
Post No. 14,087
Date uploaded in Sydney, Australia – 13 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected from popular newspapers and edited by me.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 12–ம் தேதி 2025-ம் ஆண்டு
****
நேயர்கள் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !
மகர சங்கராந்தி , திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள் !
பொங்கலோ பொங்கல் !!!
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக !
****
முதலில் கும்பமேளா செய்தி!
மஹா கும்பமேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: யோகி ஆதித்யநாத் கணிப்பு
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில், நாளை 13 ம் தேதி முதல் பிப்., 26 ம் தேதி வரை, 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நடக்க உள்ளது. இது உலகின் மிகப்பெரிய விழா ஆகும்.
இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 45 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹா கும்பமேளாவுக்கு ரூ.5,000 கோடி செலவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் யோகி ஆதியநாத், இந்த மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவின் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று பதில் கொடுத்துள்ளார்.
அரசுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், ஓட்டல்கள் உணவகங்கள் என அனைத்திற்கும் ஒரு நபருக்கு ரூ.5,000 என்று கணக்கிட்டால் கூட, வாரணாசியில் மட்டும் ரூ.80,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சியை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. மாறாக, சாதி, மதம், மொழியின் அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தி பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள், என யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார்.
*****
கும்பமேளாவையொட்டி நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரெயில்

கும்பமேளா விழா வுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா ரயிலை இயக்க, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ஏற்பாடு செய்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து காசிக்கு 12 நாட்கள் சுற்றுலா செல்ல, நபர் ஒருவருக்கு ரூ, 26 ஆயிரத்து 850 வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்தது. கட்டணத்திற்கு ஏற்ப ரயில் பயண வகுப்பு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதி ஆகியவை வழங்கப்படுகிறது.
“பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 5 அதிகாலை 01.00 மணிக்கு புறப்பட்டு மதுரை வந்து, மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு காசிக்கு புறப்பட்டு, பிப்ரவரி 7 மதியம் 12.30 மணிக்கு காசி சென்றடைகிறது.
இதனையடுத்து, பிப்ரவரி 7 மாலை கங்கா ஆரத்தி பார்த்து, மறுநாள் (பிப்ரவரி 8) முழுவதும் பிராக்யாராஜ் பகுதியில் சுற்றுலா செல்லுதல். தொடர்ந்து, பிப்ரவரி 9 காசி விஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், சாரநாத் கோவில்களுக்கு சுற்றுலா செல்லுதல். பிப்ரவரி 10 அயோத்தியா சரயு நதி மற்றும் ராம ஜென்ம பூமி கோயிலில் வழிபாடு செய்து, அன்று இரவு திருநெல்வேலிக்கு புறப்படும்படி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, சுற்றுலா ரயில் பிப்ரவரி 13 அதிகாலை 02.50 மணிக்கு மதுரை வந்து, மீண்டும் காலை 07.30 புறப்பட்டு திருநெல்வேலி சென்றடைகிறது.
அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்தும் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன.
********
கோவில்களை விடுவிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் போராட்டம்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து இந்தக் கோவில்களை விடுவிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் ஜனவரி ஐந்தாம் தேதி பெரிய போராட்டத்தினைத் துவக்கியுள்ளது கிறிஸ்தவ, முஸ்லீம் வழிபாட்டுத்தலங்களை அரசு கட்டு படுத்தவில்லை. இந்துக்கள் பெரும்பலானக வாழும் நாட்டில் இந்துக்கோவில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைக்கக்கூடாது என்று பரிஷத் வாதாடுகிறது . கோவில் நிர்வாகம் பக்தியுள்ள பக்தர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காக கிளர்ச்சி துவக்கப்பட்டுள்ளது .
பரிஷத்தின் போராட்டம் ஆந்திர மாநில விஜயவாடா நகரில் துவங்கியது.
கோவில் நிர்வாகம் எப்படி, யாரின் கீழ் இருக்க வேண்டும் என்ற விதி முறைகளை வகுத்துக் கொடுள்ள ப்பதற்காக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமத்ய தலைவர்கள் அடங்கிய குழு ஒன்றினையும் அமைத்துள்ளது .
கோவில்களில் இந்து அல்லாதவருக்கும் சமய நமபிக்கை அல்லாதவருக்கும் வேலை கொடுக்கக்கூடாது ; முன்னரே உள்ள ஊழியர்களையும் நீக்க வேண்டும் என்றும் கோரியது
மாநில அளவில் தார்மீகக் கவுன்சிலை நிறுவி மாவட்டம் தோறும் கவுன்சிலின் கிளைகளை அமைக்கவும் தீர்மானித்தது ; இவைகள் தான் கோவில்களின் ட்ரஸ்டிக்களை– தர்ம கர்த்தாக்களைத் தேர்ந்தெடுக்கும் என்றும் கூறியது .
கோவில்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கடைகளை இந்துக்கள் மட்டுமே நடத்தவேண்டும் ; அந்த வருமானத்தை சமய பணிகளுக்கு மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பது பரிஷத்தின் மற்றோரு கோரிக்கை ஆகும்
******

