
Post No. 14,089
Date uploaded in Sydney, Australia – 14 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

6-3-2018 ல் வடலூருக்குச் சென்று வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் சந்நி நிதியைத் தரிசித்தேன்; திருவருட்பா புஸ்தகத்தை மீண்டும் வாங்கினேன்; சத்திய ஞான சபைக்கு எதிரே உள்ள மூலிகைக் கடைக்கும் சென்றேன்; அவைகளைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டு அறிந்து கொண்டேன்; என்னுடன் வந்த, மதுரையில் கல்லூரி பிரின்சிபால் வேலை பார்த்த, என் தம்பி சந்தானம் சூரிய நாராயணன், மூலிகைப் பிரியன் ஆனதால் சில மூலிகைப் பொடிகளை விலைக்கும் வாங்கினான் . நான் நிறைய புகைப்படங்கள் எடுத்ததோடு வந்ததும் –லண்டனுக்குத் திரும்பி வந்ததும் – மூலிகை அச்சுப் பிரதிகளை வெளியிட்டேன் ; இப்போது வள்ளலாருக்கு மூலிகை மேலிருந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் காண்போம்.
பொதுவாக அவர் குறிப்பிடும் மூலிகைகள் தமிழ் கூறு நல்லுலகத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மூலிகைகள்தான்.
வள்ளலார்/ மூலிகைகள் என்று கூகுள் GOOGLE Vallalar.org செய்தால் நிறைய விஷயங்கள்ல் கிடைக்கின்றன. ஆயினும் பெரும்பாலானோர் தாங்கள் சொல்லும் விஷயங்களுக்கு ஆதாரம் காட்டவில்லை.
சூரிய உதயத்துக்கு முன் எழுந்து, விபூதி பூசி நாளைத் துவங்க வேண்டும் என்று வள்ளலார் சொல்கிறார் ; பல் துலக்க எந்த மரங்களின் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பட்டியல் கொடுக்கிறார் ; கிருஹஸ்தர்கள் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு) போடுவதை வலியுறுத்துகிறார். மேலும் பல வகை வாழைப்பழங்களைச் சாப்பிடச் சொல்கிறார் ; புலால் உணவை அறவே தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்
வள்ளலார்.ஆர்க் Vallalar.org என்ற இணைய தளத்தில் உள்ள நித்ய கரும விதியில் இவைகளைப் பற்றிச் சொல்வதைக் காண்போம்.
****

நித்திய கரும விதி
1. சாதாரண விதி
சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.
பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தையெல்லாம் உட்கொள்ளல் வேண்டும்.2 பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும். பின் மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும்.
வேலங்குச்சி ஆலம்விழுது – இவைகளைக் கொண்டு பல்லழுக்கெடுத்து,3 அதன் பின் கரிசலாங்கண்ணித்தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாயலம்பின பின்பு, பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, துளையிலை4 முசுமுசுக்கையிலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு – இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும்.
சாயங்கால வெய்யில் தேகத்திற் படும்படி சிறிது உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்தடிக்கில் அப்போது உலாவப்படாது. அன்றி கடின வெய்யில், பனி, மழை – இவைகள் தேகத்திற்பட உலாவப் படாது.
இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் – இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்.10 இரவில் தயிர்11 கீரை வாயுவான பதார்த்தம் குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியவையாம். இரவில் போஜனஞ் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய்தல் வேண்டும். சுமார்12 நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிப் புசித்தல் வேண்டும். பின் சில நேரஞ் சென்று சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங் குறைய வெற்றிலை மிகவும் அதிகப்படக்12 கலந்து பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு முதல் ஜலத்தையுமிழ்ந்து பின் வருஞ் ஜலத்தையுட் கொண்டு, திப்பியை யுமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.

பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு 4 நாளைக்கு ஒருவிசை வெந்நீரில் முழுக வேண்டும். அன்றி வாரத்திற்கு ஒருவிசையாவது முழுகுதல் வேண்டும். தூளில்லாத பக்ஷத்தில் நல்லெண்ணெயைக் காய்ச்சியே முழுகுதல் வேண்டும்.
பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது மிகுந்த தீவிரமுமாகாது,5 முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் – ஆகும். அது சாதமாகும்போது, அதிக நெகிழ்ச்சியு மாகாது, அதிக கடினமும் ஆகாது. நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படாமலும் குறைவு படாமலும் அறிந்துண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒரு பிடி குறைந்த பக்ஷமே நன்மை. போஜனஞ் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும் அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.
கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்.6 பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் – இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.7 அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம். தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும். வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணபூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் – இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும். இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் – இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம்.
மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம். வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும். சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம். புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று.
கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை – இவைகளைப் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும், கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும். புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளைகட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல் முதலியவாகச் செய்து, நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவுஞ் சேர்க்கப் படாது. மற்றப் பருப்பு வகைகள் அவசியமல்ல. ஏகதேசத்தில் நேர்ந்தால் கொள்ளவுங் கூடும்.
சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு, வேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு, நல்ல ஜலத்திற் கொஞ்சம் போட்டு, 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட 2 பங்கு நீர் நிற்கக் காய்ச்சி, அதைத் தாகங் கொள்ளுதல் வேண்டும். நேராத பக்ஷத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமே யன்றிக் குளிர்ந்த ஜலங் கொள்ளப்படாது. எந்தப் போஜனத்திலும் புலால் எந்த வகையினும் புசிக்கப்படாது. எப்படிப்பட்ட போஜனமாயினும் சிறிது குறையவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.
பகலில் போஜனஞ் செய்தவுடன் சற்றே படுத்தெழுந் தல்லது வேறு காரியங்களிற் பிரவேசிக்கப்படாது. ஆயினும் நித்திரை வரும்படிப் படுக்கப்படாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை யாகாது.8 சிறிது படுத்து எழுந்த பின் பாக்கும் வெற்றிலையும் குறைவாகவும் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும்9 தாம்பூலம் பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய ஜலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப்பின்பு ஊறுஞ் ஜலத்தை உட்கொள்ளல் வேண்டும். பகற் போஜனஞ் செய்த


சுமார் பதினேழரை நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பங்காள வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும். காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்திருந்தால், இந்தப் பழங்களில் நெய், சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும். பகலில் பெண்கள் தேகசம்பந்தங் கூடாது.
*****
2. பொது விதி
1. ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற் கொருதரம், வெள்ளைக் காக்கட்டான் முதலானவைகளால் விரேசனம்16
வாங்கிக் கொள்ளுதல்.
2. நாலு மாதத்திற்கு ஒரு தரம், மருக்காரை முதலியவைகளால் வமனத்திற்கு17 வாங்கிக் கொள்ளல்.
3. ஒரு வருடத்திற்கு ஒருதரம், முள்ளி முதலானவைகளால் நசியஞ்18 செய்து கொள்ளல்.
4. நாலு நாளைக்கு ஒருதரம்,அத்தி முதலிய வஸ்துக்களால் செய்வகைப்படி செய்த மைகளால் கண்ணுக்கு அஞ்சனந்
தீட்டல்.
5. ஒரு பக்ஷம் அல்லது ஒரு வார வட்டத்திற்கு ஒருதரம், சாவதானமாக நல்ல நினைப்போடு தன் வசத்திலிருந்து,
மூச்சு அதிர்ந்து மேலிடாது, மெல்லெனப் பெண்போகம் செய்தல். இது விருத்தர்களுக்கு விதித்ததல்ல.
6. வாரவட்டம் அல்லது நாலு தினத்திற் கொருதரம், முலைப்பால், பொன்னாங்கண்ணி முதலிய தயிலமிட்டுக்
கொண்டு, செம்பாகமான வெந்நீரில், மெல்லென முழுகல்.
*****
3. சிறப்பு விதி
1. நித்தியம் சூரியோதயமாக 5 நாழிகைக்கு19 முன்னே நித்திரை நீங்கி எழுந்திருத்தல்.
2. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.
3. அங்ஙனம் எழுந்து, சிறிதுந் தாமதியாமல், மௌனமாகச் சிறிது தூரம் நடந்து, எவ்விடத்தில் மலசலவுபாதி
நேரிடுகிறதோ, அவ்விடத்தில் அப்பொழுதே ஒன்றுஞ் சேஷ்டையில்லாமல் விரைவில்லாமல் இருந்து அறவிடுதல்.
4. பொற்றலைக்கையாந்தகரை, கரிசலாங்கண்ணி – இவைகளில் ஒன்று கொண்டு உள்ளே சிறிது சாரம் போகவும்
கபநீர் பித்தநீர் வெளியாகவும் தந்தசுத்தி செய்தல்.
5. பின்பு திருநீறு தரித்துக்கொண்டு, ஏகாந்தமாக ஓரிடம் பற்றியிருந்து, சூரியனுதயமாகிற வரையில் கடவுளைத்
தியானஞ் செய்துகொண்டிருத்தல்.
6. உதயந் தொடங்கிச் சுமார் சாம பரியந்தம் தக்க முயற்சியோடு பழகுதல்.
7. காலையில் உண்ணாமல் சுமார் பதினைந்து நாழிகைக்கு உண்ணுதல்.

