அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-12 (Post.14,111)

Written by London Swaminathan

Post No. 14,111

Date uploaded in Sydney, Australia – 18 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும் – என்று துவங்கும்  ராமலிங்க சுவாமிகளின் பாடலைத் தொடர்ந்து ஆராய்வோம் .

ஐந்தாவது பாடலில் மூன்றாவது முறையாக இறந்து போனவர்களை உயிர்ப்பிக்கும் சக்தியை வள்ளலார் வேண்டுகிறார்; வள்ளுவர் போல வள்ளலாரும் கொல்லாமையை வலியுறுத்துகிறார்

வள்ளுவரையும் வள்ளலாரையும் பற்றிப்  பேசுவதற்கு வெஜிட்டேரியன் களுக்கு மட்டுமே உரிமை உள்ளது ; ஏனையோர் பாசாங்கு செய்யும், தன்னைத்தானே ஏமாற்றி உலகையும் ஏமாற்றும், கடையவர்கள் என்பதில் ஐயமில்லை.

5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்

வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்

மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்

புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்

பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்

உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

*****

6. அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்

துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்

சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்

படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்

படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்

ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்

ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

ஆறாவது பாடலில் தான் உருவாக்கிய சுத்த சிவ சன்மார்க்கத்தைப் பரப்பும் சக்தியை வள்ளலார் வேண்டுகிறார் ; சித்தர்களைப் போல படைக்கும் சக்தியையும் வேண்டுகிறார் .

பாம்பாட்டிச் சித்தர் பாடலின் தாக்கத்தினை இந்தச் செய்யுளில்  காணலாம் ; சொற்களில் கூட ஒற்றுமை இருப்பதால் அந்த சித்தர் பாடலினை எதிரொலிக்கும் பாடல் இது என்பதில் ஐயமில்லை ;இதோ அந்த சித்தர் பாடல் :

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம்

செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்

இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்

எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே.

32:

வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம்

வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்

நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம்

நாங்கள் செய்யும் செய்கையிதென் றாடு பாம்பே.

33:

அறுபத்து நாலுகலை யாவு மறிந்தோம்

அதற்குமே லொருகலை யான தறிந்தோம்

மறுபற்றுச் சற்றுமில்லா மனமு முடையோம்

மன்னனே யாசானென் றாடு பாம்பே.

34:

சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச்

சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம்

வீறுபெருங் கடவுளை எங்களுடனே

விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே.– பாம்பாட்டிச் சித்தர்

*****

7. அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்

இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்

எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்

தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.

ஏழாவது பாடலில் தாயைக் குறிப்பிடுகிறார் ; அம்மா என்று ஜெகன் மாதாவை, ஜகஜ்ஜனனியை அழைத்து தீய குணங்களை மாய்க்க   வேண்டுகிறார் வள்ளலார்.

*****

8. அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்

எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்

இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்

உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.

எட்டாவது பாடலில் யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் கருத்தினைப் பார்க்கிறோம்.

****

9. அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்

செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்

சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்

எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்

எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்

பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்

பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.

ஒன்பதாவது பாடலில் மீண்டும் பாம்பாட்டிச் சித்தரின் கருத்தினை வள்ளலார் எதிரொலிக்கிறார் அபூர்வ சக்திகளை வேண்டுகிறார்.

****

10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்

மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான

மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்

இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்

திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்

பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்

புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.

பத்தாவது பாடலில் திருமூலர் மற்றும் பராதியாரைப் போல உலகம் முழுதும் வாழ வேண்டும்லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்று வள்ளலார் கூறுகிறார்.

*****

11. அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்

எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்

எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்

கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்

காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்

விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்

விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.

கடைசியாக வரும் பதினோராவது பாடலில் எல்லாம் செய்யும் திறனோடு சன்மார்க்கத்தைப் பரப்பும் சக்தியை வேண்டுகிறார். வள்ளலாரது கோரிக்கைகளில் சன்மார்க்கக் கோரிக்கை நிறைவேறியது என்றே சொல்ல வேண்டும்; இன்று நாம் எல்லோரும் வள்ளலாரைப் பற்றியும் சன்மார்க்கம் பற்றியும் பேசுகிறோம்; பாடுகிறோம்; போற்றுகிறோம்.

—SUBHAM—

Tags- அரசே,  அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்; வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-12

Leave a comment

Leave a comment