராணி. ஆனால் ஒரு பிராணி அல்ல. பல்லாயிரம் பிராணிகள்.
இந்தியாவிலும் குஜராத் கடலோரம், தமிழ்நாட்டின் கடலோரத்தில் பவளப் பாறைகள் உண்டு.அவை சிறிய பரப்பளவில் இருப்பவை. மேலும் மீனவர்கள் அதை அழித்துச் சுருக்கிவிட்டனர்.
ஆஸ்திரேலியப் பெரும்பவளத்திட்டு வருடத்தில் ஒரு நாள் திடீரென முட்டைகளை வெளியிடும். அந்த நாளில் கடல் முழுவதும் தக்காளி சூப் போல மாறிவிடும். அந்த முட்டைகளைச் சாப்பிட ஏராளமான மீன் வகைகள் படையெடுக்கும். ஒவ்வொறு முட்டையும் பல மைல்கள் நீந்திச் சென்று குடியமரும். யார் இதையெல்லாம் அந்த வாயில்லா ஜீவன்களுக்குச் சொல்லிதந்தார்கள், ஏன் ஒரு குறிப்பிட்ட நாளன்று எல்லாம் கருவை வெளியேற்றுகின்றன, அவைகளைத் தூண்டிவிடுவது என்ன என்பதெலாம் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நான் சென்ற கேர்ன்ஸ் நகரில் பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கின்றன.
இந்தப் பெரும் பவளத்திட்டில்
600 வகையான பவளங்கள்
100 வகையான ஜெல்லி மீன்கள்
3000 வகையான கிழிஞ்சல்கள், சங்குகள், சோழிகள்
500 வகையான கடற்புழுக்கள்
1625 வகையான மீன்கள்
130 வகையான சுறாமீன்கள், மாண்டா ரேய்ஸ்
30 வகையான திமிங்கிலங்கள், டால்பின்கள் உள்ளன.
இந்து சாஸ்திரப்படி முத்தும், பவளமும் நவரத்தினங்களில் சேர்க்கை. இரண்டும் கடல் பிராணிகளால் உண்டாக்கப்படுபவை. செம்பவளம் என்பது ஒரு வகைப் பவளம். ஆனால் கருப்பு முதல் பல வண்ணங்களிலும் பவளங்கள் கிடைக்கும்!
மூன்றரை லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு வியாபித்துள்ள இப்பவளத் திட்டு பல நாடுகளின் பரப்பளவுக்குச் சமம். ஐரோப்பாவில் பிரிட்டன், ஹாலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் இப்பவளத்திட்டில் அடக்கிவிடலாம்!
இங்குள்ள ஜெல்லி மீன்களில் சில மிகவும் விஷம் வாய்ந்தவை. சில சுறாமீன்கள் மனிதர்களை வேட்டை ஆடக்கூடியவை. பெரிய ஆமைகளும் கடல் நண்டுகளும் இங்கே பவனி வரும். ஆஸ்திரேலிய அரசு இதைக் கண்ணும் கருத்துமாக காத்துவருகிறது. இது, அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்.
நாங்கள் ஒரு தவறு செய்தோம். கேர்ன்ஸில் ஒர் இரவு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்துவிட்டு அடுத்த நாள் பிரிஸ்பேன் நகருக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கி இருந்தோம். ஆனால் அங்கு போனவுடந்தான் தெரிந்தது Cairns கேர்ன்ஸ் நகரில் வேறு ஒரு அதிசயமும் பார்க்க இருக்கிறது என்பது. அங்கு பக்கத்திலுள்ள பெரிய மலையில் அடர்ந்த பசுமையான மழைவனக் காடுகள் இருக்கின்றன. இதற்கு ஒரு முழு நாள் தேவை. போகும் போது கேபிள் காரிலும் வரும்போது ரயிலிலும் அழைத்து வருவர். காடுகளையும் பெரிய நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.
அடுத்த முறை கடலில் நீர்மூழ்கி, வானில் கேபிள் கார் பவனி எல்லாவற்றையும் அனுபவிக்க திட்டமிட்டோம். எல்லாம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே!
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
வாழ்க இயற்கை; வளர்க காடுகளும் பவளத் திட்டும்!
—subham—
Tags– ஆஸ்திரேலிய, பவளப் பாறை, ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் ,பாருங்கள், Part 4 , உலகின் மிகப் பெரிய, இயற்கை அதிசயம், பெரும் பவளத் திட்டு