WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,122
Date uploaded in Sydney, Australia – –21 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
19-1-2025 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஓளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
ஶ்ரீ வேதாந்த தேசிகர் – 2
13) ஸ்ரீ தேவநாயக பஞ்சாஷத்
53 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்துதியில் தேவநாதனைப்
போற்றுகிறார் தேசிகர். அடியார்க்கு மெய்யன் என்ற பெயர் கொண்ட இறைவன்
கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திபுரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து
வருகிறான். (திருவஹிந்திபுரம் என்றும் அழைக்கப்படும்) இந்த தலத்தில்
வேதாந்த தேசிகர் பல காலம் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த இல்லத்தை இங்கு
காணலாம். தேசிகர் வெட்டிய கிணறும் இங்கு உள்ளது.
14) ஸ்ரீ அச்சுத சதகம்
101 சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீ அச்சுத சதகம்
திருவயிந்திபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடும் நூலாகும்.
15) ஸ்ரீ மஹாவீர வைபவம்
உரைநடையிட்ட செய்யுள் நூலாக அமைந்திருக்கும் சம்ஸ்கிருத நூலான
இதில் 96 உரைநடை வரிகள் செய்யுளைக் காணலாம்.
பெரும் வீரனான ஸ்ரீ ராமரின் சரிதம் வால்மீகி ரிஷியால் ஏழு காண்டங்களில்
ராமாயணமாகத் தரப்பட்டுள்ளது. அதைச் சுருக்கமாக கம்பீரமான
வார்த்தைகளைத் தொடுத்து அழகுறத் தருகிறார் தேசிகர் இதில்.
இது ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படுகிறது
16) ஸ்ரீ கோபாலவிம்ஷதி
21 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கோபாலவிம்ஷதி.
திருவயிந்திபுரத்தில் பசுககளை மேய்க்கும் இடையனான
கோபாலகிருஷ்ணனின் கோவில் ஒன்று உள்ளது.
அந்த க்ருஷ்ணனின் லீலைகள் இந்தத் துதியில் புகழப்படுகிறது.
17) ஸ்ரீ தேஹாலிஷஸ்துதி
28 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ தேஹாலிஷஸ்துதி.
திருக்கோவலூர் திருத்தலத்தில் ஆயனார் என போற்றப்படும் த்ரிவிக்ரமன்
கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார். திருக்கோவலூர் என்பதை
சம்ஸ்கிருதத்தில் கோபபுரம் என வழங்குவர்.
இந்த இறைவனின் துதியே ஸ்ரீ தேஹாலிஷ ஸ்துதி.
19) பூ ஸ்துதி
33 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய பூ ஸ்துதி விஷ்ணு பத்னியான
பூமா தேவியைக் குறித்த துதியாகும்.
20) ஸ்ரீ கோதா ஸ்துதி
29 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீ கோதா ஸ்துதி சூடிக் கொடுத்த
சுடர்க்கொடியான ஆண்டாளைத் துதிக்கும் துதியாகும்.
வேதாந்த தேசிகர் பிரசித்தி பெற்ற தலமான ஸ்ரீ வில்லிப்புத்தூரை ஒரு நாள்
மாலை நேரத்தில் அடைந்தார். அன்று திரயோதசி தினம். மௌனமாக இருக்க
வேண்டிய தினம் அது. நரசிம்மரைத் தியானிக்க உகந்த நாள். ஆனால் அன்று
ஆண்டாளின் ஊர்வலம் ஒன்று கிளம்பி தேசிகரின் வீட்டு வழியே சென்றது.
அவ்வளவு தான். பரவசம் அடைந்த தேசிகர் தனது மௌனத்தை விட்டு விட்டு
ஸ்ரீ கோதா ஸ்துதியைப் பாடலானார்.
21) ந்யாச தசகம்
10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ந்யாச தசகம். இறைவனிடம்
சரணாகதி அடைந்த ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை
எடுத்துரைக்கிறது இது.
