WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14,119
Date uploaded in Sydney, Australia — 20 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
19-1-2025 ஞாயிறன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை
அயோத்தி
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹந்நாயகி சத்யநாராயணன்.
ஜெய் ஶ்ரீ ராம்!
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரி த்வாராவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயிகாஹா
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது ஶ்ரீ ராமர் அவதரித்த உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள புண்யத் திருத்தலமான அயோத்யா தலமாகும்.
இது லக்னோவிலிருந்து 135 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அயோத்யா மாநகரத்தை விமானம் மூலமாகவும் ரயில் மூலமாகவும் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து மூலமாகவும் அடையலாம்.
;
பண்டைய கோசல நாட்டின் தலை நகரம் அயோத்யா. சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்.
த்ரேதா யுகத்திலிருந்து லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் மிகப் பழமையான நகர் இது.
இங்கு அமைந்துள்ள ராம ஜன்ம பூமி மந்திர் என்று கொண்டாடப்படும் திருக்கோவில் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.
பாலக் ராம் இங்கு பிரதிஷ்டை செய்யப்படுள்ளார். முதல் ஆறு மாதத்திலேயே பதினோரு கோடி பேர் இங்கு வந்து ராமரை தரிசித்தனர்.
அயோத்தி மாநகரத்தைப் பற்றி வால்மீகி ராமாயணமும் இதர ராமாயணங்களும் புராணங்களும் அற்புதமாக விவரிக்கின்றன.
அயோத்தி மாநகரை வர்ணிக்க வந்த கம்பன் அங்கு வண்மை எனப்படும் வள்ளல் தன்மை இல்லை என்கிறான். ஏன்? அங்கு; வறுமையே இல்லை. ஆகவே எதையும் தானமாக வாங்குவதற்கு அங்கு யாரும் இல்லை.
அங்கு திண்மை எனப்படும் வீர பராக்கிரமம் இல்லை. ஏன்? ஏனெனில் அயோத்தியை எதிர்க்க யாருமே இல்லை, அதனால்!
அங்கு உண்மை இல்லை. ஏன்? ஏனெனில் யாருமே பொய் சொல்வதில்லை. பொய் என்று ஒன்ரு இருந்தால் தானே உண்மை என்ற வார்த்தை வரும்.
அங்கு ஒண்மை எனப்படும் அறிவே இல்லையாம். ஏனெனில் அனைவரும் கற்றவர் என்பதால் அந்த வார்த்தைக்கு அங்கு அர்த்தமே இல்லையாம்.
இங்கு தான் ஶ்ரீ ராமர் அவதரித்தார்.
இக்ஷ்வாகு குல மன்னனான தசரத மகாராஜன் தனக்கு புத்திரர் வேண்டுமென்பதற்காக புத்ரகாமேஷ்டி யக்ஞத்தை மேற்கொள்ள கௌஸல்யா, சுமித்திரா, கைகேயி என்ற மூன்று மனைவிகள் மூலம் ராமர், பரதர், லக்ஷ்மணர்,மற்றும் சத்ருக்னர் ஆகிய நான்கு புதல்வர்களைப் பெற்றார். கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக ராமர் பதினான்கு வருடம் காட்டிற்கு சீதை லட்சுமணருடன் செல்ல அங்கு இராவணன் சீதா தேவியை ஆகாயமார்க்கமாக துக்கிச் சென்று இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைத்தான். சீதையைத் தேடிய இராமர், சுக்ரீவனுடன் நட்பு கொண்டு அனுமாரை சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க இலங்கையை நோக்கி அனுப்பி, பின்னர் சேதுவை அமைத்தார். பின்னர் இராவணனை வதம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி மீண்டு, பட்டம் சூட்டி, கோசல நாட்டை ஆள்கிறார். பெருமை மிக்க ராமராஜ்யம் அமைகிறது.
ராம ஜென்ம பூமியில் ராம் மந்திருக்கு அடுத்து ஹனுமான் கர்ஹி ஃபோர்ட் (anuman Garhi Fort) என்ற ஹனுமார் கோவில் அமைந்துள்ளது. இதில் 76 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு தான் ஹனுமார் ஒரு குகையில் வசித்து ராம ஜென்ம பூமியைக் காத்து வந்தாராம். இங்கு சீதாவின் சமையல் கூடாரமும் உள்ளது. சீதா தேவி அயோத்தியில் இருந்த போது அவர் உணவு சமைத்த இடம் இது தான். அனைவரும் இந்த இடங்களைப் பார்ப்பது வழக்கம்,
அயோத்தியின் மேற்குப் பகுதியில் ராம்காட் அமைந்துள்ளது. ராமர் அவதரித்த ராமநவமியன்று இங்கு பக்தர்கள் திரளாகக் கூடுவர்.
ராமருடைய புத்திரரான குசனால் நிறுவப்பட்ட நாகேஸ்வர்நாத் ஆலயம் ஒரு சுவையான வரலாறைக் கொண்டதாகும். ஒரு முறை சரயு நதியில் குசன் குளித்துக் கொண்டிருந்த போது அவனது கங்கணம் நதியில் விழ அதை ஒரு நாக கன்யா கண்டெடுத்து குசனிடம் கொடுக்கிறாள். அவள் ஒரு சிவ பக்தை என்பதால் குசன் அவளுக்கு ஒரு கோவிலை எழுப்புகிறான். இங்கு சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்துக்களின் புனிதத் தலமான அயோத்தியில் 2023 தீபாவளியின் போது பதினைந்து லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி நான்கு தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்ன்ஸ் சாதனையானது. ஆனால் இதை முறியடிக்கும் விதத்தில் 2024ல் இருபத்தியிரண்டு லட்சத்து இருபத்திமூன்றாயிரத்து அறுநூற்றி எழுபத்தாறு விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை உருவானது.
இங்கு கனக் பவன், குப்தர் காட், ராம் கி பைடி, வால்மீகி ராமாயண் பவன் உள்ளிட்ட பல இடங்கள் பார்ப்பதற்கு உள்ளன.
“கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ” என்று நம்மாழ்வார் கற்க வேண்டியது ராமரைப் பற்றி மட்டுமே என்று அழகுற திவ்ய பிரபந்தத்தில் கூறியுள்ளார்.
ராம என்ற இரண்டு எழுத்து நன்மையையும் செல்வத்தையும் தினமும் நல்கும். இதைச் சொல்பவர்க்கு தீய செயலும் பாவமும் சிதைந்து தேயும். ஜென்மமும் மரணமும் இல்லாத முக்தி நிலை கிடைக்கும். இது கம்பனின் வாக்கு.
ராம நாமத்தை ஜபிப்போம் . எல்லா நலன்களையும் பெறுவோம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ ராமபிரானும் சீதாதேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி, வணக்கம்.
ஜெய் ஶ்ரீ ராம்!
–subham–
tags–ஆலயம் அறிவோம், அயோத்தி, ராம ஜன்ம பூமி, மந்திர்