
Post No. 14,120
Date uploaded in Sydney, Australia – 20 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19–ம் தேதி 2025-ம் ஆண்டு
****
(Collected from popular newspapers and edited b me)
முதலில் கும்பமேளா செய்தி!
உலகிலேயே மிகப்பெரிய விழாவான, மகத்தான
கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி துவங்கியது .
உலகையே வியக்க வைக்கும் விழா கும்பமேளா ; 12 ஆண்டுக்கு ஒரு முறை திரிவேணி சங்கமம் என்றும் சங்கம் என்றும் அழைக்கப்படும் பிரயாகையில் நடைபெறும். இந்துக்களின் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்று கங்கா ஸ்நானம் ; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் செங்குட்டுவன் தனது தாயாரை அழைத்துச் சென்று கங்கா ஸ்நானம் செய்வித்தான்.
இரண்டாவது முறை புனித இமய மலையில் கல் எடுத்து புனித கங்கை நதியில் நீராட்டி பத்தினித் தெய்வம் கண்ணகியின் சிலையை வடித்தான் . அப்பேற்பட்ட புனித கங்கையில் கும்ப மேளா நேரத்தில் நீராடுவது கோடி புண்யத்தை அளிக்கும் .
பிரயாகைக்குச் செல்ல முடியாவிட்டால், கங்கா நதி ஓடும் இடமெல்லாம் மக்கள் நீராடுவர் .
முதல் நாளன்றே பிரயாகையில் ஒரு கோடிக்கு மேலானோர் நீராடினார்கள் ; இதுவரை எட்டு கோடி பேருக்கு மேல் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பர் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பல பிரமுகர்கள் புனித நீராடினார்கள் .
சங்க இலக்கியத்தில் கங்கையையும் இமயத்தையும் நிறைய இடங்களில் சங்க புலவர்கள் போற்றுகிறார்கள்; சிந்து நதி பற்றி எங்குமே குறிப்பு கிடையாது. கங்கை யமுனா இரண்டு நதிகளையே பாடினர்.
இந்த கும்பமேளா விழா மூலம், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலுள்ள பாரதீய ஜனதா கட்சி அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருவாயும் கிட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கணக்குப் போட்டுள்ளார்கள்.

கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்பட்டிருக்கும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைந்துள்ளது
மகா கும்பமேளாவின்போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்கும், ஆன்மாவை தூய்மைப்படுத்தும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலையாகி முக்தி அடைய உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மஹா கும்பமேளாவில் பங்கேற்க மூத்த குடிமக்களுக்கு இலவச யாத்திரை பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக கோடிக்கணக்கானோர் வருகை தருவதால் கழிவு மேலாண்மையை கையாள்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதற்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் பல்வேறு ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது.
நாளொன்றுக்கு 16 மில்லியன் லிட்டர் மனிதக் கழிவையும், 240 மில்லியன் லிட்டர் கழிவு நீரையும் கையாள்வது சாதாரண செயல் அல்ல. அந்த பணிக்காக இஸ்ரோ மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் இணைந்து உருவாக்கிய HYBRID GRANULAR SEQUENCING BATCH REACTOR என்ற சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.
மாபெரும் ஆன்மிக விழாக்களை தொழில்நுட்பங்கள் மூலம் எப்படி கையாள்வது என்பதற்கு உதாரணமாக மகாகும்பமேளா மாறியிருக்கிறது. கழிவு மேலாண்மையில் இந்திய தொழில்நுட்பங்கள் எந்தளவுக்கு பலன் தரும் என்பதை உலகுக்கு மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன மகாகும்பமேளாவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்.
உலக நாடுகள் அனைத்தும் இவ்வளவு பெரிய விழாவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்கள் எப்படி வெற்றிகரமாக நத்துகின்றனர் என்று மூக்கின் மேல் விரல் வைத்து வியந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக அராபிய, பாகிஸ்தானிய பத்திரிகைகள் இதில் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்துக்களின் மகத்தான சக்திக்கு கங்கா நதி ஒரு எடுத்துக்காட்டு. உலகிலேயே பழமையான புஸ்தகமான ரிக் வேதத்தில் முப்பது நதிகளைக் குறிப்பிடுகையில் கிழக்கிலுள்ள கங்கை நதியையே முதலில் வைத்துள்ளனர் .

தீபாவளி தினத்தன்று யார் எங்கு குளித்தாலும் அது கங்கா ஸ்னானத்துக்குச் சமம்; ஆகையால் அன்று காலை ஒருவரை ஒருவர் பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்பார்கள்
பெரும்பாலான இந்துக்கள் கங்கைச் சொம்புகளை வாங்கி சுவாமி அறையில் வைத்துக் கொள்கிறார்கள் இது இந்து பூஜைப் பொருட்களை விற்கும் எல்லா கடைகளிலும் கிடைக்கும். அதிலுள்ள கங்கை நீர் பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. உலகில் வேறு எந்த நதி நீருக்கும் இந்த சக்தி கிடையாது ; அந்தக் காலத்தில், வெள்ளைக்காரர்கள் கப்பல்களில் கங்கை நீரை ஏற்றிக்கொண்டுதான் இங்கிலாந்துக்குப் பயணமானார்கள்.