கோயில் நிர்வாகத்தை ஆன்மீகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்!
திருப்பரங்குன்றத்தில் ஆடு, சேவல்களை அறுப்போம் என கூறினால், தமிழகம் முழுவதும் முருக பக்தர்களை திரட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் பெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் நலன் வேண்டி திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் சாண்டி கோயிலில் நடைபெற்ற சண்டியாகத்தில், அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள கந்தர் மலையை சிக்கந்தர் மலை எனக் கூறுவதுடன், ஆடு, சேவல் அறுப்போம் என கூறுவது தவறு என்று அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டார்.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் திருப்பரங்குன்றம் முருக பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
*****
கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை; பொதுமக்கள் ஆவேச மறியல்
கோவை உடையாம்பாளையத்தில், கோவில் அருகே மாட்டுக்கறி பிரியாணி கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் ஆவேச மறியலில் ஈடுபட்டனர்.
கோவை உடையாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில், வீரமாச்சியம்மன் கோவில் மற்றும் கருப்பராயன் கோவில் உள்ளது. வீரமாச்சியம்மன் கோவில் முன்பு, சில நாட்களுக்கு முன்னர் தள்ளு வண்டியில் ஒருவர் மாட்டுக்கறி பிரியாணிக் கடை போட்டிருந்தார். இதற்கு ஊர் மக்கள் சார்பில் உள்ளூர் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘தங்கள் ஊரில், கோவில், பள்ளி அமைந்துள்ள பொது இடத்தில் மாட்டுக்கறி பிரியாணிக்கடை போடக்கூடாது; இது ஊர் கட்டுப்பாடு என்றும், கடையை தள்ளி அமைத்துக்கொள்ளும்படியும்’ ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தினர். இவ்வாறு வலியுறுத்திய பாரதீய ஜனதாக கட்சியின் நிர்வாகி சுப்பிரமணி என்பவருக்கும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட்டிருந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடை உரிமையாளர் கடையை வேறு இடத்திற்கு மாற்ற ஒப்புக் கொண்ட நிலையில், அவரது மனைவி ஆயிஷா, ‘கடையை மாற்ற முடியாது’ எனக்கூறினார். பா.ஜ., நிர்வாகி சுப்பிரமணி பேசியதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
போலீசார், மாட்டுக்கறி பிரியாணி விற்பனையை தடுத்ததாக சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த தகவல் பரவியதும், ஊர் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடையாம்பாளையம் மக்கள், கோவில் அருகே சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், மாட்டுக்கறி பிரியாணி கடை போட அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியும், தீர்மானம் நிறைவேற்றினர்.
*****
திருப்பதியில் இலவச தரிசன டோக்கனுக்காக குவிந்த பக்தர்கள் – கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
திருப்பதியில் வெங்கடாசலபதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 6 பேர் உயிரிழந்தனர் .
திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமானது வைகுண்ட ஏகாதசி விழா. மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஜனவரி 19-ஆம் தேதி வரை பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜன 8 ஆம் தேதி விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால், பக்தர்கள் இடையே கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்த விபத்தில், சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். வட்டார போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ,ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ,திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
******
கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – குடியரசு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்
ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய’ வளாகத்தை’ ஜக்தீப் தன்கர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி வைத்தார்.
விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என்பதால், விஐபி தரிசன கலாச்சாரத்தை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று குடியரசு துணை ஜனாதிபதி
கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய ‘வரிசை வளாகத்தை’ குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த வசதி ‘ஸ்ரீசாநித்யா’ என்று அழைக்கப்படுகிறது. இதனையடுத்து உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவதுசமத்துவம் எனும் கருத்தை இழிவுபடுத்துகிறது. சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் அரசில் உயர் பதவி வகிப்போரை மிக முக்கிய மானவர்கள் என்று கருதி தரிசனத்தில் அவர்களுக்கு முன்னுரிமை தருவது வி ஐ பி — அதாவது வெரி இம்பார்ட்டண்ட் பெர்சன் தரிசனம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னால்,
திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அறிவுறுத்தினார்
****
சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது.
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. சபரிமலையில் மண்டல, மகர விளக்கு கால சீசன் தொடங்கியதும் எருமேலியில் பேட்டை துள்ளல் தொடங்கினாலும் மகரஜோதிக்கு முன்னோடியாக அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த இரண்டு குழுவினரும் பேட்டை துள்ளி முடிந்ததும் எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெறும்
பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்கள் மகரஜோதி நாள் முதல், 5 நாட்கள் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும். சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பனை காண பந்தள மன்னர் ஆபரணங்களுடன் வந்ததை நினைவு கூறும் வகையில் இந்த திருவாபரண பவனி நடக்கிறது.
இது ஜன.14 மாலை 6:20 மணிக்கு சன்னிதானம் வந்தடையும்.
ஜன.13 ல் பம்பையில் பம்பை விளக்கும், பம்பை விருந்தும் நடைபெறும். ஜன. 14 காலை 8:45 மணிக்கு மகர சங்கரம பூஜையும், அன்று மாலை 6:30 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது.
*****
மகாசிவராத்திரி: நெல்லையில் 16-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை!

