Post No. 14,095
Date uploaded in Sydney, Australia – –15 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டன், இந்தியா, ஆஸ்திரேலியாவிலிருந்து 12-1-2025 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
ஸ்வாமி விவேகானந்தர் – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
இன்று ஸ்வாமி விவேகானந்தர் அவதரித்த நன்னாளாகும். பாரதத்தை எழுச்சி பெறச் செய்து புகழோங்கிய பண்டைய பெருமை மிக்க நாட்களை மீண்டும் அடைய விதை ஊன்றிய அவரைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.
எவ்வளவு நாள் உனக்காகக் காத்திருந்தேன்!
1881ஆம் வருடம் நவம்பர் மாதம். முதன் முதலாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரை விவேகானந்தர் தக்ஷிணேஸ்வரத்தில் சந்தித்தார். கங்கையைப் பார்த்திருந்த மேற்குப் பக்க வாயில் வழியே விவேகானந்தர் நுழைந்தார். ஒரு பாடலைப் பாடினார். அவ்வளவு தான், பாடல் முடிந்த பிறகு நரேந்திரனின் கையைப் பிடித்து வட புறம் இருந்த வாரந்தாவிற்குச் சென்ற பரமஹம்ஸர் அறைக் கதவை மூடினார், அவர்களை யாரும் பார்க்க முடியாதபடி!
“இவ்வளவு தாமதமாக நீ வந்தது சரியா? உனக்காக எவ்வளவு நாள் காத்திருந்தேன்! உலகியல் சம்பந்தமான வெற்றுப் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காது புளித்துப் போய் விட்டது!“ என்று ஆரம்பித்தவர் அழ ஆரம்பித்தார். பின்னர் அவர் சொன்ன பேருண்மை தான் உலகை அதிசயிக்க வைத்த ஒன்று!
“எனது கடவுளே! எனக்குத் தெரியும். நீங்கள் தான் புராதன ரிஷியான நாராயணரின் அம்சமான நர ரிஷி என்று! இந்த உலகில் மனித குலம் படும் துன்பங்களைத் துடைக்க நீங்கள் அவதாரம் செய்துள்ளீர்கள்” என்றார் பரமஹம்ஸர்.
“இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அப்போது நான் நினைத்தேன் என்று பின்னால் அந்தச் சந்திப்பைப் பற்றிக் கூறினார் அப்போது நரேந்திரனாக இருந்த விவேகானந்தர்! ஆனால் தான் தான் நாராயணர் என்பதை பரமஹம்ஸர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் பின்னர் விவேகானந்தர் இதை உணர்ந்து கொண்டார்.
முதலில் நாராயணர், நர ரிஷியிடம் பூலோகம் போக வேண்டும்; அனைவரின் துயரையும் துடைக்க வேண்டும் என்று கூறிய போது நர ரிஷி பிகு செய்து கொண்டாராம்! போயும் போயும் எதற்காக அங்கே போக வேண்டும் என்று! ஆனால் பூவுலகில் அவதரித்த பின்னர் திரும்பிப் போக வேண்டிய வேளை வந்த போது விவேகானந்தர் பூமியில் அனைவர் படும் துன்பத்தையும் பார்த்து திரும்ப மறுத்து விட்டாராம். இவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்த பின்னரே நான் அங்கு வருவேன் என்றார் அவர்! “பூவுலகில் அனைவரும் முக்தி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பூமிக்கு வர நான் தயார்” என்று வெளிப்படையாகவே ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.
நர நாராயண ரிஷிகளுக்கு மனிதர்களை முக்தி பெற வழிகாட்டுவதில் அவ்வளவு அபார பிரியம்!
பரமஹம்ஸரின் வழி காட்டுதலில் கடலைக் கடந்து அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வமத மாநாட்டிற்குச் சென்றார் ஸ்வாமிஜி.
சூரியனுக்கே சான்றிதழா?!
அமெரிக்காவில் பிரபல பேராசிரியரான ஹென்றி ரைட் ஸ்வாமிஜியுடன் அளவளாவிய சிறிது நேரத்திலேயே அவரது அறிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு வியந்தார். போஸ்டனிலிருந்து 30 மைல் தொலைவில் இருந்த அன்னிக்ஸ்வாம் என்ற இடத்தில் அமைதியான இடத்தில் தம் இல்லத்தில் தங்கி இருந்த அவர் ஸ்வாமிஜையைத் தன்னுடன் தங்குமாறு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ஸ்வாமிஜி அவருடன் இரு நாட்கள் கழித்தார். சர்வமத மஹாசபையில் நிச்சயம் ஸ்வாமிஜி கலந்து கொள்ள வேண்டுமென்ற தன் எண்ணத்தை பேராசிரியர் ரைட் வெளிப்படுத்தினார்.
