
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,086
Date uploaded in Sydney, Australia — 13 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-1-2025 அன்று லண்டன், இந்தியா, ஆஸ்திரேலியாவிலிருந்து ஒளீபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹந்நாயகி சத்யநாராயணன்.
யாதுமாகி நின்றாய் – காளி– நீ எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் – காளி – தெய்வ லீலை அன்றோ!
பூதம் ஐந்தும் ஆனாய் – காளி – பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் – காளி – பொறியை விஞ்சி நின்றாய்
இன்பமாகி விட்டாய் – காளி – என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னை அல்லால் – காளி – பிறிது நானும் உண்டோ!
– மகாகவி பாரதியார் புகழ் ஓங்குக
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது மேற்கு வங்க மாநிலத்திநன் தலைநகரான கொல்கத்தாவில் தக்ஷிணேஸ்வர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பவதாரிணி காளி கோவில் ஆகும். கொல்கத்தாவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.
கொல்கத்தாவை விமானம் மூலமாகவும் ரயில் மூலமாகவும் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து மூலமாகவும் அடையலாம்.
.ஹீக்ளி ஆற்றில் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோவில்.
இறைவன் : சிவன் மற்றும் கிருஷ்ணர்
இறைவி : பவதாரிணி அல்லது காளி மற்றும் ராதா
ஒன்பது விமானம் போன்ற அமைப்புகளைக் கொண்டு விளங்கும் இந்தக் கோவிலைச் சுற்றி வெளியிடமும் , அதைச் சுற்றியுள்ள மதிலின் உட்புறத்தில் பல அறைகளும் உள்ளன.
ஆற்றங்கரையில் பன்னிரண்டு சிறு கோவில்கள் உள்ளன.
கடைசியில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகே வடமேற்கு மூலையில் உள்ள ஒரு கூடத்தில் தான் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தார்.
இந்தக் கோவில் எழுந்ததைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
1847-ம் ஆண்டில் இப்பகுதியின் ஜமீந்தாரிணியாக விளங்கிய ராணி ராஸமணி தேவியார் புனிதத்தலமான காசிக்கு யாத்திரை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். தேவையான பொருள்கள் சேகரிக்கப்பட்டு உறவினர்கள், வேலையாட்களுடனும் 24 படகுகளில் அங்கு செல்ல ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன.
கிளம்புவதற்கு முதல் நாள் ராணியார் கனவு ஒன்றைக் கண்டார். அதில் தோன்றிய காளி, காசிக்கு வந்து தரிசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், கங்கை ஆற்றங்கரையில் தனக்கென அழகிய கோவில் ஒன்றை நிர்மாணித்து அங்கேயே வழிபட்டால் போதும் என்றும் அருளுரை கூறினாள்.

உடனடியாக ராணியார் பெரும் நிலப்பகுதியை வாங்கிக் கோவிலை அழகுறக் கட்டி முடித்தார்.
1855ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
கோவில் திறக்கப்பட்ட போது நாடு முழுவதிலுமிருந்து ஒரு லட்சம் அந்தணர்கள் விழாவைச் சிறப்பிக்க அழைக்கப்பட்டனர்.
கோவிலின் குருக்களாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் தமையனாரான ராம்குமார் நியமிக்கப்பட்டார்.
அவர் அடுத்த ஆண்டே காலமாகவே அந்த குருக்கள் பணியை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மேற்கொண்டார். பரமஹம்ஸரின் தேவியார் அன்னை சாரதாமணி தேவியாரும் இங்கேயே வந்து குடியேறினார்.
அதிலிருந்து பரமஹம்ஸர் 1886-ம் ஆண்டு மறையும் வரையில் சுமார் 30 ஆண்டுகள் காளி கோவிலுக்கு குருக்களாக இருந்து கோவிலின் பெருமையையும் புகழையும் பெருமளவு உயர்த்தினார்.
கோவில் வங்காளக் கட்டிடக் கலையின் சிறப்பு அம்சமான நவரத்னா அல்லது ஒன்பது கோபுர பாணியில் அமைக்கப்பட்டது. மூன்று நிலைகள் கொண்ட தெற்கு நோக்கிய கோவிலாக இது அமைந்துள்ளது. இரண்டு நிலைகளில் நான்கு கோபுரங்களையும் முடிவில் ஒரு கோபுரத்தையும் கொண்டுள்ளது. 46 அடி சதுர வடிவில் உள்ள கோவில் 100 அடி உயரத்திற்கு மேல் இருக்கிறது. கோவிலை அடைய படிக்கட்டுகளும் உண்டு.
கோவிலின் கர்பக்ருஹத்தில் காளி தேவியின் சிலை உள்ளது.
லலிதா சஹஸ்ர நாமத்தில் 751வது நாமமாக அமைகிறது மஹாகாளீ என்ற நாமம். காலத்தின் முடிவைச் செய்கின்றவள் என்பதனால் காளீ என்ற பெயரை அம்பிகை பெறுகிறாள், காலனான மிருத்யுவிற்கும் முடிவு செய்வதனால் இவள் மஹா காளீ ஆகிறாள்.
பவதாரிணி என்று இங்குள்ள தேவி அழைக்கப்படுகிறாள். சிவபிரானின் மார்பில் தேவி நிற்கிறாள்.
இன்னும் இரண்டு சிலைகளும் வெள்ளியால் ஆன ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை சிம்மாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரதான ஆட்- சலா என்ற வங்காள கட்டிடக் கலையில், கிழக்கு நோக்கி 12 சிவன் கோவில்கள் வரிசை, பிரதான சிவன் கோவிலுக்கு அருகில், ஹூக்ளி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ளன.
கோவிலின் வடகிழக்கில் விஷ்ணு கோவில் உள்ளது. இதை ராதா காந்தர் என்றும் சொல்வர். இந்தக் கோவிலுக்குள் வெள்ளி சிம்மாசனத்தில் இருபத்தியொன்றரை அங்குலம் கொண்ட கிருஷ்ணருடன் 16 அங்குலம் உள்ள ராதையின் சிலையும் உள்ளது.
காளிகோவிலை நிர்மாணித்த ராணி ராஸமணி தேவியாருக்கும் இங்கு ஒரு சிறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பஞ்சவடி பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். ஆல், அரசு, வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து மரங்கள் சூழ்ந்த இந்த பஞ்சவடி பகுதியில் தான் பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் மற்றும் பரமஹம்ஸரின் இதர சீடர்கள் ஆன்மீக சாதனையை மேற்கொண்டனர். பரமஹம்ஸர் அருளால் விவேகானந்தர் காளியை தரிசனம் செய்து உத்வேகம் பெற்று பாரதத்தை எழுச்சி பெறச் செய்தார். அப்படிப்பட்ட புண்யமான திருத்தலம் இதுவே என்பதை யாராலும் மறக்க முடியாது.
பல்லாண்டுகளாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பவதாரிணி தேவியும் கிருஷ்ணரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி, வணக்கம்.
===subham—-