ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 6 (Post .14,103)

Written by London Swaminathan

Post No. 14,103

Date uploaded in Sydney, Australia – 16 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவில் அய்யர் மலை

உலக அதிசயங்கள் பற்றிய நூல்களில் மூன்று அதிசயங்கள் கட்டாயம் இருக்கும்

சிட்னி நகர ஆபரா ஹவுஸ் SYDNEY OPERA HOUSE

ஆஸ்திரேலிய பவளத்திட்டு GREAT BARRIER REEF

ஐயர்ஸ் ராக்AYER’S ROCK or ULURU

இதை பார்க்க எனக்கும் ஆசைதான் ; 2015- ஆம் ஆண்டில் சிட்னிக்கு முதல் தடவை வந்தபோது இதற்கு எப்படிப் போவது? என்று என் சம்பந்திகளிடம் கேட்டேன்; சிரித்துக்கொண்டே அவர் சொன்னார்: முப்பது ஆண்டுகளாக சிட்னியில் வசிக்கிறேன்; நானே அதைப் பார்த்ததில்லை . பிரம்மாண்டமான ஆஸ்திரேலிய கண்டத்தின் நட்ட நடுவில் பாலைவனப்பகுதியில் அது நிற்கிறது அதைப் பார்க்க விமானத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். மேலும் அதைத் தவிர அங்கு காண்பதற்கு வேறு எதுவும் இல்லை என்றார்; அத்தோடு என் ஆசையும் பறந்தோடிப் போயிற்று!

ஆயினும் அதைப்பற்றி அறியும் ஆவல் நீங்கவில்லை; ஆஸ்திரேலிய மியூசியத்துக்குச் சென்று பழங்குடி மக்கள் பிரிவில் அது பற்றிப் பல விஷயங்களை அறிந்தேன் .

சிட்னி நகரிலிருந்து அது மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது;  விமானத்தில் போவதற்கு முப்பது மணி நேரம் ஆகும் .

ஆஸ்திரேலியாவின் மத்தியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட பிரதேசம் காணப்படும் பாலைவனப்பகுதியில் அய்யர் மலை நிற்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்று. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் புனிதச் சின்னம் இது.

வரலாற்று ரீதியிலும், புவியியல் ரீதியிலும் இது ஒரு முக்கியச் சின்னம். பழங்குடி மக்கள் இதை உளூரு ULURU என்று அழைபர். இந்த முறை எனது ஆஸ்திரேலியப் பயணத்தில் ஐயர்ஸ் ராக் எனப்படும் உளூருக்குப் போகமுடியவில்லை. நான் சிட்னி மியூசியத்தில் கண்டதையும், புத்தகத்தில் படித்ததையும் கொண்டு இக்கட்டுரையை வரைகிறேன்.

இமயமலையில் பெரும் பனிநிறைந்த பொட்டை வெளியில் கயிலாயம் தனியாய் நிற்கிறது. அதை நாம் சிவனின் வடிவமாக, உறைவிடமாக வணங்குகிறோம். அதுபோல செந்நிறக் கல வகையாலான ஒற்றைக் கல் இது. சூரிய ஒளியில் கயிலாயம் தகதவென மின்னுவது போல இதுவும் செந்நிறப் பிழம்பாகக் காட்சிதருகிறது. வெய்யிலுக்கு ஏற்ப இதன் நிறமும் மாறுகிறது. இதன் உயரம் 1115 அடி; சுற்றளவு ஆறு மைல். தென் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த ஹென்றி அய்யர்ஸ் HENRY AYERS  என்பவரின் பெயரை வெள்ளைக்காரகள் இம்மலைக்குச் சூட்டி ஆக்ரமித்தார்கள். ஆயினும் பழங்குடி மக்களின் உரிமை வலுக்கவே 1985 ஆம் ஆண்டில் இம்மலையை, ஆஸ்திரேலிய அரசு, பழங்குடி மக்களிடம் ஒப்படைத்தது, பின்னர் 99 ஆண்டு குத்தகைக்கு  எடுத்துள்ளது. இன்று இது பெரிய சுற்றுலாத் தலம். ஆயினும் எளிதில் போக முடியாது. பக்கத்திலுள்ள அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் ஊரே 450 மைல் தொலைவில் இருக்கிறது. விமானத்தில்தான் செல்ல முடியும்..