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கூடங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் வரும் 16-ஆம் தேதி முதல் இந்த ரதம் பயணிக்க உள்ளது. அதனைத்தனைத் தொடர்ந்து 21-ஆம் தேதி தொடங்கி தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வலம் வர இருக்கிறது.
வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆதியோகி திருவுருவச் சிலையுடன் கூடிய திருத்தேரினை நூற்றுக்கணக்கான சிவாங்கா பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து கோவை வெள்ளியங்கிரி வரை கிட்டத்தட்ட 500 கிமீ தூரம் பாத யாத்திரையாக இழுத்து வர உள்ளனர். அத்தேரில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று இருக்கும்.
******
அமெரிக்க எம் பி. பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம்

அமெரிக்காவில் இரண்டு சபைகளில் ஒன்றான அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினராக தேர்வாகிய இந்திய வம்சாவளி சுஹாஸ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது சத்தியப்பிரமாணம் செய்து உறுப்பினர் பதவியை ஏற்றார்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், புனித இந்து நூலான பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதற்கு முன்னர்,
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஹிந்து அமெரிக்கரான துளசி கபார்ட்டு ம் பகவத் கீதையின் மீது சத்திய ப் பிரமாணம் செய்து பதவி ஏற்றது குறிப்பிட்டது தக்கது .
119-வது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 4 இந்து உறுப்பினர்கள் உள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா மற்றும் ஸ்ரீ தனேதார்ஆகியோருடன் சுப்ரமணியமும் இந்த வரிசையில் இணைந்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் 3-வது பெரிய மத குழுவாக உள்ளனர். முதல் இடத்தில் கிறிஸ்தவர்கள் (461 பேர்), 2-வது இடத்தில் யூதர்கள் (32 பேர்) உள்ளனர். 3 புத்த மத உறுப்பினர்களும் உள்ளனர
அமெரிக்க அரசியலில் ஹிந்து- அமெரிக்கர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான அடையாளம் இது.
******

ஆருத்ரா உற்சவ விழா
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று 12 -ஆம் தேதியும், நாளை 13 -ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர், கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அடுத்துள்ள செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
******

தமிழக அரசு கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை –பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!
கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறியது அருமையான கருத்து எனவும், இதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில்கள் பாழடைந்து நிலையில் இருப்பதற்கு ஆளுங்கட்சியினரே காரணம் எனறும், தமிழக அரசு கோயில்களை முறையாக புனரமைப்பதில்லை எனறும் அவர் குற்றம்சாட்டினார்.
கோயிலுக்குள் செல்ல விரும்பாத ஸ்டாலின் அதை நிர்வாகம் செய்வது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என கூறியதாகவும், இதற்காக அவருக்க தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
*******
ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வசூல்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்தார் மேலும், 50 கிராம் தங்கம், 7 கிலோ வெள்ளி, 158 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்தது
*****
இதோ ஒரு சுவையான செய்தி
தீப்பெட்டிக்குள் அடங்கும் இரு பட்டு சேலைகளை தயாரித்த பக்தர்!
ஆந்திர மாநிலம், திருப்பதியில் ஏழுமலையானுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையிலான பட்டு சேலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
சிரிசில்லாவை சேர்ந்த விஜய் என்பவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் வெமுலவாடாவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், திருப்பதி ஏழுமலையானுக்கும் தீப்பெட்டியில் அடங்கும் அளவுக்கு இரு பட்டுச் சேலைகளை நெய்துள்ளார்’குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வந்த விஜய், தான் நெய்த பட்டு சேலையை காணிக்கையாக வழங்கினார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு
ஜனவரி 19 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,
ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
நேயர்கள் அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வணக்கம்.
—-subham—-
Tags- ஞானமயம் வழங்கும், உலக இந்து செய்தி மடல், 12-1-2025