Post No. 14,116
Date uploaded in Sydney, Australia – 19 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நால்வர்க்கு போடும் பெரிய கும்பிடு! வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-13
மாணிக்கவாசகரையும் திருவாசகத்தையும் புகழ்ந்து, ராமலிங்க சுவாமிகள் பாடியதை பலரும் அறிவார்கள் ஆனால் சைவப் பெரியார் நால்வரையும் பாடிய வள்ளலாரின் பாடலில் அது கடைசி செய்யுள் என்பது பலருக்கும் தெரியாது .
சம்பந்தர், அப்பர் ,சுந்தரர் மாணிக்கவாசகர் என்ற வரிசைக்கிரமத்தில் வள்ளலார் பாடிய திருவருட்பா பாடலை ஆராய்வோம். சைவம் தழைக்க வந்த தமிழ் நால்வருக்கும் வள்ளலார் ஒரு பெரிய கும்பிடு போடுகிறார்.
****
ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை
இது திருவருட்பாவில் நான்காம் திருமுறையில் இடம்பெறுகிறது
இதில் , முதலில் கவுண்டின்ய கோத்திரத்தில் பிறந்த சீர்காழி (சம்பை) திகழ்விளக்கே என்று சம்பந்தரைப் போற்றுகிறார் ..
சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.—
திருவருட்பா நான்காம் திருமுறை .
****
அப்பருக்கும் அப்பூதி அடிகளுக்கும் கும்பிடு
010. ஆளுடைய அரசுகள் அருண்மாலை என்ற பாடலில் அப்பூதி அடிகள், அப்பர் ஆகியோரைப் போற்றுகிறார் .
1. திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
கடலேநின் கழல்கருதக் கருது வாயே.
2. வாய்மையிலாச் சமணர்தர் பலகாற் செய்த
வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
சேம்மைவிடா தணிமைவிடத் தாள வந்த
செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.
9. அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
அவதரித்த மணியெசொல் லரசே ஞானத்
தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.
10. தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.
****
சுந்தரருக்கு கும்பிடு
ஆளுடைய நம்பிகள் அருண்மாலை என்று தலைப்பிட்ட திருவருட்பா பாடலில் சுந்தரரைப் போற்றுகிறார்.
5. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
6. வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
7. தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
10. பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே —
என்று சொல்லி அந்தப் பாடலை முடிக்கிறார் வள்ளலார்
*****
மாணிக்கவாசகருக்கு கும்பிடு
இதையடுத்துவரும் 012. ஆளுடைய அடிகள் அருண்மாலை என்ற பாடலில் மாணிக்கவாசகரைப் போற்றுகிறார்.
ஆளுடைய நம்பிகள் அருண்மாலை
012. ஆளுடைய அடிகள் அருண்மாலை
1. தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
2. கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி
உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.
3. மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க
அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
4. உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
இருஎன்ற தனிஅகவல் எண்ணம்எனக் கியம்புதியே.
5. தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
6. சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
7. வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
8. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.
9. பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .
10. வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.
நால்வர் பற்றி ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்களில் தேவார,திருவாசக வரிகள் வருவதைக் கண்டு, படித்து, ருசித்து, பேரின்பம் அடையலாம்.
—subham—Tags- திருவருட்பா, நால்வர், சம்பந்தர் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருவாசகம், தேவாரம் ,வள்ளலார் , கும்பிடு, வள்ளலார் ,ஆராய்ச்சிக் கட்டுரை-13