
Post No. 14,100
Date uploaded in Sydney, Australia – –16 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டன், இந்தியா, ஆஸ்திரேலியாவிலிருந்து 12-1-2025 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
39 வயதிலேயே பிரம்மாண்டமான சாதனையை உலக அரங்கில் நிறைவேற்றி முடித்த ஸ்வாமிஜி, “‘மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது, இப்போதைக்கு இது போதும்’, என்று முடிவு செய்து தங்கள் இருப்பிடம் சென்று விட முடிவு செய்து விட்டார்.
1906ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி ஏகாதசி தினம். அன்று அவர் விரதம் இருந்தார். மார்கரெட் எலிசபத் நோபிளாக அயர்லாந்தில் பிறந்து ஸ்வாமிஜியின் கருணை நோக்கினால் சகோதரி நிவேதிதையாக மாறிய ஆன்மீகச் செல்வி அங்கு வந்த போது ஸ்வாமிஜி அவருக்கு உணவு வகைகளைப் பரிமாறி சாப்பிடுமாறு உபசரித்தார். சாப்பிட்டு முடித்தவுடன் கை கழுவ தாமே நீர் வார்த்தார். “ஸ்வாமிஜி, இதை நான் அல்லவா உங்களுக்குச் செய்ய வேண்டும்” என்று நெஞ்சுருக நிவேதிதை கூற, “ஏன் ஏசுநாதர் தன் சீடர்களின் கால்களையே கழுவி விட்டாரே!” என்று அவர் பதில் அளித்தார்.
“ஆனால், அது. அது.. அவரின் கடைசி தினமாயிற்றே..!!” தொண்டையில் சிக்கித் திணறிய வார்த்தைகள் நிவேதிதையின் வாய்க்கு வரவில்லை.
அதற்குச் சில நாட்களுக்கு முன்பே ஸ்வாமிஜி பஞ்சாங்கம் ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி நாளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அது எதற்கு என்று யாருக்கும் தெரியாது.
தன் யாத்திரையின், அவதார தினத்தின் இறுதி நாளை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அது 1902ம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி.
அமெரிக்காவிற்கும் தனக்கு உள்ள ஆன்மிகத் தொடர்பின் அழியாத முத்திரையைப் பதிக்க விரும்பிய வீரத் துறவி தேர்ந்தெடுத்த தினம் அமெரிக்க சுதந்திர தினப் பொன்னாள். என்று வரை அமெரிக்கர்கள் அந்தப் பொன்னாளில் சுதந்திர தினம் கொண்டாடுகிறார்களோ அன்று வரை அவரின் நினைவும் அதில் பூரணமாக்க் கலந்திருக்கும்.
அன்று இரவு சுமார் ஒன்பது மணி அளவில் யோக மார்க்கம் மூலமாக சிரசின் வழியே தன் உயிரைத் துறந்து பர வெளியுடன் கலந்தார் ஸ்வாமிஜி.

விவேகானந்தர் இந்தியா பற்றிக் கூறியது!
இந்தப் பூவுலகில் புனிதமான புண்யபூமி என்று உரிமை கொண்டாட ஒரு நாடு இருக்குமானால், மனிதகுலம் தம் கர்மபலன்களைக் கழிக்க வந்து சேர வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனித ஆன்மாக்களில் ஒவ்வொன்றும் இறைவனை அடைய வேண்டி தனது இறுதி வீடாக வந்து அடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனித குலம் பரந்த உள்ளத்தின் உச்சநிலையை, தூய்மையின் எல்லையை அமைதியை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் எல்லாவற்றிற்கும் மேலாக உள்முகமாகத் திரும்பிய, ஆன்மீகத்தைக் கொண்ட நாடு என்று ஒன்று இருக்குமானால் அது தான் இந்தியா ஆகும்
விவேகானந்தர் ஒரு ஹிந்து எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிக் கூறியது!

நான் கூறுவதைக் கவனத்தில் கொள்ளுங்கள்! ஹிந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதருக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே தான், நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
விவேகானந்தர் தன்னைப் பற்றித் தனது கடைசி நாளில் கூறியது!
விவேகானந்தர் என்ன செய்தார் என்பதை இன்னொரு விவேகானந்தரால் தான் புரிந்து கொள்ள முடியும். இன்னும் காலப்போக்கில் எத்தனை விவேகானந்தர்கள் தோன்றப் போகிறார்கள்?!!!
விவேகானந்தர் எதிர்கால இந்தியா பற்றிக் கூறியது!
நான் எதிர்காலத்தின் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் பிரத்யக்ஷமாக தெளிவாக நான் காண்கிறேன். நமது புராதன அன்னையானவள் மீண்டும் எழுந்து விட்டாள் என்பதையும் அவள் தனது எழுச்சி பெற்ற சிம்மாசனத்தில் இன்னும் அதிகப் புகழுடன் மீண்டும் அமர்கிறாள் என்பதையும் நான் காண்கிறேன்.

எழுமின் விழிமின்
‘எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின்’ என்ற கடோபநிஷத்தின் வாக்கியத்தை லட்சியமாகக் கொடுத்து ‘அனைவருக்கும் முக்தி’ என்ற லட்சியத்தை உலக மக்களின் முன் வைத்தார் ஸ்வாமிஜி.
“உலக மாந்தர் அனைவரும் முக்தி அடைய உதவுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நான் பூமியில் பிறக்கத் தயார்” என்று அறிவித்த அவரது அமிர்த வாக்கியம் மனிதர்களின் உள்ளங்களை எல்லாம் பூரிக்க வைக்கும் கருணை வெள்ளத்தின் அடையாளம் அல்லவா!
ஸ்வாமிஜியின் நினைவை அனுதினமும் போற்றி அவர் காட்டிய வழியில் நடப்போம்! நன்றி வணக்கம்!
***