london swaminathan in Vadalur Year 2018.

8. காலையில் சூரியோதயமானவுடன் தூதுளை, பொன்னாங்கண்ணி, வில்வம், சீந்தில், பொற்றலைக் கையாந்தகரை,
புளியாரை, வல்லாரை, நன்னாரி, கடுக்காய், மிளகு, அறுகம்வேர் – இவைகளில் யாதாயினும்
ஒன்றைப் பசும்பாலிற் சுத்தி செய்து சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரையிற் கலந்தாவது அல்லது
சூரணமாகவாவது பசும்பாலில் அனுபானித்தாவது சிறிது சிறிதாக உண்ணுதல்.
9. சுமார் 15 நாழிகைக்கு உண்ணத் தொடங்கும்போது, முன்புசித்த போசன முழுதுஞ் ஜீரணித்ததை நன்றா யூன்றி
யறிந்து, பின்பு ஜீரணித்த அக்கணமே விருப்பால் ஏறாமலும் வெறுப்பால் குறையாமலும் தராசு முனைபோல்
அளவறிந்து, அந்த அளவின்படி, அதிக விரைவும் அதிக தாமதமு மில்லாதபடி சமமாகப் புசித்தல்.
10. புசிப்பில் பச்சரிசிச் சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, முள்ளி, தூதுளை முதலிய இளங்காய்.
பொன்னாங்கண்ணி, தூதுளை முதலிய இளங்கீரை – இவைகளில் மிளகு ஒருபங்கு, சீரகம் காலே அரைக்காற்
பங்கு, வெந்தயம் காற்பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்க்கப்பட்ட கறியமுது
குழம்பு ரசம் முதலானவைகளைக்கொண்டு, பெருங்காயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலானவைகளைத்
தள்ளிப் புசித்தல்.
வெற்றிலை போடுதல் பல் துலக்கம்ல் பற்றிய விஷயங்களை வள்ளலார்.ஆர்க் இணைய தளத்திலிருந்து அறிக.
மேலே கூறியவற்றில் மூலிகைகளின் பெயர்களை நான் தடித்த எழுத்தில் காட்டியுள்ளேன். அவற்றிலிருந்து வள்ளலார் வலியுறுத்தும் முக்கிய மூலிகைகள் எவை என்பதையும் அறியலாம்.
****
ராமலிங்க சுவாமிகள்
Tamil and Vedas
https://tamilandvedas.com › tag
25 Mar 2018 — வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சுத்த சன்மார்கத்தைப் பரப்பினார். … அங்கே வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை வருணிக்கும் பெரிய
—subham—
Tags-வள்ளலாரும் மூலிகைகளும், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-9 வள்ளலார், மூலிகைகள்