
Post No. 14,106
Date uploaded in Sydney, Australia – 17 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-11
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்—என்ற ராமலிங்க சுவாமிகள் பாடல் மிகவும் பிரசித்தமானது; பள்ளிக்கூடப் பாடப் புஸ்தகங்களிலும் இடம்பெற்றறது; மேலும் பல பாகவதர்களாலும் பாடப்பெற்றுள்ளது ஆயினும் இந்தப்பாடல் முழுவதையும் படித்தால்தான் உண்மைப்பொருள் விளங்கும். வள்ளலார் பெருமான் நிறைய விஷயங்களை வேண்டுகிறார் . இந்தப்பாடலில் பதினோரு செய்யுட்கள் உள்ளன. முக்கியப்பகுதிகளைக் காண்போம்; வள்ளலாரின் உண்மைக் கருத்தினை அறிவோம்.
திரு அருட்பா ஆறாம் திருமுறை /
021. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்- வள்ளலார்
பிழை பொறுத்தல் என்பதை மாணிக்கவாசகர், அப்பர் முதல் தேவராய சுவாமிகள் வரை எல்லோரும் சொல்லி வேண்டுகின்றனர். ஆகையால் பெரியோர்களும் பிழை செய்ததை, செய்வதை ஒப்புக்கொள்கின்றனர் அல்லது நம்மைப் போன்ற சாதாரணமக்களுக்காக அந்த வாசகத்தையும் சேர்த்தனர் என்றும் கொள்ளலாம்
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே (வெற்றி வேற்கை)
****
தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்
***
பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி
—மாணிக்கவாசகர் திருவாசகம்
***
பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே—- அப்பர்
****
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே
—– பட்டினத்தார்
****
அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை
அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே
________
பிழையே பொறுத்து இருதாளிலுற்ற
பெரு வாழ்வு பற்ற அருள்வாயே
——— அருணகிரிநாதரின் திருப்புகழ்
****
பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை
மாயிருங்கரத்தால் மண்மேல் அடியுறையாக வைத்து
தீயன சிறியோர் செய்தல் பொறுப்பது பெரியோர் செய்கை
ஆயிரநாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்– கம்பராமாயணம்
பொருள்
பரந்த இருளை ஒழிக்க வல்ல தெய்வத் தன்மை கொண்ட கதிரவனையும் தன் ஒளியால் மட் டம்தட்டும் பிரகாசம் உடைய ஒரு மாலையை தன் கைகளால் எடுத்துவந்து தரைமீது காணிக்கைப் பொருளாக வைத்துச் “சிறியவர் தீயவை செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்வதே பெரியோர் செயலாகும்”, ஆயிரம் பெயர்களை உடைய ஐயனே! அடைக்கலம்! என்று ராமனின் அடிகளில் வீழ்ந்தான் வருணன்.
****

ராமலிங்க சுவாமிகளின் திரு அருட்பாவைத் தொடர்ந்து காண்போம்
2. ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
இதில் ஐயா என்று தொடங்குகிறார்; பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்—-
வாய்மையே பேசுதல் வேண்டும் – வள்ளுவர் முதல் மஹாத்மா காந்தி வரை சொன்னதுதான். வேதத்தில் முதல் பாடம் சத்யம் வத — வாய்மையே பேசு என்பதாகும்; முண்டகோபநிஷத்தில் உள்ள சத்யமேவ ஜயதே என்ற வாசகம்தான் இந்திய அரசின் சின்னத்திலும் தமிழ்நாடு அரசின் சின்னத்திலும் உளது ; உலகிலேயே சத்யத்துக்கு மதிப்பு கொடுக்கும் நாடு பாரதம் மட்டுமே; பெண்கள் பெயர்களிலும் ஆண்கள் பெயர்களிலும் சத்யம் தழைக்கும் நாடு (சத்யா; சத்யா மூர்த்தி ; சத்ய வாகீஸ்வரன் முதலியன) இதில் புதுமை இல்லை . ஆயினும் ராமலிங்க சுவாமிகள் சொல்லும் ஒரு வினோத கோரிக்கை —
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்.
இதன் பொருள் என்ன ? ராமலிங்கர் இதை உண்மையென நம்பினாரா ? கிருஷ்ணர், சிவ பெருமான், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் இறந்தோரை மீட்டு வந்ததை நாம் மஹாபாரதம் , நம்மாழ்வார் பாடல், பெரிய புராணம், தேவாரம் ஆகியவற்றிலிருந்து அறிகிறோம் . மேலை நாட்டில் ஏசுகிறிஸ்துவும் இப்படிச் செய்தார். வள்ளலாரே சம்பந்தர், ஆண்டாள் போல ஜோதி மயமாக மறைந்தார்! ஆகையால் ராமலிங்கரும் இறந்தோரை உயிர்ப்பிக்க முடியும் என்றே நம்பினார்; இதை ஒப்புக் கொள்ள முடியாதோருக்கு இன்னும் ஒரு விளக்கமும் உண்டு; செத்தாரைப் போல திரியும் ஜீவன்களை மீட்டு எடுக்க வேண்டும் என்பதாகும்.
3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
மூன்றாவது பாடல் அண்ணா என்று துவங்குகிறது ; கண்ணனைப் பாரதியார் பல உறவு முறைகளில் அழைத்தார்; அதைப்போன்றது இந்தப்பாடல் ..
இதில் மீண்டுமொரு வினோத வேண்டுகோள் வருகிறது. அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்!
தான் ஆண்டாள், சம்பந்தர், சங்கரர்,தான்சேன் போல மாயமாய் மறைவதை முன்னரே அறிந்து இப்படிப் பாடினார் என்று பொருள் கொள்ளலாம் . இந்து மதத்தில் பல பெரியோர்கள் இப்படி மாயமாய் மறைந்து ஜோதியில் கலந்ததை நாம் புராண இதிகாசங்களில் படிக்கிறோம். இது கோடிப்பேரில் ஒருவருக்கு கிட்டும் பாக்கியம்; அதனால்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் சமய புஸ்தகங்களில் இடம் பெறுகிறது ; எல்லோருக்கும் கிடைக்கும் பாக்கியம் அல்ல.

4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
நாலாவது பாடலிலும் பழைய வேண்டுதல்களையே வலியுறுத்துகிறார் .
அடுத்த கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.
TO BE CONTINUED………………………….
—SUBHAM—
TAGS -அப்பா நான் வேண்டுதல் கேட்டு , அருள் புரிதல் வேண்டும், வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-11