மலையைச் சுற்றி 60 கதைகள்

இந்த மலையைச் சுற்றி 60 கதைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் எல்லா பழங்குடி மக்களின் பாதைகளும் இங்கு சங்கமிக்கின்றன. பாறையின் ஒவ்வொரு முகட்டும் ஒரு கதை சொல்லும். வேதகால மக்கள் எப்படி வாய்மொழியாக வேதங்களைப் பாதுகாத்தார்களோ, அது போலப் பழங்குடி மக்களும் பாடல் வடிவில் பல கதைகளைப் பாதுகாத்துப்  பாடிவருகிறார்கள். எல்லாம் பாம்பு, பல்லி தொடர்பான கதைகளாக இருக்கும். குனியா, வன்னாபி, வானவில் பாம்பு. விஷம், ,மலைப்பாம்பு என்று பல வகைகள். ஒவ்வொன்றும் அந்தந்த இன மக்களைக் குறிக்கும்.

இந்த அய்யர் மலையில் பல பழங்கால வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. 30 மைல் தொலைவில் கட தூஜா என்னும் இடமிருக்கிறது இது பெண்களுக்கு புனிதமான இடம். தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் உடலமைப்புபோலத் தோன்றும். நாம் சதி என்னும் பார்வதி தேவி தட்ச யக்ஞத்துக்குப் பின்னர் கோபமடைந்து தனது உடலை எரித்தபோது அதன் பகுதிகள் விழுந்த இடமெல்லாம் எப்படி சக்தித் தலங்கள் ஆனதாக நம்புகிறோமோ அதே போலப் பழங்குடி மக்களும் புனிதமான பெண்ணின் உடல் என்று நம்புகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் படைப்புக் கதைகள் பழங்குடி மக்களின் புராணத்துக்கு அடிப்படையாக அமைகிறது. இதைக் கனவுநேரம் என்று அவர்கள் மொழியில் சொல்லுவர். நாம் திருமால், பாற்கடலில் பள்ளிகொண்டு அறிதுயில் செய்கிறார் என்பது போல இது. இந்தப் படைப்புக்காலத்தில் இரண்டு பையன்கள் , உளூரு மலையை உருவாக்கியதாக அவர்கள் கதைகள் சொல்லுகின்றனர். மேலும் குனியா என்னும் மலைப்பாம்பு மக்களை நீரு என்னும் விஷப் பாம்பு ஆட்கள் தாக்கியபோது படைப்புகாலம் முடிவுக்கு வந்தது என்பர்.

அவர்கள் புராணப்படி, முன்னோர்களின் ஆவிகள் இந்த உலகைப் படைத்ததாகவும், அவர்கள் பல இடங்களுக்கும் சென்று பெயர் சூட்டியதாகவும் அவை பாடல் வடிவில் உள்ளன என்றும் சொல்லபடுகிறது. இந்த விஷயங்களை, சமயத் தலைவர்கள் மட்டுமே அறிவர் என்பர். இது நமது வேதப் பாடல்களை ரிஷிகள் மட்டுமே “கேட்க” (சுருதி) முடியும் என்பதைப் போல. ஒரு பழங்குடி இனத் தலைவருடன் பயணம் செய்தால் அவர், ஒவ்வொரு முக்கிய இடத்துக்கும் அழைத்துச் சென்று அது தொடர்பான பாடல்களைப் பாடிக் கொண்டேயிருப்பார்.

மற்றொரு கதை குனியாவும் மாலாவும், ஒரு முக்கிய சடங்கிற்கு குறித்த காலத்தில் வராததால், விண்டுல்கா என்னும் மேற்குப்பகுதி மக்கள் கோபமடைந்ததாகவும் பின்னர் பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறது

எனது கணிப்பு

பழங்குடி மக்கள் பாம்பின் பெயரில் மக்களை அழைப்பதைப் பார்க்கையில் இவர்களும் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த நாகா இன மக்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் – பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் நடத்தி பாம்புகளைக் (நாகா இன மக்களை) கொன்றதையும், பின்னர் இருவருக்கும் உறவினரான ஆஸ்தீக மகரிஷி சமாதான உடன்படிக்கை செய்து கொடுத்ததையும் இந்த பல்லாயிரமாண்டு வரலாற்றை பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில் சொல்லிவருவதையும் முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விரிவாக எழுடியுள்ளேன் ( மாயா இன மக்கள் இந்திய நாகர்களா – என்ற கட்டுரையில் விவரம் காண்க) ).