22) ந்யாச விம்ஷதி
22 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ந்யாச விம்ஷதி இதற்கு தேசிகரே
பாஷ்யம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
ப்ரபத்தி என்னும் சரணாகதியின் அங்கங்கள் ஐந்து;
1) அநுகூல்ய சங்கல்பம் : இறைவன் விரும்பியதைச் செய்வதாக முடிவு
எடுப்பது
2) ப்ரதிகூல்ய சங்கல்பம் : இறைவன் விரும்பாதவற்றைச் செய்யாமல்
இருப்பது
3) மஹா விஸ்வாஸம் : இறைவனின் மீது உறுதியான நம்பிக்கை
கொள்வது
4) கோப்த்ரித்வ வரணம் : இறைவனைப் பாதுகாவலான இருக்கக்
கோருவது
5) கார்பண்யம் : பூரண சௌமியமும் எளிமையும் கொள்வது
23) ந்யாசதிலகம்
32 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ந்யாசதிலகம். ப்ரபத்தி பற்றி தேசிகர்
இயற்றிய ஸ்தோத்திர நூல்களில் மூன்றாவதாக அமைவது இது.
(முதல் இரண்டு – ந்யாச தசகம், ந்யாச விம்ஷதி)
ஸ்ரீ ரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாதரை நோக்கி அமையும்
துதிப்பாடல்கள் இவை.
24) சுதர்சனாஷ்டகம்
8 + பலஸ்துதி, ஆக 9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய சுதர்சனாஷ்டகம்
மிகவும் பிரசித்தமான ஒன்று. விஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தை நோக்கி
செய்யப்படும் துதிகள் இவை. விஷ்ணுவின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில்
முதலாவதானது சுதர்சனம்.
கவிதை ஜாலங்களுடன் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மூலம் தேசிகர் இந்த
அஷ்டகத்தில் சுதர்சனரைப் போற்றுகிறார்.
திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தோரின் கொடிய ஜுரம் போக இந்த
அஷ்டகத்தை தேசிகர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு சாரார்
தேசிகர் வாதுக்குச் செல்லு முன் இதை இயற்றி வாதுக்குச் சென்றதாகவும்
மற்ற தத்துவங்களை முன்வைத்தோர் தோற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
25) ஷோடசாயுத ஸ்தோத்ரம்
19 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஷோடசாயுத ஸ்தோத்ரம். ஒரு
சமயம் திருப்புட்குழியில் வாழ்ந்தோர் கொடிய ஜுரம் ஒன்றினால்
பாதிக்கப்பட்டு வருந்த, அப்போது தேசிகர் இதை இயற்றி அவர்களின்
ஜுரத்தைப் போக்கடித்ததாகக் கூறப்படுகிறது.
26) ஸ்ரீ கருட தண்டக:
4 + 3 ஆக 7 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட தண்டகம்.
ஒரு சமயம் சர்வதந்த்ர சுதந்த்ர பட்டம் கொண்ட வேதாந்த தேசிகரை
பாம்பாட்டி ஒருவன் சவாலுக்கு அழைத்தான். தன்னால் கட்டவிழ்த்தப்படும்
பாம்பை அவரால் அடக்க முடியுமா என்று கேட்டான்.
உடனடியாக தேசிகர் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு கட்டுண்டது.
உடனடியாக ஒரு கருடன் வந்து அதைக் கொத்திக் கொண்டு போனது. இதைக்
கண்டு திடுக்கிட்டு வியந்த பாம்பாட்டி தேசிகரிடம் மன்னித்து அருளுமாறும்
அது ஒன்று தான் தன் பிழைப்புக்கான சாதனம் என்றும் வேண்ட தேசிகர்
இரக்கம் கொண்டு இந்த தண்டகத்தைப் பாட கருடன் திரும்பி வந்து பாம்பைக்
கீழே போட்டது.
27) ஸ்ரீ கருட பஞ்சாஷத்
52 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட பஞ்சாஷத்.
கருடரை தியானித்த தேசிகருக்கு கருடன் தரிசனம் தந்து ஹயக்ரீவ
மந்திரத்தை உபதேசித்தார்.
28) ஸ்ரீ யதிராஜ சப்ததி
74 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ யதிராஜ சப்ததி. இதில்
அனைத்து ஆசாரியர்களையும் குறிப்பிடுகிறார் தேசிகர். விஷ்ணுவில்
ஆரம்பித்து பெரிய நம்பியில் முடிக்கிறார்.
ராமானுஜரின் மஹத்தான அருமை பெருமைகள் தேசிகரால்
விரித்துரைக்கப்படுகின்றன.
இப்படி ஏராளமான தேசிகரின் பெருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. அவரை வணங்கிப் போற்றுவோம்.
நன்றி வணக்கம்.