******
ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற பிரமுகரின் மனைவி லாரன்ஸ் போவெல் மஹா கும்பமேளாவில் கும்பமேளாவில் தீட்ச்சை பெற்று கமலா என்ற இந்துப் பெயரை பெற்றார் .
மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பாவெல் ஜாப்ஸ் திங்களன்று பிரயாக்ராஜ் வருகை தந்தார். அங்கே அவருக்கு சுவாமி கைலாசானந்த கிரி “கமலா” என பெயர் சூட்டினார்.
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும்,பிரபல தொழிலதிபருமான ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011-ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார்.

முன்னதாக வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் லாரென் பாவெல் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். உடல்நலக் குறைவு காரணமாக மகா கும்பமேளாவில் இருந்து 3 நாட்களில் பூடான் நாட்டுக்குச் சென்றார் .
****
ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நவி மும்பையில் உள்ள கார்கர் பகுதியில் கட்டப்பட்ட ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலாகும்.
பிறகு, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இஷ்கானின் முயற்சியால், ஆன்மிகம் மற்றும் அறிவுமிக்க மண்ணில் ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோவில் திறக்கப்பட்டது. இந்த கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தக் கோவிலில் பல்வேறு கடவுள்களின் சிலைகள் உள்ளன. இந்தக் கோவில், நாட்டின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கான புனித மையமாக திகழும் என்று நம்புகிறேன். குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பக்தர்களை தொடர்புபடுத்துவதே இதன் நோக்கமாகும். மஹாராஷ்டிரா மக்களுக்காக இந்த சிறப்புமிக்க பணிகளைச் செய்த இஸ்கான் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்
*****************************
கேரள பாடலாசிரியருக்கு ஹரிவராசனம் விருது
சபரிமலை: சபரிமலையில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது, பிரபல மலையாள பாடலாசிரியர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு வழங்கப்பட்டது.கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம் போடும் இணைந்து கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவித்து வருகின்றன.
2012-ல் யேசுதாசுக்கு இந்த விருது வழங்கி துவக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வீரமணி ராஜு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுசீலா, சித்ரா, கங்கை அமரன் உள்ளிட்ட ஏராளமான பாடகர்கள் இந்த விருதை பெற்றுள்ளனர்.
தொடர்ந்து 14வது ஆண்டு விருதாக சபரிமலையில் நேற்று கேரளாவை சேர்ந்த கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ள இவருக்கு வழங்கப்பட்டுள்ள ஹரிவராசனம் விருது நினைவு பரிசு, ஒரு லட்ச ரூபாய், பாராட்டு பத்திரம் ஆகியவை அடங்கியவை.
கேரள தேவசம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வாசன் இந்த விருதை வழங்கினார்.
****
சபரிமலை மகரஜோதி தரிசனம்! : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை பொன்னம்பலமேட்டில் காட்சியளித்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை ஒட்டி அய்யப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து பொன்னம்மபல மேட்டில் மகர ஜோதியாக சுவாமி அய்யப்பன் பக்தர்களுக்கு 3 முறை காட்சி அளித்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் “சுவாமியே சரணம் அய்யப்பா” என்று விண்ணதிர சரண கோஷம் முழங்கினர்
பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி மாலையில் சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம் போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் பெரிய நடை பந்தல் வழியாக சன்னிதானத்தை அடைந்தது.
தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினர்.
இந்த நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்தது. இதை பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி காட்சியளித்தது.
அப்போது சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். மகர ஜோதி தரிசனத்தில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
*****
பெங்களூரு லால்பாக் பூங்காவில் வால்மீகி மலர் கண்காட்சி
குடியரசு தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கிறது . இம்முறை கண்காட்சியில் ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷியின் வாழ்க்கை இடம் பெறுகிறது.
ராமாயணம் என்ற பெரும் காவியத்தை எழுதிய வால்மீகி மகரிஷியின். ராமாயண காவிய புத்தகத்தையும் பூக்களின் வடிவத்தில் பார்க்கலாம்..
பெங்களூரு லால்பாக் கண்ணாடி மாளிகையில்,
ஜன.16 முதல் 26 வரை கண்காட்சி நடக்கிறது.
புராண வனமான தண்டகாரண்யாவின் மலர் சித்தரிப்புகள் நட்சத்திர ஈர்ப்பாகும். 70 வகைகளில் 25 லட்சம் மலர்கள் இடம்பெறும் இந்த கண்காட்சியின் மொத்த பட்ஜெட் ரூ.2.5 கோடியாகும்.