“அமெரிக்கா உங்களை அறிய வேண்டுமானால் அதைத் தவிர வேறு வழியில்லை” என்று ஆணித்தரமாக உரைத்த பேராசிரியரை நோக்கிய ஸ்வாமிஜி,” அந்த சபையில் கலந்து கொள்வதற்கான அறிமுகக் கடிதமோ, சான்றிதழோ என்னிடம் இல்லையே!“ என்று தயங்கிவாறே கூறினார்
“உங்களுக்குச் சான்றிதழா?! சூரியன் பிரகாசிப்பதற்குச் சான்றிதழ் கேட்பது போல அல்லவா இருக்கும் அது!” என்றார் ரைட்
சூரிய ஒளிக்கே ஒரு சான்றிதழா! மின்மினிகள் அதைத் தர இயலுமா? என்பதை உணர்ந்த பெரும் மேதையாக இருந்தார் ரைட்.
பின்னர் நடந்த சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. ஸ்வாமிஜி 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சர்வமத மகாசபையில் கலந்து கொண்டார்.
இந்தியாவைப் பற்றி அறிய விவேகானந்தரைப் படியுங்கள்!
அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! (Sisters and brothers of America!) என்ற சில சொற்களினாலேயே அமெரிக்கா முழுவதையும் தன் அன்பு வளையத்துக்கு ஆட்படுத்தினார்.
இந்தியாவின் ஆன்மீக சக்தியை உலகெங்கும் அறியச் செய்து உலகப் புகழ் பெற்றார்.
அமெரிக்கர்கள் வியந்த அதிசய புருஷர்!
பிரபல பகுத்தறிவுவாதியும் சொற்பொழிவாளருமான இங்கர்சால் ஸ்வாமிஜியைச் சந்தித்து வியந்து போனார்.
“ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாறைப் பருக விரும்புகிறேன். அதில் என்ன தவறு?” என்று உலோகாயத நோக்கில் அனைத்தையும் அனுபவிப்பதில் என்ன தவறு என்று பூடகமாகக் கேட்ட இங்கர்சாலை நோக்கிப் புன்முறுவல் பூத்த ஸ்வாமிஜி,” அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் கடைசிச் சொட்டு சாறு வரை முழுவதுமாக அருந்த வேண்டும் என்கிறேன் நான்!” என்றார். வேதாந்தம் மூலம் அனைத்தையும் அறிந்து சுவைக்க முடியும் என்ற அவரின் அறிவுரையைக் கேட்ட இங்கர்சால் பெரிதும் மனம் மகிழ்ந்து ஸ்வாமிஜியை மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு வேண்டிக் கொண்டார். அவரது பரந்த மனத்தையும் நோக்கையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்குள்ள மதவாதிகளுக்கு இல்லை என்பது இங்கர்சாலின் கருத்து.
பிரபல தொழிலதிபர் ராக்பெல்லர் ஸ்வாமிஜியைச் சந்தித்தார். சில நிமிடங்களே நீடித்த அந்த சந்திப்பில் அவரை அறக்கட்டளை ஆரம்பிக்குமாறு உத்வேகம் ஊட்டினார் ஸ்வாமிஜி. அவர் வாழ்க்கையே மாறிப் போனது.
.பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது : ஸ்வாமிஜி!
ஜோஸபைன் மக்லியாட் (Josephine MacLeod) ஸ்வாமி விவேகானந்தரின் அணுக்க சிஷ்யைகளுள் ஒருவர். .
பேலூர் மடத்தில் ஒரு நாள் சகோதரி நிவேதிதை விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
மடத்தில் இருந்த ஸ்வாமிஜியின் படுக்கை அறையில் ஜன்னலுக்கு அருகில் ஜோஸபைன் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்வாமிஜி ஜோஸபைனைப் பார்த்துச் சொன்னார்: “நான் நாற்பது வயதைப் பார்க்க மாட்டேன்.” (I shall never see forty)
அப்போது அவருக்கு வயது 39.
ஜோஸபைன் கூறினார்:” ஆனால், ஸ்வாமிஜி, புத்தர் தனது பெரும் பணியை 40இல் ஆரம்பித்து 80 முடிய இருந்து தானே செய்தார்.”
ஸ்வாமிஜி பதில் கூறினார் : “எனது செய்தியை நான் கூறி விட்டேன். நான் போக வேண்டும்.”
“ஏன் போக வேண்டும்?”
“பெரிய மரத்தின் நிழல் சிறிய மரங்களை வளர விடாது. அவர்களுக்கு வழி விட நான் போக வேண்டும்.” (The shadow of a big tree will not let the smaller trees grow up, I must go to make room.)
இதன் பின்னர் ஜோஸபைன் இமயமலை சென்றார். பின்னர் இங்கிலாந்திற்குச் சென்றார்
**