பின்னர் மய தானவன் என்ற ஒரே ஒரு நாகர் இன மனிதன் மட்டும் அர்ஜுனனின் உதவியைப் பெற்றதையும் நமது புராணங்கள் விளக்குகின்றன. இவனது தலைமையில் பாதாள லோகத்துக்கு (தென் அமெரிக்கா) சென்றவர்களே மய= மாயா நாகரீகத்தைத் துவக்கினர். எகிப்தின் முதல் மன்னன் மனு, மாயா இன முதல் மன்னன் ஆகிய அனைவரும் கலியுக முதல் ஆண்டான கி.மு.3102-ல் ஆட்சி துவக்கியதாக அந்தந்த நாட்டு வரலாறு சொல்வதும், ஆஸ்தீக மகரிஷி பெயரில் அஸ்டெக் நாகரீகமிருப்பதும் இவைகளௌக்கு மேலும் சான்று பகரும். இதே போல ஆஸ்திரேலியாவிலும் நாகர்களே சென்று ஆட்சி அமைத்ததால் எல்லாம் பாம்பின் பெயரில் அமைந்துள்ளன. பல்வேறு காலத்தில் – 40,000 ஆண்டுகளில் — பல நாகா அணிகள் சென்றதால், கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கலாம்.

 மாயா, ஆஸ்திரேலியப் பழங்குடிகள், எகிப்திய மன்னர்கள் ஆகியோருடன் வேறு பல ஒற்றுமைகளும் நிலவுவதை தனித் தனி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன். அதன் பிண்ணனியில் நான் கூறுவதை வைத்துப் பார்த்தால் நான் எதையும் மிகைப்படுத்தவில்லை என்பது விளங்கும்.

இந்துக்களுக்கு கன்யாகுமரிக்குக் கீழே 7 பாதாள லோகங்கள் இருப்பது நன்கு தெரியும். கடலில் சென்று அடையும் எல்லா தீவுகளையும் நாகர் தீவு என்றும் அங்குள்ள பெண்கள் நாக கன்னிகைகள் என்றும் சொல்லி வந்தனர். பல்லவர் வரலாறு, மணிமேகலையில் சோழர் வரலாறு முதலியவற்றிலும் இதைக் காணலாம்.

ஆஸ்திரேலியாவில் முதல் முதலில் குற்றவாளிகளை மட்டுமே குடியமர்த்தி வந்தனர். இதே போல வாமனாவதாரத்திடம் தோற்றுப் போன மஹா பலி சக்ரவர்த்தியையும் தென் அமெரிக்கவுக்கு நாடு கடத்தி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திரும்பிவரலாம் என்று பணித்தனர். அப்படி வந்த நாளையே இன்று வரை மலையாளிகள் ஓணம் என்று கொண்டாடிவருகின்றனர். இதுபோலவே, வேத முறைகளைக் கைவிட்ட விஸ்வாமித்திரரின் மகன்களை தெற்கே அனுப்பி அவர்கள் திராவிடர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் புரணங்கள் கூறும். ராம லெட்சுமணர், பஞ்ச பாண்டவர்கள் கூட 14 ஆண்டுகளும், 13 ஆண்டுகளும் வனவாசத்தில் தெற்கு வரை வந்து சென்றனர்.

அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, ரசாதல, பாதாள என்பதெல்லாம் பிற்காலத்தில் பல பெயர்கள் ஏற்படக் காரணமாயீற்று. அதல என்பதிலிருந்தே, அடலாண்டிக் மஹாசமுத்திரம் என்றும் சுதல என்பதிலிருந்தே சவுத் (தென் திசை என்பதும் ) வந்தன. கபிலாரண்யா என்பதே, அமெரிக்காவின் கலிபோர்னியா என மருவியது என்றும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.

-சுபம்-

Tags- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 6, அய்யர் மலை, AYER’S ROCK , ULURU , ஹென்றி ஐயர்ஸ் ராக், HENRY AYERS  ,உளூரு

Leave a comment

Leave a comment