11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் சுமார் 9 முதல் 10 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
*******
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம்
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-வதுநாள் தேரோட்டமும், 10-வது நாள் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து கனகசபை நகரில் உள்ள ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.. இதில் சந்திரசேகரர் தெப்பத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த பல ஆண்டுகளாக ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறாமல் இருந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு குளம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு ஞானபிரகாசம் குளத்தில் நடராஜர் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
*****
திருவையாறு தியாகராஜ ஆராதனை
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாறு என்றாலே ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழாதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி இவருக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த வருடம் ஸ்ரீ தியாகராஜர் 178ஆவது ஆராதனை விழா 14.01.2025 அன்று தொடங்கி, நேற்று சனிக்கிழமை நிறைவடைந்தது .
திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நேற்று 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்ட்டிருந்தார் முன்னதாக மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷணன் இந்த ஆண்டு விழாவினை 14ஆம் தேதி துவக்கி வைத்தார்..
ஆராதனை விழாவின் ஐந்தாம் நாளான சனிக்கிழமை ஸ்ரீ தியாகராஜர் சித்தியடைந்த தினமான பகுள பஞ்சமி அன்று காலை 8.30 மணிக்கு மங்கல இசை இசைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ஸ்ரீ தியாகய்யர் இயற்றிய ஐந்து பாடல்களை பாடினார்கள்.
இவை, ‘ஜெகதாநந்தகா’ என்னும் நாட்டை ராகப் பாடல், ‘
துடுகு கல’ என்னும் கௌள ராகப் பாடல்,
‘சாதிஞ்சனே’ என்னும் ஆரபி ராகப் பாடல்,
‘கனகன ருசிரா’ என்னும் வராளி ராகத்தில் அமைந்த பாடல்,
கடைசியாக ‘எந்தரோ மஹானுபாவுலு’ என்னும் ஸ்ரீராகப் பாடலாகும் .
இந்தஆராதனையை பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இந்த வருடம் கூடுதல் சிறப்பாக அவருக்கு இசை அஞ்சலி செலுத்திய முக்கிய இசை மேதைகளின் படங்களைக் கொண்ட தொகுப்பு, ‘எந்தரோ மகானுபாவுலு’ என்ற தலைப்பில் சிறப்பு அஞ்சல் அட்டை தொகுப்பாக வெளியாகி உள்ளது. இதில் 23 அஞ்சல் அட்டைகள் அங்கியுள்ளன.
***1
28 வயது துறவி சிவானந்தா பாபா : அனைத்து கும்பமேளாவிலும் பங்கேற்ற அதிசயம் – JANAM TV சிறப்பு தொகுப்பு!

கடந்த 100 ஆண்டுகளாக பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைன் மற்றும் ஹரித்வார் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு கும்பமேளாவிலும் 128 வயது துறவி சிவானந்தா பாபா கலந்து கொள்கிறார் அந்த அற்புதமான இந்து மத துறவியைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சுவாமி சிவானந்தா பாபா 1896-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி, சில்ஹெட் மாவட்டத்தில், ஒரு வங்காளி பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவ்வூரில் வாழ்ந்த பெரிய துறவியான தாகுர்பானியின் 10-வது வழித்தோன்றல் இவர்.
வைஷ்ணவர்களான பாபாவின் தந்தை ஸ்ரீநாத் கோஸ்வாமி மற்றும் தாயார் பகபதி தேவி
தங்களின் 4 வயதான மகனான சிவானந்தாவை, மேற்கு நவ த்வீப நகரில் வசித்து வந்த வைஷ்ணவ துறவியான ஓம்காரானந்த கோஸ்வாமியிடம் ஒப்படைத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு திரும்பிய அவர் பெற்றோரின் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்து விட்டு குருவின் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.
1925ம் ஆண்டு, குருஜியால் லண்டனுக்கு அனுப்பப்பட்ட சுவாமி சிவானந்த பாபாஜி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக 6-கண்டங்கள் முழுவதும் பயணித்தார்.
தனது குருஜியின் அழைப்பின் பெயரில் 1959-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அயராது சேவை செய்து வருகிறார்.
1979ஆம் ஆண்டிலிருந்து நிரந்தரமாக வாரணாசியில் வசித்து வருகிறார்.
128 வயதிலும், தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் யோகா, பிராணாயாமம், மற்றும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்கிறார்.
2019ம் ஆண்டு பெங்களூரு ஸ்டேடியத்தில் நடந்த உலக யோகா தின கொண்டாட்டத்தில் யோகாவை செய்து காட்டி, அனைவரையும் அசத்தினார். 2022ம் ஆண்டு, அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ வழங்கினார் .
இந்தியாவின் சொல்லப்படாத கதைகளின் 1000 திரைப்பட பயணத் தொடரில், சுவாமி சிவானந்த பாபாஜியை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நேர்காணல் செய்தார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டியது போல, பாபா சிவானந்தாவின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் தரும் என்பதில் ஐயமில்லை .
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு ,
ஜனவரி 26 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,
ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.
வணக்கம்.
—-subham—-
Tags- ஞானமயம் வழங்கும், உலக இந்து செய்தி மடல், 19-1-2025